தமிழகத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம். வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறது !

0
658

tn-tnaஇன்று சென்னையில் தமிழ் அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள் ஒன்று கூடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவதென்று முடிவெடுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கினர். நடந்த இந்த கலந்தாய்வில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒருமனதாக ‘தமிழர் தேசிய கூட்டமைப்பு ‘ என்ற பெயரில் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. இனி வரும் வாரங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் இனம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள் இணைய உள்ளன.

வரும் தேர்தலில் தமிழர்களுக்கு சார்பாக ஒரு கூட்டணியும் உருவாகாத நிலையில் , திராவிட , இந்திய தேசிய கட்சிகள் மீண்டும் பெரும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட உள்ள நிலையில் , தமிழர்களின் சார்பாக ஒரு வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டமைப்பு உருவாகி உள்ளது . ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் , தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கவும் இந்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட உள்ளது .

மிக முக்கியமான தமிழர்களின் நெடுநாள் கனவான ‘ தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் ‘ என்ற முழக்கத்தை முன்வைத்து இக் கூட்டமைப்பு செயல்பட உள்ளது. தேர்தல் கோரிக்கையாக தமிழர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி , வேலை வாய்ப்பு , கல்வி , சுகாதாரம் , விவசாயம் , பொருளாதாரம் , தொழில் வளர்ச்சி என அனைத்திலும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கவும் தீர்மானம் இயற்றப்பட்டது. நம் மொழியை அரியணை ஏற்ற தமிழர்களுக்கான மொழிக் கொள்கை வகுக்கப்பட்டது. சாதிய சிக்கலை தீர்க்கவும் அனைத்து தமிழ்ச் சாதிகளையும் ஒன்றிணைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுத்துவ சமூகத்தை உருவாக்கவும் உறுதி ஏற்கப்பட்டது. அரசியல் ரீதியான பலத்தை பெறுவதற்கும் தமிழர்கள் இழந்த அரசியல் உரிமைகளை போராடிப் பெறுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. தமிழர் கல்வி உரிமை , வழிபாட்டு உரிமை , வழக்காடு உரிமை , நில உரிமை , சொத்து உரிமை , விவசாய உரிமை , இயற்கை வளங்கள் மீதான உரிமை , நீர் உரிமை அதிகார உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மீட்டெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என்ற அடிப்படை கோரிக்கையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழர் நலன் சார்ந்த பல்வேறு கொள்கைகளையும் தமிழ்ச் சான்றோர்கள் கூடி பேசி வரையறை செய்ய உள்ளனர்.

இக்கூட்டமைப்பில் முதல் கட்டமாக அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம் , திரு . அரிமாவளவன் தமிழர் களம் , பிரபாகரன் மறத்தமிழர் சேனை, தமிழர் பேரரசு கட்சி, திரு செல்வா, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், இராஜ்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம், திரு இறைவன் வடதமிழ் நாடு மக்கள் சங்கம், செந்தில் மள்ளர் ,மள்ளர் மீட்புக் கழகம், பெருமாள்தேவன் தேவர் ஆராய்ச்சி மையம், அக்னி சுப்பிரமணியன், சீதையின் மைந்தன் , எழுகதிர் ஆசிரியர் திரு அருகோ, அருட்கண்ணனார், திரு முகிலன் தமிழ் பட்டரை, திருமாறன் மற்றும் பலரும் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களையும் தங்கள் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டனர் .

நாம் வகுத்துள்ள தமிழர் நல கொள்கையில் உடன்பாடுள்ள கட்சிகள் , அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணைந்து தேர்தலை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கிறோம். வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது ஒரு புறம் , தமிழ்த் தேசிய அரசியலுக்கான அவசியத்தை மக்களுக்கு எடுத்தச் செல்வது இன்னொரு புறம். தமிழர் அரசியல் கட்டமைப்பு வலுவடையட்டும். தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்று தமிழர் வாழ்வு சிறக்கட்டும். தொடர்பு கொள்ள – 9566224027, 9047440542, 9943938548