சிறீலங்காவில் ஏற்பட்டுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் சிங்கள தேசத்திற்கு தமிழ் இனம் ஒரு காத்திரமான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது அரசியல் செல்வாக்குக்காக மேற்கொள்ளப்படும் இனப்போரை எமது இராஜதந்திரத்தால் உங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதே அது.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது எதிர்வரும் 30 வருடங்களுக்கு தன்னை அசைக்கமுடியாது என்றே மகிந்தா எண்ணியிருப்பார். ஏன் பல ஊடகங்களும், ஆய்வாளர்களும் அதனையே தெரிவித்தனர். ஆனால் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போது சரத் பொன்சேக்காவை ஆதரிப்பது என முடிவெடுத்தபோதே மகிந்தாவின் செல்வாக்கு ஆட்டம்காண ஆரம்பித்திருந்தது. எனினும் அன்று மயிரிழையில் தப்பிப்பிழைத்த அவரை இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் மக்கள் தோற்கடித்துள்ளனர்.

mahi-water
இந்த தேர்தலில் தமிழ் மக்களின் முடிவு எவ்வாறு அமையும், அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் இரண்டு பத்திகளை தேர்தலுக்கு முன்னர் நான் எழுதியிருந்தேன். அதில் கூறப்பட்டதைப்போலவவே தமிழ் மக்களின் முடிவு ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளதுடன், தேர்தலில் தமிழ் மக்கள் முழு அளவில் பங்கெடுத்திருந்தனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் வழமையாக தமிழ் மக்கள் இவ்வளவு பெருமெடுப்பில் பங்கெடுப்பதில்லை, ஆனால் இந்த தடவை அவர்கள் ஆயுதத்தால் வழங்கமுடியாத தண்டனையை தமது வாக்குகளால் வழங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டால் தன்னால் வெற்றியீட்ட முடியும் என கருதிய ராஜபக்சா அரசு தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுப்பதற்கு தன்னால் இயன்ற பல தடைகளை மேற்கொண்டபோதும் அதனை தமிழ் மக்கள் முறியடித்துவிட்டனர்.

மகிந்தாவினதும் அவரின் ஒட்டுக்குழுக்களினதும் அதிகாரத்தை தமிழ் மக்கள் பறித்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் இருப்பை அழிக்கும் முயற்சிகளை தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஏனவே இனிவரும் சில காலத்திற்கு மகிந்தாவின் கதைகளே ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

எனது முதலாவது பத்தியில் குறிப்பிட்டதுபோல தமது முதல் கட்ட நடவடிக்கையில் தமிழ் மக்கள் வெற்றியீட்டியுள்ளனர். இனிவரும் காலங்களில் இரண்டாம் கட்ட செயற்திட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், போர்க்குற்றங்கள் அதற்கான காரணங்கள் எல்லாம் அனைத்துலக மட்டத்தில் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

அதுவே எதிர்வரும் காலத்தில் ஒரு இனப்படுகொலை நடைபெறுவதை தடுக்கும், சிறீலங்காவில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை அனைத்துலகம் ஏற்றுக்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தும். மகிந்தாவையும் அவருடன் இணைந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டவர்களையும் தண்டிப்பதன் ஊடாக புதிய அரசுக்கு தமிழ் மக்கள் அனைத்துலக அழுத்தங்களையும் ஏற்படுத்த முடியும்.

sripala
சிறீலங்காவில் புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்த கருத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். எனவே புதிய அரசு பதவியேற்ற போதும் ஐ.நா விசாரணை என்ற தனது நிலையில் இருந்து மேற்குலகம் பின்வாங்கவில்லை என்பதையே இந்த கருத்து பிரதிபலிக்கின்றது. ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய கடமை எமது கரங்களில் தான் உள்ளது.

