ஜெனிவா என்றால், ஏதோ தற்போதைய விடயம் போன்ற ஒரு தோற்றப்பாடு பலருக்கும் எழலாம். ஆனால் ஜெனிவாவுக்கும் ஈழத்தமிழர் விவகாரத்திற்கும் 15 ஆண்டுகளுக்கு மேலான பல பின்புலங்கள் உண்டு. தமிழர் அரசியல் விவகாரக்குழு பல நாடுகளின் அரசியல் அமைப்பு முறைகளை, குறிப்பாக அதிகாரப் பரவலாக்கம் குறித்து பல நாடுகளில் ஆய்வுக்குட்படுத்திய போது அதில் சுவிற்சலாந்தும் உள்ளடக்கப்பட்டதும், அப்பயணம் 2004 ஏப்ரிலில் ஜெனிவா உட்பட சுவிற்சலாந்தில் அமைந்தது. 2003 பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரச சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்ததைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைக்கும் முயற்சியில் இடைக்கால சுயாதீன நிர்வாக அலகு ஒன்றிற்கான, தமிழர் தரப்பு அதிகாரங்களடங்கிய அதிகார அலகு ஆவணத்தை, 2004 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஜெனிவாவில் வைத்தே தமிழர் தரப்பு அரசியலமைப்பு வரைபு நிபுணர்கள் வரைந்தார்கள்.

 

இதன் தொடர்ச்சியாகவே சற்று ஓய்வின் பின், மீண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீண்டும் கலந்து கொண்ட முக்கிய சந்திப்புகள் 2004 ஒக்டோபர் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்றன. இவ்வாறே மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும், இறுதியுமாக 2006 பெப்பிரவரி 22 மற்றும் 23 ஆம் நாட்களிளும், பின்னர் ஜெனீவா 2 ஒக்டோபர் 28ஆம் நாளும், இதே ஜெனிவாவிலேயே நடைபெற்றன. இவற்றைக் கடந்தும் பல சந்திப்புக்கள், பல பல்தரப்பு கூட்டங்கள், ஆய்வரங்கங்கள் என ஈழத்தமிழர்கள் 2008வரை சுற்றிச் சுழன்ற இடம் தான் ஜெனிவா.

 

தற்போதைய ஜெனீவாத் தீர்மானம், 2015 முதலான விடயம் என்ற ஒரு தோற்றப்பாடு வேறு இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் அவ்வாண்டின் இறுதியிலேயே சிறீலங்கா அரசு தரப்பு விரைந்து தன்னைப் புகழ்பாடும் ஒரு தீர்மானத்தை இதே ஜ.நா மனித உரிமைகள் அவையத்தில் நிறைவேற்றி மகிழ்ந்தது என்பது பலருக்கும் மறந்துபோன விடயம் இன்று. இதன் பின்னரான காலம் மாற ஆரம்பித்த போது, அப்போது அவ்வுலக மாற்றத்தை பெரிதும் பிரதிபலிக்க முயன்ற கனடிய அரசு சார்பில் அப்போதைய கன்சவேட்டிவ் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் அவர்கள், 2011 மார்ச் மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரதமர் காப்பரின் அனுசணையுடன், கனடிய அரசின் முன்முயற்சியில் சிறீலங்காவிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை கொண்டுவர முயற்சி செய்தார். அதற்கான முழுமையான ஆதரவை திரட்டுவதில் ஏற்ப்பட்ட தாமதம் காரணமாக அவ்வாணடில் அவ்வாறான முயற்சி முழுமையாக ஒன்றுகூடவில்லை என்றாலும், அதுவே 2012இல் அமெரிக்காவுடன் கனடாவும் ஏனையவர்களை இணைத்து, கொண்டு வந்த முதல் தீர்மானத்திற்கு வழிகோழியது.

 

அதுமட்டுமன்றி அதற்கான வாக்களிப்பு ஆதரவைத் திரட்டும் முகமாக, கனடிய அரசின் ஏற்ப்பாட்டில், ஜெனிவா கனடியத் தூதுவரின் வழிநடத்தலில், 14 வாக்களிக்கும் தகுதி பெற்ற ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தூதுவர்கள் ஒரு கனடிய விருந்துபசாரத்தில், இதற்கென பிரத்தியோகமாக ஜெனிவாவில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜ.நா நிபுணர் ஜஸ்மின் சூக்காவினால் சிறீலங்கா விவகாரம் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு, அவர்களின் வாக்குகள் அப்போது உறுதி செய்யப்பட்டன.

