செந்தில்குமரனின் அர்ப்பணிப்பு மகத்தானது

0
654

senthilஜெனிவாவில் தமிழ்த் தேசப்பற்றாளர் செந்தில்குமரன் தீக்குளித்து வீரச்சாவடைந்திருக்கிறார்.

இந்த மாதிரியான சாவுகளை ஊக்குவிக்க முடியாது. மிகவும் வருத்தத்திற்குரியதும் கூட.. ஆனாலும் அவரது அர்ப்பணிப்பு மகத்தானது என பிரான்ஸ் நாட்டை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் ஈழம் ஈ நியூஸ் இற்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் என்ன துயரம் என்றால், தனது சாவிற்கான காரணத்தையும் இந்த கேடுகெட்ட உலகத்தையும் ஐநாவையும் விளித்து – தமிழ் மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்றும் விளித்து எழுதிய துண்டு பிரசுரங்களை கைப்பற்றிய சுவிஸ் காவல்துறை அதை வெளியிட மறுத்து வருகிறது. சுவிஸ் வாழ் தமிழர்கள் உடனடியாக சாத்தியமான வழிகளில் போராடி அந்த ஈகியின் மரண சாசனத்தை வெளிக்கொணர வேண்டும்.

முத்துக்குமார் மற்றும் முருகதாசனின் மரண சாசனங்களைப் போல் இதுவும் தமிழ் இன அழிப்பு குறித்த ஒரு வரலாற்று ஆவணமாகும்.

மேலும், அவர் தீக்குளிப்பதற்கு முன்பு தனது தந்தையிடம் கூறிய இறுதி வார்த்தைகளான “தமிழீழம் மலரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ” என்ற கோசத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற நாம் ஒன்று பட்டு உழைப்பதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது உயிரைத் தியாகம் செய்த செந்தில்குமாரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகம் எங்கும் இடம்பெற்று வருகின்றன.

வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் சாம்பலின் மீதொரு சத்தியம்

தமிழர் வாழ்வுக்காய் ஐநா சபை முன்றலில் தனது இன்னுயிரை ஈகம் செய்த வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தனது வீரவணக்கத்தை இத்துடன் தெரிவிக்கின்றது.

தாய்நிலம் மீதான தணியாத தாகத்தால் ராஜதந்திரமுச்சந்தியில் தீமூட்டி எரிந்த எமது உறவை நெஞ்சில் சுமந்து எதிர்வரும் 16.09.2013 அன்று ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் இன அழிப்புக்கு நீதி கோரும் பேரணியில் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழ் அனைவரும் அணிதிரள இத்துடன் அழைப்புவிடுக்கின்றோம். ஐநா மனிதவுரிமை சபை அமர்வுகள் நடைபெறும் நாட்களில் கண்ணீர் சிந்துவதற்கான காலமல்ல.தொடரும் கண்ணீர் வாழ்க்கையை நிறுத்துவதற்காக சிந்திக்க வேண்டிய நேரம்

யேர்மன் அனைத்து மாநிலங்களிலும் பிரையாண ஒழுங்குகள் தாய் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுளது.

இத்துடன் யேர்மனியில் பல நகரங்களில் தனது இன்னுயிரை ஈகம் செய்த வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கான வணக்க நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

சுடர் ஏற்றி வணக்கம் செலுத்திய மறுகணமே அவர்களின் லெட்சியம் நிறைவேற போராடுவோம்!

வெல்லும் வரை போராடுவோம்.

அடிமை வாழ்வு அடங்கிடும் வரை போராடுவோம்.

விடுதலைக்கான தடைகள் விலகும் வரை போராடுவோம்.

சுதந்திரத்தை அடையும் வரை போராடுவோம்.

வீரத்தமிழ்மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் குடும்பத்துடனும் உறவுகளுடனும் இத் தருணத்தில் அன்போடு நாம் இணைத்து நிற்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்த உறவு

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே!

உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புலம்பெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த பொழுதும் தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக தீக்குளித்து இறந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு தமிழ் உறவுகளுடன் இணைந்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் இழப்பால் துயருடன் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மனித உரிமை கூட்டத் தொடர் சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையின் நிலமை குறித்து ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார் என்பது பலரும் அறிந்த விடையமே. ஆனால் நவநீதம்பிள்ளை அவர்கள் சமர்பிக்கும் அறிக்கையால் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு சிறிது நன்மை வரலாம் அல்லது பாதிப்பும் உண்டாகலாம்.

ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட எமது போராட்டத்துக்கு பாதிப்பு வருகையில் அதை தகர்க்க கூடிய சக்தியாக திகழ்வது தமிழர்களின் ஒற்றுமையே. ஆகையால் எமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கேட்பதற்காக எதிர் வரும் 16.09.2013 அன்று சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

எமது அன்பான தமிழ் உறவுகளே! ஆயிரமாயிரம் மாவீரர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும் தமிழன் என்ற உணர்வுடன் இம் மாபெரும் எழுச்சிப்போராட்டத்தில் அலையலையாய் அணிதிரளுமாறு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு உரிமையுடன் வேண்டுகின்றது.

மேலும் சுவிஸ் மண்ணில் தீக்குளித்து இறந்த தமிழ்த் தேசிய உணர்வாளரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் தியாகம் வீண் போகாமல் ஓர் உன்னத நிலையை அடைய நாம் அனைவரும் கைகொடுக்க வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

www.facebook.com/TamilYouthOrganisationGermany

தமிழ்த் தேசப்பற்றாளர் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எமது அன்பிற்குரிய ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளே…!

05.09.2013 வியாழக்கிழமை அன்று தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு யெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தமிழ்த் தேசப்பற்றாளர் ஒருவர் தன்னையே உயிர்த்தியாகம் செய்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தினை ஏந்தியவாறு சென்று தமிழ்மக்களின் விடியலுக்கு ஆதரவாக முழக்கமிட்டு, பின்னர் தீயினில் தன்னையே ஆகுதியாக்கியுள்ளார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் முகமாகவும், அவரின் அளப்பரிய உயிர்த்தியாகத்திற்கு மதிப்பளித்தும் ஐரோப்பா எங்கும் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில், சொலர்தூன் மாநிலத்தில் அனைத்துலக ரீதியில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி நிகழ்வானது சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய எம்மாலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை உத்தியோகபூர்வமாக அறியத்தருகின்றோம்.

தமிழ்த் தேசப்பற்றாளராகிய இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவுகளைச் சுழந்தும், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் 16.09.2013 திங்கட்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 17:00 மணி வரை நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் கலந்து கொண்டு அனைத்துலக சமூகத்திடம் நீதிகேட்க அனைத்து தமிழ் உறவுகளையும் குறிப்பாக இளந்தலைமுறையினர் அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்த் தேசப்பற்றாளர் அவர்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துவதோடு கண்ணீர் வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்“

நன்றி

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு