சென்னையில் ஐநா அலுவலகம் மாணவர்கள் முற்றுகை. ஐ.நா. வின் கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டது.

0
259

un-protest-chennai2சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகத்தில் சுமார் 20 மாணவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து அலுவலகத்தை உள்ளிருந்து பூட்டு போட்டனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ஐ.நா. பதில் சொல்லும் வகையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வே ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டனர் மாணவர்கள்.

சர்வதேச நாடுகள் இலங்கையை காப்பாற்றவே பல்வேறு தீர்மானங்களை கொண்டு வரும் நிலையில் , ஐநா மன்றமே இலங்கைக்கு எதிராக ஒரு வலுவான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இலங்கையின் மீது சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை, தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஆகியவற்றை ஐ.நா. மன்றம் எதிர்வரும் கூட்டத் தொடரில் முன்மொழிய வேண்டும் என மாணவர்கள் கேட்டுள்ளனர். மேலும் ஐ.நா அலுவலகத்தில் பட்டொளி வீசிப் பறந்த ஐ.நா வின் கொடியை மாணவர்கள் கீழே இறக்கி அதை கிழித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

protest-un-tn
சுமார் இரண்டு மணிநேரம் ஐநா அலுவலகத்தை மாணவர்கள் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தனர். ஐ.நா. அலுவலக அதிகாரிகளும் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்பு காவல்துறையினர் பூட்டை உடைத்து அலுவலகம் உள்ளே நுழைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் ஐ.நா. வே முன்வந்து இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கியது ஐ.நாவிற்கு அதிர்ச்சியை தந்துள்ள நிகழ்வாகும். துணிச்சலாக யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாணவர்கள் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டனர் . இதன் மூலம் நிச்சயம் தமிழர்களின் நியாயமான கோபம் ஐ.நா அவைக்கு கொண்டு செல்லப்படும்.