புதிய அரசுக்கு கொடுக்கப்படும் அனைத்துகல அழுத்தங்களின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை சிறீலங்கா மண்ணில் களமிறக்குவோமாக இருந்தால் அது எமது அடுத்த வெற்றியாக அமையும். மகிந்தாவை தேர்தலில் தோற்கடிக்க தாயக மக்கள் எவ்வளவு உறுதியாகவும், ஒற்றுமையாகவும் செயலாற்றினார்களோ. அதனைப்போலவே ஐ.நா விசாரணையை துரிதப்படுத்த புலம்பெயர் தமிழ் சமூகமும், தமிழகமும், உலகத்தமிழ் இனமும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இன்றைய பூகோள அரசியலில் தமிழ் இனம் பல நன்மைகளை பெறமுடியும். உக்ரேன் ஊடாக ரஸ்யாவின் கொல்லைப்புறத்திற்குள் நுளைந்துள்ள மேற்குலகம் ரஸ்யாவின் பாதுகாப்பு வலையத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதனை முறியடிப்பதற்கு உக்ரேனில் ஒரு உள்நாட்டுப்; போரை ரஸ்யா தோற்றுவித்தபோதும் தற்போது எண்ணை விலையில் வீழ்ச்சியை உருவாக்கி ரஸ்யாவின் பொருளாதரத்தை மேற்குலகம் முடக்கியுள்ளது.

இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏறத்தாள 30 படைத்தளங்களை நகர்த்துவதற்கு அமெரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது. இந்த படைத்தளங்கள் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கு நகர்த்தப்படவுள்ளதாக அமெரிக்காவின் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த படைநகர்வின் உள்நோக்கம் என்பது 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரபு உலகின் வசந்தம் போன்றதொரு வசந்தமானது ஆசிய பிராந்தியத்தில் உருவாக்கப்போகின்றது என்பதையே காண்பிக்கின்றது. பல இனங்களை அடக்கி ஆட்சி செய்தவாறு ஜனநாயகம் என்ற போர்வையில் வல்லரசாகும் கனவில் மிதக்கும் பல ஆசிய நாடுகளில் வசிக்கும் இனங்களின் விடுதலைக்கான நேரம் நெருங்குகின்றது.

மேற்குலகமும், இந்தியாவும் இணைந்து செயற்படுகின்றது என்று நாம் எண்ணலாம், ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்கும் போது மேற்குலகமும் மகிந்தாவும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 1980 களில் ஈரான் – ஈராக் போரில் சதாம் கூசைனும் அமெரிக்காவும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். ஆப்கானிஸ்த்தான் – ரஸ்யா போரில் பின்லாடனும் அமெரிக்காவும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம்.

ஆனால் தற்போதுள்ள பிரச்சனை என்னவெனில் சிறீலங்காவில் ஐ.நாவின் விசாரணைக்குழு களமிறங்குவதற்கான அனுமதியை ஒரு அழுத்தத்தின் மூலம் பெறவேண்டும்.

அதேசமயம் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கப்படும் இந்த அழுத்தங்களைப்போல தயாகத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதுடன், தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையும் மீறப்பெறும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

tamil-idp2
முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரச படையினராலும், அதனுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்டு காணாமல்போன தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் அறியப்படவும் வேண்டும். இதனை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தயங்கினால் அதனை ஐ.நா விசாரணைக்குழு மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அது மட்டுமல்லாது படை முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படுவதுடன், ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் முற்றாக களையப்பட்டு அவை கலைக்கப்படவும் வேண்டும். இந்த நடிவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் தமது பங்களிப்பை அவசியம் வழங்குவார்கள் என்பதுடன், சிறீலங்காவில் உள்ள அனைத்துலக நாடுகளின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் உதவியையும் தமிழ் அரசியல் கட்சிகள் நாடலாம்.

எனவே தற்போது தமிழ் மக்கள் மேற்கொள்ளவேண்டியது முக்கியமான இரண்டு நகர்வுகள் உண்டு. ஓன்று போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அரசியல் தீர்வுக்கான வழிகளை பலப்படுத்துவது. இரண்டாவது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் தேடல்களுக்கான பதிலை கண்டறிவதுமாகும்.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
.