ட்ரோஜன் குதிரையின் பிரவேசம் – அயோக்கியத்தனத்தினை புரிந்து கொள்வது எப்படி? — திருமுருகன் காந்தி

0
596

war-3போர்க்குற்ற விசாரணை இலங்கை-புலிகள் என இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டும் என தீர்மானத்தினாலும், பல்வேறு என்.ஜி.ஓ மனித உரிமை நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகிறது. இதனால் நிகழப்போவது என்ன?

1) இலங்கை தரப்பு: இலங்கையின் ராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ராஜதந்திர பாதுகாப்புடன் –தூதுவர்களாக, ஐ.நா அதிகாரிகளாக இருக்கின்ற காரணத்தினால் இரண்டாம்,-மூன்றாம் கட்ட அதிகாரிகளே விசாரிக்கப்படலாம். இக்குற்றவாளிகளும் இலங்கை அரசினாலும், இந்திய-அமெரிக்க அரசினாலும் பாதுகாக்கப்படுவார்கள். இவ்விசாரணையின் கால அளவு பிற நாடுகளில் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 15 முதல் 20 ஆண்டுகள் குறைந்தபட்சம் எடுத்துக்கொள்ளும்.

2) தமிழர் தரப்பு: புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று போர்கைதிகளாக இருப்பவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள், இலங்கையை விட்டு வெளியேறியவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப் படுவார்கள். இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் அதிகாரம் கொண்ட எந்த ஒரு நிறுவனமும், அரசும் இல்லாமல் ஒவ்வொரு நாடுகளும் விசாரணை என்கிற பெயரில் வேட்டையாடப்படுவார்கள். தற்பொழுது 32 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு பல நாடுகளில் தடைசெய்யப்படுகின்ற அமைப்பினைப் போன்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு தமிழீழவிடுதலையை நோக்கி நகருகின்ற நமது போராட்ட பாதையை பின்னுக்கு தள்ளுவார்கள்.

புலிகளும், ஈழமும் திரும்ப எழக்கூடாது என்பதே இவர்களது எண்ணமும், விருப்பமும். இதை பல மாதங்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தோம். தற்பொழுது இந்த செயல்திட்டத்தினை மிகத் தெளிவாக உலகின் மிகபலம் வாய்ந்ததாக கருதப்படும் சர்வதேச சிந்தனையாளர் என்.ஜி.ஓ குழுமத்தின் தலைவரும் தெரிவித்துள்ளார். இண்டர்நேசனல் க்ரைசிஸ் க்ரூப் என்கிற இந்த அமைப்பின் தலைவர் லூயி ஆர்பர் கடந்த 28 பிப்ரவரி, 2014இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிப்படுத்திருக்கிறார். (இவர் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் முன்னாள் தலைவர் , நவநீதம் அம்மையாருக்கு முந்தய அதிகாரி)

“தோற்கடிக்கப்பட்ட புலிகளின் மீதும் விசாரணை நடப்பதை தமிழர்களாலும், தமிழ் அமைப்புகளாலும் மறுக்கமுடியாததாக இருக்கும். அதுதான் அவர்கள் புலிகளின்மீது வைத்திருக்கும் அளப்பறிய பாசத்தினை/நேசத்தினை குறைக்கும். ( “A commission is also likely to uncover evidence of abuses by the defeated Liberation Tigers of Tamil Eelam in a form that would be hard for Tamils and Tamil organizations to deny. That would deflate a romanticization of the Tigers among Tamils that keeps alive Sinhalese fears that the Tamil insurgency might resume, and also gives the government an excuse for continued militarization and repression.” By LOUISE ARBOUR FEB. 28, 2014 International Crisis Group, NY Times )

எனவே தான் இருதரப்பினரையும் விசாரிக்கும் போர்க்குற்ற விசாரணை தேவை என்கிறது அமெரிக்காவும்,இங்கிலாந்தும், இந்தியாவும்.

இதே போன்றொதொரு கேள்வியை ஜெர்மன் தீர்ப்பாயத்தில் நீதிபதிகளிடத்தில் ‘டேவிட் காமரூன் சர்வதேசபோர்க்குற்ற விசாரணை கேட்கிறாரே?” கேட்டபொழுது ” அப்படியென்றால் டேவிட் காமரூன் , இங்கிலாந்து நாட்டின் ஆவண காப்பகத்தினையும், அதிகாரிகளையும் விசாரிக்க கதவை திறந்துவிடுவாரா? “ என்றார்

மேற்சொன்ன ஐ.சி.ஜி குழுமம் (இண்டர்நேசனல் க்ரைசிஸ் க்ரூப்) 2011இல் சென்னையில் பலகுழுக்களை சந்தித்தது. அவர்களிடத்தில்”ஈழவிடுதலை, இனப்படுகொலை,” ஆகிய கோரிக்கைகளை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தது. இவர்களிடத்தில் கடுமையான எதிர்வாதங்களை வைத்தபொழுது கோபத்தோடு வெளியேறினார்கள். இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளராகத் தன்னைக் காட்டிக் கொண்ட சருவதேச மாபியா செரீன் சேவியர் இலங்கையிலும் புலத்திலும் இனப்படுகொலை என்ற வாதத்தை தமிழ் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்காதவாறு செயற்பட்டார்.

இந்த அமைப்பு தான் இருதரப்பு போர்க்குற்ற விசாரணைக்கு பெரும் அழுத்தம் கொடுக்கிறது.

இவர்கள் 2007-2008இல் இவர்கள் புலிகளிடத்தில் ஆயுதங்களை கைவிட்டு , ஈழக்கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.அதை புலிகள் மறுக்கவே இனப்படுகொலைப் போர் நடப்பதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.

எனவே, ’இனப்படுகொலை’ குற்றச்சாட்டினை வைக்கும் பொழுது அது இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டாகவே இருக்கும். இருதரப்பும் இனப்படுகொலை செய்தது என்று குற்றச்சாட்டினை வைக்க இயலாது. ஆகவே தான், நாம் இனப்படுகொலை என்கிற குற்றச்சாட்டினை பலமாக முன்வைக்கவேண்டும்.

2011இல் எங்களை ஐ.சி.ஜியின் பிரதிநிதியை சந்திக்க செய்தவர்கள், இன்று ஐ.சி.ஜியின் நிலைப்பாடுகளை , அமெரிக்காவின் தீர்மானத்தினை ஆதரித்தும், இருதரப்புகளையும் (இலங்கை அரசு- விடுதலைப் புலிகள்) விசாரிக்கட்டும் என்று நம்மிடம் பிரச்சாரம் செய்வதை காணமுடிகிறது.

ஐ.சி.ஜி பல ட்ரோஜன் குதிரைகளை உருவாக்கி நம்மிடத்தில் உலவவிட்டு இருக்கிறது.

தொடர்ந்து ஊடுறுவும் ட்ரோஜன் குதிரைகளை நாம் வென்றால் மட்டுமே நம் போராட்டங்களை காக்க முடியும்.