இராணுவ ஆக்கிமிப்புச் சூழல் காரணமாக தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்த தமது முழுமையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையினை தாயகத்தில் உள்ள தலைவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு உரத்து எடுத்துச் சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டத் தொடரின் இறுதிநாள் அமர்வின் நிறைவுரையிலேயே இக்கூற்றினை முன்வைத்துள்ளார்.

rudrakumar
தாயகத்தில் நமது மக்களுக்கான அரசியல்வெளி சிங்களத்தால் மிகவும் குறுக்கப்பட்டுள்ளதொரு சூழலில், தாயகத் தமிழ்த் தலைவர்களும் மக்களும் தமிழீழத் தனியரசு பற்றி வாய் திறந்து பேச முடியாததொரு சூழலில், மக்களின் சனநாக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரம் உள்ளடங்கலான, மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதொரு சூழலில் தமக்கு உள்ள வரையறுக்கப்பட்ட தெரிவுகளையே மக்கள் மேற்கொள்ள வேண்டியள்ளதொரு சூழலில்தான் நாம் செயற்படவேண்டியுள்ளது.

இத்தகையதொரு சூழலில் தாயகத் தமிழ்மக்களும், தலைவர்களும் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டனர் என்றும், புலம் பெயர்ந்த வாழும் தொலைதூரத் தமிழத்தேசிய வாதிகள் சிலர் மட்டுமே, தமிழீழம் பற்றிப் பேசுகின்றனர் என்ற பொய்யானதொரு விம்பத்தை சிங்களம் கட்டியெழுப்ப முனைகிறது.

அனைத்துலச சமூகத்தினரும் தற்போதய சூழலில் இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள் உருவாகுவதனை விரும்பாத காரணத்தால் சிங்கள் கட்டியெழுப்ப விரும்பும் பொய்யான விம்பத்துக்கு ஆதரவளிக்க முற்படுகின்றனர்.

இத்தகையதொரு பொய்யான விம்பம் கட்டியெழுப்பப்படுவதற்கு தாயகத் தமிழ்த் தலைவர்கள் சிலரும் துணைபோவது நமக்குக் கவலையைத் தருகிறது.

தாயகத்தில் உள்ளவர்கள் தமிழீழம் பற்றிப் பேசமுடியாது என்பதனை நாம் அறிவோம். தமிழீழம் பற்றிப் பேசுங்கள் என்றும் நாம் அவர்களைக் கோரவில்லை.

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் உட்பட இராணுவ ஆக்கிமிப்புச் சூழல் காரணமாக, தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்த தமது முழுமையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையினை தாயகத்தில் உள்ள தலைவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு உரத்து எடுத்துச் சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறைகூவல் அமைந்துள்ளது.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் உரையின் முழுமையான தொகுப்பு :

அன்புக்குரிய நண்பர்களே! அனைவருக்கம் வணக்கம்!

கடந்த மூன்று நாட்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் இரண்டாவது அமர்வில் நாம் செயலூக்கம் கொண்டவர்களாகக் கூடியிருந்து, தமிழீழ விடுதலைக்காக ஆற்ற வேண்டிய பணிகள் பற்றிப் பேசியுள்ளோம், விவாதித்துள்ளோம்.

சனநாயக வழியல் எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னோடியாக, நாம் ஜனநாயப் பண்பு கொண்டவர்களாக, பல்வேறு கருத்துக்களையும் பொறுமையுடனும் சகிப்பத் தன்மையுடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக. வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக, மக்களுக்கு பொறுப்பு கூறும் கடமை கொண்டவர்களாக, எம்மை வளர்த்துக் கொள்ளல் அத்தியவசியமானது.

எல்லாவற்றிலும் மேலாக, நாம் மக்கள் மீது விசுவாசம் கொண்டவர்களாவும் உண்மைத்தன்மை கொண்டவர்களாகவும் இருத்தல் முக்கியமானது.

கூடியிருந்து பல்வேறு கருத்தக்களையும் பேசி விவாதித்து, இவ்வாதங்கள் ஊடாக குழப்பம் அடையாது, மிகுந்த தெளிவுடன் நாம் ஆற்ற வேண்டிய கருமம் தொடர்பாக தேவையான முடிவுகளை எடுத்து முன்னேறிச் செல்பவர்களாக இருத்தலும் அவசியமானது.

கடந்த மூன்று நாட்களிலும் நாம் இங்கு நியூயோர்க்கிலும் பரிஸ் மாநகரிலும் கூடிச் செயற்பட்ட பாங்கு, நாம் எம்மை ஜனநாயகப்பண்பு கொண்டவர்களாக வளர்த்துக் கொண்டுள்ளோம் என்பதற்குச் சான்றாக அமைந்தது.

சனநாயக வழயில் செயற்படுவவதற்கு தகமை கொண்டவர்களாக நாம் எம்மை நிலைநிறுத்தியுள்ளோம் என்பது இவ் அமர்வில் உறுதியாக வெளிப்பட்டிருக்கிறது.

இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.

இங்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2015 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி விவாதித்து முடிவுகளை எடுத்துள்ளோம்.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான அம்சங்கள் குறித்த தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழீழத் தனியரசு குறித்த மக்கள் வாக்கெடுப்புக் கோரிக்கையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விவாதித்து அதனை முன்னெடுப்பதற்குரிய மூலோபாயத்தையும் அடையாளம் கண்டுள்ளோம்.

இவ் அமர்வில் தமிழகத்தின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் நாஞ்சில் சம்மத் அவர்களும், மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வரும் பேராசிரியருமான இராமசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை எமக்கெல்லாம் பேருவகையையும் புதுவீச்சையும் தருகிறது.

கடந்த காலங்களில் அமர்வுகள் நிறைவடையும் இருந்த மனநிலையினை விட, இந்த அமர்வின் நிறைவில் நான் மிகுந்த உற்சாகம் கொண்டவனாக உள்ளேன்.

தமிழீழ விடுதலைக்கான காலத்தைக் கனிய வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காத்திரமான பங்கினை இனிவரும் காலங்களில் ஆற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே!

இவ்விடத்தில் ஒரு விடயத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த நான் விரும்புகிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை கருத்தளவில் வலுவுள்ள அமைப்பாக நாம் வளத்தெடுத்திருந்தாலும், குறியீட்டு வடிவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் பேராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை முன்னேறியிருந்த தூரம் குறித்து நான் கவலை கொண்டிருந்தேன்.

இந்த அமர்வு அந்தக் கவலையைப் போக்கி புதிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

நாம் இங்கு செயற்படுவதற்காக முடிவு செய்துள்ள திட்டங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுவாக்கி பேராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதிற்கு வழிவகை செய்யும் என நான் உறுதியான நம்புகிறேன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்வீச்சை உறுதிப்படுத்த பிரதமர் பணிமனையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. நாம் வரித்துக் கொண்டுள்ள இலக்கு சவால் மிக்கதொன்றுதான்.

அரசியல் சனநாயக வழிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதய சூழலில் இலகுவானதொரு விடயம் அல்ல என்பதனையும் நான் அறிவேன்.

தாயகத்தில் நமது மக்களுக்கான அரசியல்வெளி சிங்களத்தால் மிகவும் குறுக்கப்பட்டுள்ளதாரு சூழலில், தாயகத் தமிழ்த் தலைவர்களும் மக்களும் தமிழீழத் தனியரசு பற்றி வாய் திறந்து பேச முடியாததொரு சூழலில், மக்களின் சனநாக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரம் உள்ளடங்கலான, மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதொரு சூழலில் தமக்கு உள்ள வரையறுக்கப்பட்ட தெரிவுகளையே மக்கள் மேற்கொள்ள வேண்டியள்ளதொரு சூழலில்தான் நாம் செயற்படவேண்டியுள்ளது.

இத்தகையதொரு சூழலில் தாயகத் தமிழ்மக்களும், தலைவர்களும் தமிழீழத் தனியரசுக் கோரிக்கiயினைக் கைவிட்டு விட்டனர் என்றும், புலம் பெயர்ந்த வாழும் தொலைதூரத் தமிழத்தேசிய வாதிகள் சிலர் மட்டுமே, தமிழீழம் பற்றிப் பேசுகின்றனர் என்ற பொய்யானதொரு விம்பத்தை சிங்களம் கட்டியெழுப்ப முனைகிறது.

அனைத்துலச சமூகத்தினரும் தற்போதய சூழலில் இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள் உருவாகுவதனை விரும்பாத காரணத்தால் சிங்கள் கட்டியெழுப்ப விரும்பும் பொய்யான விம்பத்துக்கு ஆதரவளிக்க முற்படுகின்றனர்.

இத்தகையதொரு பொய்யான விம்பம் கட்டியெழுப்பப்படுவதற்கு தாயகத் தமிழ்த் தலைவர்கள் சிலரும் துணைபோவது நமக்குக் கவலையைத் தருகிறது.

தாயகத்தில் உள்ளவர்கள் தமிழீழம் பற்றிப் பேசமுடியாது என்பதனை நாம் அறிவோம். தமிழீழம் பற்றிப் பேசுங்கள் என்றும் நாம் அவர்களைக் கோரவில்லை.

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6 ஆம் திருத்தச் சட்டம் உட்பட இராணுவ ஆக்கிமிப்புச் சூழல் காரணமாக, தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்த தமது முழுமையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையினை தாயகத்தில் உள்ள தலைவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு உரத்து எடுத்துச் சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

எமது மக்கள் தாம் முன்னர் ஆண்ட இனம் என்பதற்காக மீண்டுமொருமறை ஆள வேண்டும் என்று பழம்பெருமயை நிறுவுவதற்காகத் தமிழீழத் தனயரசினைக் கோரவில்லை

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட 40,000 க்கும் மேற்பட்ட போராளிகளும் இலட்சக்கணக்கான மக்களும் ஆளும் ஆசைக்காக தமது உயிர்களை ஈகம் செய்யவில்லை.

