தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்: உலகத் தமிழர் பேரவையின் புத்தாண்டுச் செய்தி

0
619

GTFகடந்த ஆண்டின் நிகழ்வுகளை நினைவூட்டவும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் புத்தாண்டின் தொடக்கம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகின்றது.

உலகத் தமிழர் பேரவையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்,

இலங்கை நாட்டுக்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் ஒளிமயமான ஓர் எதிர்காலம் அமையுமென அண்மைய ஆண்டுகளில் நாம் கொண்டிருந்த நம்பிக்கை பல தடவை வீணாகி நிறைவேறாது போயிற்று.

எனினும், 2014இல் எமது மக்களின் அடிப்படை அபிலாசைகளில் ஒரு சிலவாவது நிறைவேறுமென உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நம்பகத்தன்மையுடன் விசாரிப்பதற்கான ஒரு பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் இவற்றில் ஒன்றாகும்.

2013இல் வெளியிடப்பட்ட “இலங்கையின் கொலைக் களங்கள்” என்ற ஆவணப்படங்கள், “போர் நிறுத்த வலையம்” என்ற திரைப்படம், சனல் 4 செய்திச்சேவை ஆகியன போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை மேலும் அம்பலப் படுத்தியமைக்காக அவை சிறப்புப் பாராட்டுக்கு உரியன.

உயிரிழந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உண்மையையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இலங்கைத் தீவை இட்டுச்செல்வதற்கும் ஐ.நா.வின் ஆதரவுடன் இவ்வாறான ஒரு பொறிமுறை அமைக்கப்படுதல் இன்றியமையாத ஒன்றாகும்.

போரின் போது நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சட்டமீறல்கள் ஆகியன பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுப்பதில் இலங்கை அரசு அக்கறையின்றி இருப்பதோடு, குறிப்பாக இராணுவமயப் படுத்தப்பட்டுள்ள வடக்கிலும் தீவின் பிற பகுதிகளிலும் மனித உரிமைகளைத் தொடர்ந்தும் மீறி வருகின்றதன் காரணமாகவும் இலங்கை அரசின்மீது அனைத்துலகம் மேலும் மேலும் பொறுமையிழந்து வருகின்றதென்பது தெளிவாகியுள்ளது.

இலங்கையில் மீளிணக்கத்தையும் பொறுப்புக் கூறுதலையும் ஏதுவாக்கும் பொருட்டு மேலதிக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்ற 2013இல் ஐ.நா. மனித உரிமைகள் அவையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தை நாம் வரவேற்றுள்ளோம்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சனாதிபதி ராஜபக்ச தவறியுள்ளமையால் இந்தியா, கனடா மற்றும் மொறிசியஸ் நாட்டுப் பிரதமர்கள் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு அரசத் தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணித்தமையை நாம் ஆதரித்துள்ளோம்.

மேலும் கடந்த ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரான மாண்புமிகு நவி பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகி வருவது பற்றி வெளியிட்ட கடுமையான அறிக்கையிலுள்ள தகவல்களை அறிந்து பெருங்கவலை அடைந்தோம்.

அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றாது தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்தமை, வெலிவேரியாக் கொலைகள்- ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் சனநாயக உரிமையை இராணுவத்தைக்கொண்டு அடக்கியமை, புத்த மதம் தவிர்ந்த மற்றைய மதங்களைச் சகிக்கும் தன்மை அற்றுப்போதல், பக்கச்சார்பற்ற ஊடகங்களைத் தாக்குதலுக்கு உட்படுத்தி கருத்துச் சுதந்திரத்தை அடக்குதல், தனியாரின் காணிகளை இராணுவமும் அரசாங்கமும் கைப்பற்றுதல், முக்கியமாக இராணுவ மயப்படுத்தப்பட்ட வடக்கிலும் கிழக்கிலும் பலமற்றுள்ள தமிழ்ப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பு ஆகியன இலங்கைத் தீவில் மக்கள்படுகின்ற கொடூரமான மனித உரிமை மீறல்களிற் சிலவாகும்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழுகின்ற வடக்கிற்கு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் ஆகத்து மாதத்தில் வருகை தந்தமை, ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரியான அதி மதிப்புக்குரிய திரு டேவிட் கமரோன் அவர்கள் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தின் போது அங்கு வருகை தந்தமை ஆகியன அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் அவலநிலையை அனைத்துலகம் உன்னிப்பாகக் கவனிக்க உதவின.

