தமிழகம் விழித்தெழ வேண்டிய தருணம் – சேரமான்

0
379

india-congrasநிரந்தரப் போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடி நான்காம் கட்ட ஈழப்போரில் ஈழத்தமிழர்களைக் கழுத்தறுத்தது போன்று வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, மீண்டுமொரு கழுத்தறுப்பை இந்தியா மேற்கொள்ளக்கூடும் என்ற சந்தேகங்கள் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.

நியூயோர்க்கில் இந்திய இராசதந்திரி தேவ்யானி கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவை விட்டு அவர் வெளியேற்றப்பட்டதன் விளைவாக புதுடில்லிக்கும், வோசிங்டனுக்கும் இடையில் ஏற்பட்ட இராசரீக முறுகலின் எதிரொலியாக ஈழத்தமிழர் விடயத்தில் இவ்வாறான கழுத்தறுப்பை இந்தியா மேற்கொள்ளக்கூடும் என்றும் ஊகங்கள் கிளப்பப்பப்பட்டு வருகின்றன.

உண்மையில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இராசரீக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு விட்டதா? இதனால் ஈழத்தமிழர் பிரச்சினையில் மேற்குலகிற்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? பனிப்போர் காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை மையப்படுத்தி இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நிலவிய ஆதிக்கப் போட்டி மீண்டும் இன்றைய சூழமைவில் உருவெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

பெரும்பாலான இந்திய ஊடகங்களிலும் கூறப்படுவது போன்று தேவ்யானியை மையப்படுத்தி புதுடில்லிக்கும், வோசிங்டனுக்கும் இடையில் ஏற்பட்ட இராசரீக முறுகல் என்பது கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் நாளன்று அவர் கைது செய்யப்பட்டதுடன் தொடங்கிய விவகாரம் அன்று. கடந்த யூன் மாதம் 22ஆம் நாளன்று தேவ்யானியுடன் முரண்பட்டதை அடுத்து அவரது வீட்டை விட்டு அவரது பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சார்ட் என்ற பெண் வெளியேறிச் சென்று தலைமறைவாகியதை அடுத்து இந்த விவகாரம் ஆரம்பமாகியது. சம்பந்தப்பட்ட பணிப்பெண் அப்பொழுது தேவ்யானியைப் பற்றி அமெரிக்க காவல்துறையில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததோடு, தேவ்யானியால் இந்தியாவில் வசிக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து சங்கீதாவின் குடும்பத்தினர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு புதுடில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுசரணை வழங்கியது. இதன் பின்னர் வோசிங்டனில் உள்ள இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், உடனடியாக தமது நாட்டை விட்டு தேவ்யானி வெளியேறத் தவறினால் அவரைக் கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமது காவல்துறையினர் ஆளாக நேரிடும் என்று செப்டெம்பர் மாதமே எச்சரித்தனர்.

எனினும் இது விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் எடுக்கவில்லை. தவிர இது பற்றி தேவ்யானியிடம் அவர் தெரிவித்ததாகவும் பதிவுகள் எவையும் இல்லை. இவ்வாறு தேவ்யானியை டிசம்பர் மாதம் 12ஆம் நாளன்று கைது செய்வதற்கு ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன்னரே அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரபற்றற்ற முறையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்திருந்த பொழுதும், இதுவிடயத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காது இந்திய தூதுவர் வாளாவிருந்தமை, தேவ்யானியின் கைது என்பது புதுடில்லி அரங்கேற்றிய நாடகம் என்ற கருத்தையே அரசியல் அவதானிகளிடையேயும், இராசதந்திரிகளிடையேயும் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்காவில் தமது வீட்டுப் பணிப்பெண்களுக்கு தகுந்த சம்பளத்தை வழங்கத் தவறியமைக்காக தேவ்யானியைப் போன்று மேலும் பல இந்திய இராசதந்திரிகள் கடந்த காலங்களில் சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்கள். இவர்களைக் கைது செய்வதற்கு முன்னர், இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முற்கூட்டியே அதிகாரபூர்வமற்ற முறையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு கோரியிருந்ததோடு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்ட இராசதந்திரிகளை இந்தியாவிற்கு புதுடில்லி மீள அழைத்திருந்தது. இந்த வகையில் தேவ்யானியின் விடயத்தில் இம்முறையும் வழமையாகப் பின்பற்றப்படும் அணுகுமுறையையே அமெரிக்கா கையாண்டிருந்தது.

