எந்த வருடமும் இல்லாமல் இது தமிழர்களுக்கு சிறப்பான பொங்கல். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உலக தமிழர்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வைத்த பெருமை கொண்ட தை மாதமிது.

 

ஹிப் பாப் தமிழா, ஆர்ஜே பாலாஜி என ஒரு நாகரீக சமுதாயத்தில் வாழ்பவர்களும், காங்கேயம் காளை வளர்க்கும் நாட்டு தமிழனும் அறிவியல் பூர்வமாக பகுத்தாய்ந்து ஒரே கருத்தாக உலகிற்கு சொன்னார்கள்.

 

மேலை நாடுகளில் தமிழன் என்று காட்டிக்கொள்ள தயங்கியவர்களும் பெருமையாக ஜல்லிக்கட்டு வாசகங்களை தூக்கி சுமந்தனர். இது எங்கள் பாரம்பரியம் என வாரி அணைத்துக்கொண்டனர்.

 

நடிகர்கள்,அரசியல்வாதிகளின் கருத்து மக்களின் உணர்வுகளை தீர்மானித்த நிலை மாறி மக்களின் அறச்சீற்றம் நடிகர்களின் கருத்தை தீர்மானித்த காலகட்டமும் இதுவாகவே இருக்கும்.

 

இப்போது ஜல்லிக்கட்டு காலம் என்பதால் சில நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்கும் வேறு டாபிக் கிடைத்ததும் அதை பேச துவங்கிவிடுவார்கள் எனும் கருத்து நிலவுகிறது. அதை மறுப்பதிற்கில்லை.

 

ஆனாலும் இத்தனை நாள் நடந்த போராட்டங்களில் இல்லாத எழுச்சி இதில் உள்ளது என்பதற்கு சென்னை மெரீனா பேரணியில் துவங்கி இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நிற்பவர்களே ஆதாரம்.

 

நேற்று பரமக்குடியில் இருசக்கர வாகன பேரணியில் எங்களுடன் இணைந்து சாலையில் நின்றவர்களும் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பினர். அதாவது மக்கள் இனத்திற்கு பயனுள்ள வாழ்க்கை வாழ தயாராகிவிட்டனர்.

 

ஒரு முக்கியமான விளையாட்டு போட்டியின் தோல்விக்கு பிறகு அதில் நாம் செய்த தவறுகள், எதிரணி வீரர்கள் ஆகியவை நம் கண்முன் வந்து நம்மை தூங்கவிடாது. அடுத்து வரும் நாட்களில் சரியாக விளையாட உதவும்.

 

இப்போது ஒரு அணியாக சிந்திப்பது போல இனமாக சிந்தியுங்கள். இதில் நாம் சந்தித்த சவால்களை யோசியுங்கள். இனி பெப்சி,கோக்கை பார்க்கும்போதும், பீட்டா, மேனகா காந்தி, சுப்பிரமணிய சாமி பெயரை கேட்கும் போதெல்லாம் இது நினைவில் வர வேண்டும்.

 

நம்மால் உடனடியாக உணவு முறையை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் செக்கு எண்ணெயும், இயற்கை உணவையும், A2 பாலையும் பழக்குங்கள். இதற்கான செலவு மருத்துவ செலவை விட குறைவாகவே வரும்.

 

அடுத்த தலைமுறைக்கான இயற்கை வளங்களை பாதுகாத்திடுங்கள். நமக்கு எதிரான இன அரசியலை சொல்லி கொடுங்கள். உலக அரசியலை பரீட்சையபடுத்துங்கள். ரௌத்திரம் பழக்குங்கள்.

 

யூதர்களை விட நாம் இழந்தது குறைவு தான். இனி இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஜல்லிக்கட்டு காளை போல தான். அறிவெனும் வாடிவாசலை திறந்துவிடுங்கள். அது உலகை ஆள சீறிப்பாயட்டும்..!

 

பூபதி முருகேஸ்