 

இவ்வாறு நகர்ந்த செயற்பாடுகளுக்கு, அப்போதைய ராஜபக்க அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இந்நிலையிலேயே தமது ஆதரவு அரசொன்றை கொழும்பில் நிறுவ முயன்ற அமெரிக்க முயற்சி, ஈற்றில் முதலில் 2015 சனவரி சனாதிபதி தேர்தலினூடாக மைத்திரியை ஆட்சியில் அமர்த்தியதூடாகவும், பின்னா 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலினூடாக ரணிலை பிரதமராக அமர்த்தியதூடாவும், முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாகவே 2015இ செப்டம்பர் ஒக்டோபரில் நடைபெற்ற 30ஆவது கூட்டத்தொடரில், ரணில் தலைமையிலான சிறீலங்கா அரசையும் இணைத்து, அதாவது முதற்கடவையாக சிறீலங்காவும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனாலேயே அது 30-1 தீர்மானம் என அழைக்கப்படுகிறது. இங்கு 30 என்பது கூட்டத்தொடரைக் குறிக்கும். அதில் கூட சிறீலங்கா குறித்த முன்னைய தீர்மானங்கள் முதலிலேயே குறிப்பிட்ப்பட்டிருந்து. அதில் 2012 மார்ச் மாத 19-2 தீர்மானம், 2013 மார்ச் மாத 22-1 தீர்மானம், 2014 மார்ச் மாத 25-1 தீர்மானம் என்பன பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தன.

 

Recalling Human Rights Council resolutions 19/2 of 22 March 2012, 22/1 of 21 March 2013 and 25/1 of 27 March 2014.

இதன் தொடர்சியாக 2015 இல் அமைந்த 30-1 தீர்மானம் குறித்து, பின்னர் 2017 மார்ச் கூட்டத்தொடரில், மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கி கொண்டுவரப்பட்ட 34-1 தீர்மானத்தில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்நது, Reaffirming Human Rights Council resolution 30/1 of 1 October 2015 on promoting reconciliation, accountability and human rights in Sri Lanka.

 

இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடைபெறும் 40ஆவது கூட்டத்தொடரில் 40-1 தீர்மானம் மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கி உருவாகியிருக்கிறது. ஆக இன்னும் இரண்டு ஆண்டுகளின் பின் 2021 மார்ச் மாதம் வரக்கூடிய தீர்மானம் 46-1 ஆக இருக்கும் என்பது மட்டும் தற்போது உங்களுக்கு துல்லியமாக புரிந்திருக்கும்.

 

ஆகமொத்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான பரிகார நீதி வேண்டிய காலம் ஈழத் தமிழர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகிறதென்றால், ஜெனீவா ஜ.நா மனித உரிமைகள் அவையில் ஆண்டொன்றுக்கு 2012, 2013, 2014 என நிறைவேறிய தீர்மானங்கள், தமக்கு ஆதரவான அனுசரணையாக அரசு அமைந்ததுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகியுள்ளது மட்டுமல்ல, 19-2, 22-1, 25-1, 30-1, 34-1, 40-1, என ஆறு தீர்மானங்கள், 7 ஆண்டுகள் கழிந்தும் பரிகார நீதியை பெற்றுக் கொடுப்பதில் மனித உரிமைகள் அவையம் எங்கிருக்கிறது என்பது தான் பெரும் கேள்வி?

 

