தமிழருக்கு என்றும் கறுப்பு யூலையே!

0
640

black-july3இன்றைய நாள் தமிழ் மக்களுக்கு என்றுமே ஆறாத வடுவைத் தந்த நாள். யூலை (ஆடிக் கலவரம்) என்பது யூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு கொடுமையான நிகழ்வாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் 13 சிறீலங்கா படையினர், யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் கொல்லப்பட்டதன் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மேலோங்கக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. குறித்த நிகழ்வு இடம்பெற்று 30 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். ஆயினும் இன்றுவரை தமிழர் வாழ்வு கறுப்பு யூலையாகவே இருந்து வருகின்றது.

இனவாத சிங்களம், தமிழ் மக்களின் சொத்துக்களை இன்று வரை சூறையாடிக் கொண்டே இருக்கின்றது. அப்பாவித் தமிழ் உயிர்கள் படுகொலை செய்து அழிக்கப்பட்டு வருகின்றன. தட்டிக்கேட்க எவருமே அற்ற நிலையிலேயே தமிழ் இனம் தவிக்கின்றது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்பும் தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பலர் புலம்பெயர் மண்ணில் தேசிய செயற்பாடுகளை முடக்குவதற்கு பேரம் பேசப்படுவதாகவும் தெரிகின்றது. அத்தோடு பலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கும் அறிவிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவராஜா பிரகாஷ் என்ற தமிழ் இளைஞர், சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது மாடியில் இருந்து குதித்துக் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர் நாடு ஒன்றில் தங்கியிருந்த அவர், கடந்த வாரம் சிறீலங்கா திரும்பியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்பட்ட நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா- நெடுங்கேணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவனான தேவராசா பிரதீபன் (வயது 26) என்ற குறித்த இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 உந்துருளிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர், சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் எவரிடமும் இந்த விடையம் தொடர்பில் தெரிவிக்கக் கூடாது என அச்சுறுத்திவிட்டு அதே நபர்களினால் அவரது வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்.

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் சூடேற்றிய இரும்பு கம்பிகளால் சுடப்பட்டும் சிகரட்டினால் சுடப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் மிகுந்த அச்சத்தினால் விடயத்தை அப்படியே மூடிமறைத்துள்ளனர். இதேவளை, குறித்த இளைஞர் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தை எனவும் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வுஎன்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமல் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கிராமத்தில் அயலவருடன் ஏற்பட்ட தகராறையடுத்தே விசாரணைக்கு என இனந்தெரியாத நபர்கள் இவரை அழைத்துச் சென்று தாக்கிச் சித்திரவதை செய்ததாகத் தெரிகின்றது.

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சியில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளனர். நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமே, கடந்த சனிக்கிழமை காலை யாழ்.பலாலி வீதியில் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு மீட்கப்பட்ட துப்பாக்கிச் சன்னங்கள் ஆகும்.

அதுவும் கடந்த காலத்தில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இருந்த கட்டடத் தொகுதிக்கு முன்னாலே இவ்வாறு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளமை, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலை விரிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகிறது. இதன் மூலம் வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய நடவடிக்கைகளை நோட்டம் விடுவதுடன், தொடர்ச்சியாக மாணவர்களை ஒவ்வொரு விடையத்திற்கும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கலாம் என்பதே யாழ்.பல்கலைக் கழகத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணி என்பதுதான் உண்மை.

எனவே, இவ்வாறான தமிழர்கள் மீதான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் கறுப்பு யூலையாக என்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களே இது சிந்திக்கும் நேரமல்ல. நாம் ஒருமித்து செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)

கந்தரதன்

நன்றி: ஈழமுரசு