எனவே தேவ்யானி கைது செய்யப்பட்ட விவகாரத்தை பாரதப் பெண் ஒருவர் மீது அமெரிக்கா காட்டிய வல்லாதிக்கப் போக்கின் வெளிப்பாடாக நாம் கற்பிதம் செய்து கொள்ள முடியாது. மாறாக பாரத தேசத்தில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய வாக்கு வங்கியைக் குறிவைத்து கொங்கிரஸ் அரங்கேற்றிய நாடகமாகவே இதனைக் கருதலாம். இந் நாடகத்திற்கு கொங்கிரஸ் கொடுத்த பலிதான் தேவ்யானி.

இன்றைய உலக அரசியலில் தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியா மாறியிருப்பது உலகறிந்த இரகசியம். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் கொங்கிரஸின் ஆட்சியில் மேலும் வலுவடைந்து இன்று அமெரிக்காவின் தாளத்திற்கு நர்த்தனமாடும் நாடாக இந்தியா மாறும் நிலைக்கு எட்டியுள்ளது. இது ஒருபுறம் பொருண்மிய ரீதியில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியுள்ள பொழுதும், இதனால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சராசரி இந்தியக் குடிமக்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பதுதான் உண்மை.

manmohan-239x300இதன் விளைவாக வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கொங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம்தான் தேவ்யானியின் விவகாரம். அமெரிக்காவை விட்டு தேவ்யானி வெளியேறாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்பதை கடந்த செப்டெம்பர் மாதமே கொங்கிரஸ் தலைமை அறிந்திருந்தும் டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்படும் வரை அது வாளாவிருந்தது.

ஆனால் தேவ்யானி கைது செய்யப்பட்ட மறுகணமே சுதாரித்துக் கொண்டது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திய கொங்கிரஸ் தலைமை, வோசிங்கடனுக்கு எதிரான பதிலடி இராசரீக நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஏதோ சீதையின் துகில் உரியப்பட்டது போன்று தேவ்யானியின் கைது விவகாரத்தை இந்திய ஊடகங்கள் பூதாகரப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கொங்கிரஸ் ஏவிவிட்டது.

போதாக்குறைக்கு தேவ்யானியை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் வரை தான் ஓயப்போவதில்லை என்று இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளியுறத்துறை அமைச்சர் சல்மான் குர்திக்ஷ் முழங்கினார். ஏதோ தேவ்யானியை நாட்டிற்கு அழைத்து வராவிட்டால் இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்பது போன்று சல்மான் குர்திஷ் ஒப்பாரி வைக்க, ஒப்புக்கு அதனை இந்திய ஊடகர்களும், கொங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பித்தனர்.

ஆனால் இறுதியில் நடந்தது என்ன? தேவ்யானி மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு முழு அளவிலான இராசரீகத் தகைமையை அமெரிக்கா வழங்கியது. இறுதியில் இம்மாதம் நாட்டை விட்டு அவர் வெளியேறிச் செல்வதற்கும் அது இடமளித்தது.