நாம் ஈழத்தமிழ் தேசத்தவர், சிங்களத்தால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோம்.

எமது தனிமனித உரிமைகளும் கூட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டிக்கின்றன.

நாம் சமத்துவமாக பாதுகாப்பாக, கௌரவமாக வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டிருக்கிறது.

எமது நிலங்கள் சூறையாடப்படுகின்றன. நாம் அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

எமது மக்கள் சமத்துவமாக பாதுகாப்பாக, கௌரவமாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்படாது, எமது தலைவிதியினை நாமே தீர்மானித்தவாறு வாழும் உரிமை எமது மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

அதற்கான அரசியற் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

இதனை, இத்தகையதொரு அரசியற் பொறிமுறை தமிழீழ மக்களுக்கு தேவையில்லை என மானுடத்தை நேசிக்கும் மனிதர் எவரும் கூற முடியுமா?

இந்த ஏற்பாட்டைத்தான் நாம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்று கூறுகிறோம்.

தமிழீழத் தனியரசு சாத்தியமில்லை எனவும் கற்பனாவாதம் எனவும் கூறும் எவரிடமும் நாம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.

எத்தகையதொரு அரசியல் ஏற்பாட்டின் கீழ் தமிழ் மக்கள் சமத்துவமாக பாதுகாப்பாக, கௌரவமாக, சிங்களத்தின் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படாது, தமது தலைவிதியனை தாமே தீர்மானித்தவாறு வாழும் உரிமை உறுதி செய்யப்படும் என நீங்கள் கூறுகிறீர்கள்?

சிறிலங்காவின ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் இது சாத்தியம்தானா?

சிறிலங்கா அரசினை இறுகப் பிணைத்திருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒற்றையாட்சி முறையினைக் கைவிட்டு தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்று சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஓர் அரசியற் தீர்வுக்கு வரும் என்று எண்னி அது பெரும் கற்பனாவாதம் இல்லையா?

குறைந்தபட்சம் சிறிலங்கா அரசை பௌத்த அரசு என்ற நிலையில் இருந்து ஒரு மதசார்பற்ற அரசு என்ற மாற்றத்தை சிறிலங்கா அரசியல் அமைப்பில் ஏற்படுத்த எவராலும் முடியுமா?
எவராலும் முடியாது. இதுதான் நாம் இன்று எதிர் கொள்ளும் அரசியல் யாதார்த்தம்.

இந்த அரசியல் யதார்த்தம் நமக்குத் தந்துள்ள ஒரெயொரு தெரிவு, எமது மக்கள் சமத்துவமாக பாதுகாப்பாக, கௌரவமாக, சிங்களத்தின் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படாது, தமது தலைவிதியினை தாமே தீர்மானித்தவாறு வாழும் உரிமை உறுதி செய்யப்படுவது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ தனியரசு என்பதற்காகப் போராடல் மட்டுமே!

அனைத்தலக அரசியல் ஒழுங்கில் மாற்றங்கள் வரும். அது எமக்கான வாய்ப்புக்களையும் கொண்டுவரும்.

நாம் சரணைடையாது தொடர்ச்சியாப் போராடல் ஒன்றே இவ் வாய்ப்புக்களை பற்றிப் பிடிப்பதற்கான கதவுகளைத் திறக்கும்.

தோழர்களே!

இப்போது நாம் இந்த அமர்வை நிறைவு செய்து நாம் வாழும் நாடுகளுக்கு திரும்பும் நேரம் நெருங்கி விட்டது.

நாம் இங்கு எம் மீதுள்ள கடமைகளை எம் தோள்களில் சுமந்தவாறு திரும்புகிறோம். செய்ய வேண்டிய செயற்திட்டங்கள் பற்றியும் அவை கோரும் எமது அர்ப்பணிப்பையும் உழைப்பையும் உணர்ந்தவாறு திரும்புகிறோம்.

விடுதலைப் போராட்டப்பணி என்பது ஓய்வு நேரப்பணியல்ல நேரம் கிடைக்கும் போது மட்டும் செய்வதொன்றும் அல்ல.

நாம் நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புக்களையும் இப் பணியுடன் அணைக்க வேண்டும்.

எமது மக்கள் எம்மை நம்பும் அளவுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்.

தெளிவான கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட செயலும், அச் செயலை நிறைவேற்றி முடிக்கும் ஆற்றலும்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளரத்தெடுக்கும். பேராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பங்காற்றும்.

மாவீரர் கனவை நெஞ்சில் சுமந்தவர்று எமது கடமைகளை நாம் செயற்முனைப்புடன் ஆற்றுவோம் என நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்