டேவிட் கமரனிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன?

0
675

david-camoranசிறீலங்காவில் இடம்பெற்ற போர் 2009 ஆம் ஆண்டு பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுடன் நிறைவடைந்த பின்னர் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் கூடிய (Permanent People’s Tribunal) நிரந்தர மக்கள் நீதிமன்றம் தனது கூட்டத்தொடரில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சாட்சியங்கள் திரட்டப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முன்வந்து சாட்சியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையும், சிறீலங்காவுக்கு கொடைவழங்கிய நாடுகளும், அனைத்துலக சமூகமும் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சுயாதீன விசரணையை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கொடூரமான போர் பல பத்தாயிரம் தமிழ் மக்களின் படுகொலையுடன் நிறைவடைந்த சில மாதங்களே ஆன நிலையில் அன்று அதிக சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறுபட்டது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் இருந்து உயிர்தப்பிய மற்றும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட பல சாட்சியங்கள் அனைத்துலக நாடுகளை சென்றடைந்துள்ளதுடன், தமக்கும், தமது உறவுகளுக்கும் ஏற்பட்ட அவலங்கள் குறித்த சாட்சியங்களை உலகின் முன்னனி ஊடகங்களின் முன்பும், மனித உரிமை அமைப்புக்களிடமும் தமிழ் மக்கள் கூறிவருகின்றனர்.

அதனை பிரித்தானியாவின் சனல்போர் தொலைக்காட்சி நிறுவனமும், பி.பி.சி நிறுவனமும் கடந்த மாதம் ஒளிபரப்பியிருந்தன. அது மட்டுமல்லாது, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசினால் கூறப்பட்ட இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் கைதுசெய்வதையும், அதன் பின்னர் அவர் இறந்துகிடக்கும் காட்சிகளையும் இந்த ஊடகங்கள் உலகின் முன்கொண்டுவந்திருந்தன.

சிறீலங்காவில் இடம்பெற்றது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பதுடன் திட்டமிட்ட படுகொலைகள் மூலம் அங்கு மிகப்பெரும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதும் தற்போது தெளிவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அனர்த்தங்களை நேரில் கண்டதுடன், சாட்சியங்களையும் நேரில் சந்தித்திருந்தார்.

2010 ஆம் ஆண்டு அயர்லாந்தில் இடம்பெற்ற மக்கள் நிரந்தர நீதிமன்றத்தின் அமர்வின் போது இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலைமுற்றிலும் மாறுபட்டது.

சிறீலங்காவில் ஒரு இனஅழிப்பு நடைபெற்றுள்ளது, அது தற்போதும் தொடர்கின்றது என்பதற்கான சான்றுகள் தெளிவாக உள்ளபோதும் கடந்த மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்கவில்லை என்பது வருத்தமானது.

எனினும் தனது வரலாற்று தவறை மறைப்பதற்காக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரன் வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களை நேரில் சந்தித்ததுடன், சிறீலங்கா அரசு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும் எனவும், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணையை கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவனீதம்பிள்ளையும் இதனை ஒத்த ஒரு காலக்கெடுவையே சிறீலங்கா அரசுக்கு விதித்திருந்தார். பிரித்தானியா தற்போதுள்ள தனது நிலையில் இருந்து குத்துக்கரணம் போடாது இருந்தால் சிறீலங்கா மீதான ஒரு அனைத்துலக விசாரணையை கொண்டுவரும் நிலையில் நாம் கணிசமான வெற்றியை பெற்றுவிடலாம்.

பிரித்தானியாவை பொறுத்தவரையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் தனது நட்புநாடுகளை தான் கோரும் தீர்மானத்தற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கமுடியும் என்பதுடன், அமெரிக்காவின் உதவியுடன் ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் அதனை நகர்த்த முடியும்.

சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்த கனடா மற்றும் மொரீசியஸ் போன்ற நாடுகள் அதற்கு அதரவு வழங்கும். தமிழகத்தின் அரசியல் அழுத்தம் மூலம் இந்தியாவின் நகர்வை கட்டுப்படுத்தலாம்.

பிரித்தானியா செய்யவேண்டியது ஒன்று மட்டும் தான் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். அதனை தான் தமிழ் மக்கள் கமரனிடம் முதற்கட்டமாக எதிர்பார்க்கின்றனர்.

ஈழம்ஈநியூஸ்.