அனைத்துலக ஊடகங்களைப் பொறுத்தவரை தேவ்யானியின் விவகாரம் என்பது இப்பொழுது ஆறிப்போன பழம் கஞ்சியின் கதையாகி விட்டது. இதனையிட்டு பன்னாட்டு ஊடகங்கள் இப்பொழுது அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் கொங்கிரஸ் கட்சியோ விடுவதாக இல்லை. மூடிய அறைகளுக்குள் அமெரிக்காவின் முன்னால் பெட்டிப் பாம்பாக இந்திய இராசதந்திரிகளும், அரசியல்வாதிகளும் நடந்து கொண்டாலும் இப்பொழுதும்கூட தமது வீரவசனங்களை அவர்கள் கைவிடுவதாக இல்லை. பெரும்பாலும் இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நிறைவடையும் வரை இந்த வீரப் பிரதாபங்கள் நீடிக்கலாம் என்றே நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அதன் பின்னர் இவையெல்லாம் புஸ்வாணங்களாகி விடும்.

usa-india
சரி, மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் கொண்டு வரும் பொழுது அதற்கு எதிரான போக்கை அல்லது கடந்த காலங்களைப் போன்று அத்தீர்மானத்தின் வீச்சைப் பலவீனப்படுத்தும் அணுகுமுறையை இந்தியா கைக்கொள்ளுமா?

இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழக வாக்கு வங்கியில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் கருத்திற் கொண்டு அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் அணுகுமுறையை இந்தியா எடுக்காது என்று நாம் உறுதியாக நம்பலாம். இறுதிப் போரில் ஈழத்தீவில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலை என்று தேவ்யானியின் விவகாரம் சூடுபிடிப்பதற்கு முன்னரே இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்த அறிவித்தல் இதனையை சுட்டி நிற்கின்றது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் வீச்சைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் புதுடில்லி ஈடுபடாது என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தனது கொல்லைப்புறத்தில் பன்னாட்டு சுயாதீன விசாரணை நடைபெறுவதற்கு இடமளிப்பது தனது வீட்டிற்குள்ளேயே ‘குறிப்பாக காஷ்மீரில்’ இதேபோன்ற பன்னாட்டு சுயாதீன விசாரணைகள் இடம்பெறுவதற்கான புறச்சூழலை தோற்றுவிக்கும் என்று இந்தியா கொண்டுள்ள அச்சம். மற்றையது சிறீலங்கா அரசின் விடயத்தில் கடும்போக்கை தாம் எடுப்பது தமது பிடியில் இருந்து மகிந்தர் நழுவிச் செல்லும் சூழலுக்கு வழிகோலும் என்று இந்தியா கொண்டுள்ள அச்சம்.

எனவே, இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானத்தின் வீச்சைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் இவ்வாறானதொரு சூழல் ஏற்படுவதை தமிழக மக்கள் நினைத்தால் நிச்சயம் தடுத்து நிறுத்தலாம். இதுவிடயத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையில் உறுதியான கொள்கையைப் பின்பற்றும் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தையும், சீமானின் நாம் தமிழர் கட்சியையும் தவிர வேறெந்த தமிழக அரசியல் கட்சிகளும் நேர்மையுடன் நடந்து கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இதுவிடயத்தில் நேர்மையான நிலைப்பாட்டை பின்பற்றக்கூடிய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருந்தாலும்கூட, அவை எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை எதிர்வுகூறுவது கடினம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதுடில்லி எடுக்கப் போகும் நிலைப்பாட்டை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் செல்வி ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈடுபடும் என்று மட்டும் நாம் உறுதியாக நம்பலாம். உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வீச்சைப் புதுடில்லி பலவீனப்படுத்துவதையே கருணாநிதியும், ஜெயலலிதாவும் விரும்புவார்கள். இதன் மூலம் கொங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு தமது வாக்கு வங்கிகளை நிரப்பும் முயற்சிளை நிச்சயம் இவர்கள் இருவரும் எடுத்தே தீருவார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கும் நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவை உள்ளாக்குவதோடு மட்டுமன்றி அதன் வீச்சு பலவீனப்படாதிருப்பதையும் தமிழக மக்களால் மட்டுமே உறுதி செய்ய முடியும். இதனைப் புரிந்து கொண்டு தமிழக மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதே இப்பொழுது ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் அழிக்கப்பட்ட பொழுது இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறு மீண்டும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தேறாதிருப்பதை தமிழக மக்கள் அனைவரும் நினைத்தால் நிச்சயம் உறுதி செய்யலாம்.

நன்றி: ஈழமுரசு