இந்நிலைக்கு ஜ.நா மனித உரிமைகள் அவையம் மட்டுமல்ல, இதன் பிரதான வகிபாக நாடுகள் மட்டுமல்ல, அதற்கு இணையாக ஈழத்தமிழர் செயற்பாட்டு அங்கங்களும் பொறுப்பு என்பதே உண்மை நிலையாகும். எந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் வலிகளை துமந்து நிற்கின்றோம் என்கிறோமோ, அவ்விடயத்தில் எம்மக்களுக்கும் நாம் உண்மையாக இல்லை. அதேவேளை இந்த சர்வதேச பொறிமுறையை, அது எம்மை ஏமாற்ற இடம் அளியாமல், எதிர்கொள்ளும் வலுவையும், வல்மையையும் அறிந்து, ஆய்ந்து, வளர்த்து, வலுப்படுத்திக் கொள்ளும் நிலையிலும், நாம் இன்றுவரை இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். வரலாறு என்பது பல பாடங்களை நம் முன்னே விரித்து வைக்கிறது. அதில் இருந்து பாடங்களைக் கற்று, தன் வழியை முன்கூட்டியே சிறப்பாக செப்பனிட்டுக் கொள்பவர்களே, உலகில் சாதிக்கிறார்கள். அதுவே தமிழர் தேசியத் தலைமை, ஈழத்தமிழினத்திற்கு ஒரு வீரவரலாற்றின் ஊடாக, கற்றுத்ததந்த பாடமாகச் சொல்லலாம்.

 

இந்த வகையில், தற்போது நடந்து முடிந்துள்ள 40ஆவது ஜ.நா மனித உரிமைகள் அவையத்தின் கூட்டத்தொடரில், பேசப்பட்ட விடயங்கள், நடந்தேறிய சம்பவங்கள் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், 2014 மார்ச் கூட்டத்தொடரில் 25-1 தீர்மானத்தில் தெரிவிக்கப்பட் விடயங்கள், சிலவற்றை கவனத்தில் கொள்வோம். அதில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானக் குற்றங்களில் தொடர்புடைய படையினர் குறித்து, அதீத கவனம் செலுத்துமாறு ஜ.நாவும், அங்கத்துவ நாடுகளும் வேண்டப்பட்டிருந்தன. ஆனால் இவ்விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கே நிலவுகிறது. அது குறித்த பட்டியலை தயாரிப்பதுவும், அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு, அதனூடாக தாக்கத்தை ஏற்ப்படுத்தல், ஆகியவை ஈழத்தமிழர்களாகிய எம்மிடமுமே உண்டு. இதற்கான எத்தகைய வேலைத்திட்டம்? மற்றும் பட்டியல் எம்மிடம் உண்டு. ஆனால் எம்மைக் கடந்து இதற்கான முயற்சியில் ஜஸ்மின் சூக்கா போன்றவர்கள் உள்ளார்கள் என்பதுவும் உண்மை. அது குறித்து 2014ஆம் ஆண்டுத் தீர்மானம் இவ்வாறு தெரிவிக்கிறது,

 

The High Commissioner recommends that the United Nations system and Member States: (b) Apply stringent vetting procedures to Sri Lankan police and military personnel identified for peacekeeping, military exchanges and training programmes;

 

இதுதவிர, தற்போது முக்கியமாக பேசப்படுகின்ற விடயம், சிறீலங்கா அரசு குற்றம் புரிந்தவர்கள் விடயத்தில் விசாரணை முன்னெடுப்புகளை புறம்தள்ளி வரும் நிலையில், அவ்வாறான முனைப்பை சர்வதேச பொறிமுறையில், சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளலாம் என்ற விடயம். இதில் கூட இவ்விடயம் 2017 இல், அப்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சையட் குசேயினால், குறிப்பிடப்பட்ட விடயம் என்று எம்மால் தொடர்ந்தும் பரவலான பேசப்படுகிறது. ஆனால் நவநீதம்பிள்ளை அவர்கள் ஆணையளராக இருந்தபோது, 2014 மார்ச் இல், கொண்டுவரப்பட்ட 25-1 தீர்மானத்தில், உறுப்பு நாடுகளுக்கு மேலும் கூறப்படுவதாவது,

 

(c) Wherever possible, in particular under universal jurisdiction, investigate and prosecute those responsible for such violations as torture, war crimes and crimes against humanity;

 

அதாவது சிறீலங்காவிலான பொறிமுறைகளைக் கடந்து, சமகால போர்குற்ற மற்றும் மனிதாபிமானக் குற்றங்களுக்கான, சர்வதேச நாடுகளிலான பொறிமுறைகளையும் வலியுறுத்தி, 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுகுறித்தும், இதன் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்தும், எம் முன்னெடுப்புகள் என்ன?