தமிழ் மக்களையும் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களையும் இராணுவ மயப்படுத்துதலினாலும் அச்சுறுத்தல்களினாலும் ஓரங்கட்டுதலும் அடக்கிவைத்திருத்தலும் நிறுத்தப்பட வேண்டும்.

அரச படைகளினால் தொல்லைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவோமெனத் தெரிந்தும் உண்மைக்கும் நீதிக்குமாக தமது பிரச்சினைகளையும் தீவில் நிலவுகின்ற உண்மை நிலைமையையும் இந்தப் பிரமுகர்களுக்கு எடுத்துக்காட்ட முன்வந்த தமிழ் மக்களின் துணிச்சலைப் தமிழர் பேரவை பாராட்டுகின்றது.

செப்டம்பரில் நடைபெற்ற வடமாகாணச் சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய தெளிவான அரசியல் ஆணை எதிர்காலத்திற்கான எமது நம்பிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.

ஐயமற்ற அவ்வெற்றியானது இலங்கை அரசுக்கும் அனைத்துலகச் சமூகத்திற்கும் முக்கியமான ஒரு செய்தியை வழங்கியுள்ளது. அதன் கொள்கை விளக்க அறிக்கையில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றும் உரிமையும் கடப்பாடும் இப்போது த.தே.கூட்டமைப்புக்கு உள்ளது.

அப்பிரதேசத்தில் வாழ்வோரின் சில அவசர தேவைகளையாவது நிறைவேற்ற மாகாண சபைக்கு வாய்ப்பு வழங்கப்படுமென நாம் நம்புகின்றோம். இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அதனுடன் ஒரு வலுவான தொடர்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம். நாம் த.தே.கூட்டமைப்புடன் தொடர்ந்தும் உயிர்ப்பாகச் செயற்பட்டு 2014இல் அனைத்துலக மட்டத்தில் அவர்களின் குரலை வலுப்பெறச் செய்ய உதவுவோம்.

இலங்கையின் தெற்கிலுள்ள அரசியல் அமைப்புக்களுடனும் அரசியல் சாராத அமைப்புக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள நாம் அப்பணியைத் தொடர்ந்தும் ஆற்றுவோம்.

சீர்கெட்டு வருகின்ற இலங்கையின் நிலை மாற வேண்டும், இப்போதே மாறவேண்டும்! ஆயுதம் தாங்கிய போரில் அனைத்துலகச் சட்டங்களை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு பகுதியினர் பற்றியும் விசாரிக்க ஓரு பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைக் குழுவை அமைக்க உதவவேண்டுமென்ற கோரிக்கைக்கும் ஒரு முழுமையான அரசியல் தீர்வை உருவாக்க உதவவேண்டுமென்ற கோரிக்கைக்கும் ஆதரவு நல்குமாறு அனைத்துலகச் சமூகத்தைச் சேர்ந்த அரசாங்கங்கள், குடிசார் அமைப்புக்கள், மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் அனைவரையும் உலகத் தமிழர் பேரவை வேண்டிக்கொள்கின்றது.

மார்ச் 2014இல் நடைபெறவுள்ள ஐ.நா.ம.உ.அவையின் 25வது அமர்வின்போது அனைத்துலகச் சமூகத்தை ஏமாற்றும் நோக்குடன் “உண்மைக்கும் மீளிணக்கத்திற்குமான ஆணைக்குழு” என்ற ஒரு நடைமுறையை நேர்மையற்றவகையில் முன்மொழிந்து பொறுப்புக்கூறுதல், மீளிணக்கம் ஆகியவற்றிற்கான நடைமுறையைப் பாழாக்கவோ வேண்டுமென்றே நீடிக்கவோ கீழறுக்கவோ ஜனாதிபதி ராஜபக்கசவின் அரசுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது.

சிறப்பும் செல்வச்செழிப்பும் வாய்ந்த புத்தாண்டை எதிர்நோக்கும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களது உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், பேச்சுவார்த்தை மூலமான ஓர் அரசியல் தீர்வின் அடிப்படையில் சமாதானத்துக்கும் மீளிணக்கத்துக்கும் உழைக்க எம்மை ஈடுபடுத்துவோமாக என குறிப்பிடப்பட்டுள்ளது.