 

இம்முறை மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையில், 2016 இற்கும் 2018 இற்கும் இடையிலான காலப்பகுதியில், ஆண்கள் மற்றும் பெண்கள், சட்டவிரோத ஆட்கடத்தல், தடுத்துவைப்பு, சித்தரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு சிறீலங்கா பாதுகாப்புப் படைகளால் ஆளானமை குறித்த ஆதாரபூர்வ விபரங்கள், தொடாச்சியாக கிடைக்கப் பெற்றுவருகின்றன. இது குறித்து உடனடி, தாக்கமுள்ள, வெளிப்படையான, சுயாதீன, பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் மேல் குறித்த சம்பவங்கள் குறித்த, இன்றுவரை எவ்வித விசாரணை முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறது. இவ்வாண்டு அறிக்கையின் அப்பகுதி வருமாறு,

 

56. OHCHR has continued to receive credible information about cases of abduction, unlawful detention, torture and sexual violence by Sri Lanka security forces, which allegedly took place in 2016 to 2018. A preliminary assessment of the information received indicates that there are reasonable grounds to believe that accounts of unlawful abductions and detention and of torture, including incidents of sexual violence against men and women, are credible, and that such practices might be continuing in northern Sri Lanka. Such allegations should be the subject of prompt, effective, transparent, independent and impartial investigations. In the past, the Government has condemned any act of torture, and indicated that any allegation of torture would be properly investigated and prosecuted. OHCHR is not aware of any investigations undertaken to date into the above-mentioned allegations.

 

அதாவது சம காலப்பகுதியிலேயே நடைபெறும் பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களை விசாரிக்க மறுக்கும் அரசா?, 10 ஆண்டுகளுக்கு முந்திய விடயங்ளை ;விசாரிக்கப் போகிறது?, என்ற கேள்வியை கேட்க வேண்டியவர்கள் யார்? கேட்டோமா நாம்? அல்லது இனிமேலாவது கேட்கப்போகிறோமா? அல்லது அடுத்த இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, அதாவது 2021வரை மேலும் வதைகளுக்கு எம்மக்கள் உள்ளாக நாமே அனுமதிக்கப் போகிறோமா?

 

ஆனால் 2014 மார்ச் தீர்மானம் 25-1 இலேயே, உறுப்பு நாடுகளுக்கு இவ்விடயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்று பார்த்தோமேயானால், இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, அவர்களுடையது என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அது வருமாறு,

 

(d) Ensure a policy of non-refoulement of Tamils who have suffered torture and other human rights violations until guarantees of non-recurrence are sufficient to ensure that they will not be subject to further abuse, in particular torture and sexual violence;

 

அதாவது அவர்களுக்கு வழங்கப்பட்ட சமகாலப் பொறுப்புகளிலேயே, மோசமான அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. அது குறித்த அவர்கள் நடவடிக்கையை வலியுறுத்த வேண்டியவர்கள் யார்?புலம்பெயர்ந்து இந்நாடுகளில் வாழும் நாமா?. அல்லது தாயக உறவுகளா?. இதற்கான முதன்மை வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டிய, தாயக அரசியல் தலைமைகளின் வகிபாகத்தில் அவர்கள் எங்கிருக்கிறார்கள்?. இவ்வாறு தான் இவ்வருட மனித உரிமைகள் கூட்டத்தொடரும், அதிலான சிறீலங்கா குறித்த விடயமும். அதிலான ஈழத்தமிழருக்கான பரிகார நீதியும், அல்லலாடுகின்ற பட்டமாக அங்கும், இங்குமாக, நலன்சார்ந்த உலகின் காற்றின் போக்கிற்கேற்ப அல்லாடுகிறது.

 

இதை நிலைப்டுத்தி, அதன் இருப்பையும், அதற்கான வலுவையும், தக்கவைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழினத்திடமே இருக்கிறது. சிறுகுழந்தை கூட தனக்கு பசிக்கும் போது, அழுது அம்;மாவை யழைத்து, தனது பசியையாற்றிக் கொள்கிறது. எமக்கு வேண்டியதை நாமே முறைப்படுத்தி, அதனை வளப்படுத்தி, வலுப்படுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் நாமே தவறிழைப்போமேயானால், எமக்கான பரிகார நீதி வெறும் கானல் நீராகிவிடும், என்பதே ஜெனிவா மீண்டும், மீண்டும் வலியுறுத்தும் செய்தியாகும்.

 

நன்றி: நேரு குணரட்னம்