தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி: துரோகத்தின் புதிய பரிமாணம்

0
847

nelanthan01. விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக பிரபாகரன் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது. மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார்.

அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்தச் சனங்களுக்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமுமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன.

முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார். தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது சனங்களைப் புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.

நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்தச் சனங்களால் வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது: நிலாந்தன்.

(புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற ஆவணமாக “இரத்த சாட்சி” என்ற அடிப்டையில் நிலாந்தனால் எழுதப்பட்டு சிங்களம் ஜெனிவாவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நம்பப்படும் ஆவணத்தின் ஒரு பகுதி இது.)

02. திரு.குமார் பொன்னம்பலம் தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும்இ எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும்இ விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்துஇ அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன் : தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.

பிரபாகரன் பாசிஸ்ட்,சொந்த மக்களை கொன்றொழித்த கொலைகாரன், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளி, கிறுக்கு பிடித்த மனநோயாளி, தனிநபர் வழிபாட்டின் உச்சம் என்று கூறும் நிலாந்தனுக்கும் குமார் பொன்னம்பலத்திற்கும் என்னதான் தொடர்பு?

தொடர்பு இருப்பதாக சொல்கிறது தமிழ்தேசிய மக்கள் முன்னணி. ஆம் ததேமமு தமது அரசியல் வங்குரோத்துதனத்தின் காரணமாகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. பதவி காய்ச்சல் புலி எதிர்ப்பில் கொண்டே முடித்திருக்கிறது. துரோகத்தின் புதிய பரிமாணம் இது.

பதவி கதிரைகளுக்காக தடம்மாறி “புலீ நீக்கம்” செய்யும் அரசியலை ததேமமு செய்வதாக அரசல் புரசலாக உலாவிய செய்திகளை மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கான நினைவுபேருரையை நிகழ்த்த புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியான நிலாந்தனை மேடையேற்றியதனூடாக தம்மை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறது ததேமமு.

புலிகள் போர்க்குற்றவாளிகள், மனித உரிமைகளை மீறினார்கள் என்று ஒரு புறமும் மறுபுறம் தேர்தல் நேரங்களில் புலிகளை “மாவீரர்கள்’ என்றும் புகழ்பாடி இரட்டை அரசியல் செய்துவரும் கூட்டமைப்புக்கு மாற்றாக மாவீரர்களின் தியாகங்களிலிருந்து அவர்கள் வழி நின்று தம்மை கட்டியெழுப்பியிருப்பதாக சபதம் செய்து அரசியல் செய்ய புறப்பட்ட ததேமமு இப்போது மாவீரர்களையும் தலைவர் பிரபாகரனையும் வசைபாடும் கும்பல்கனை இணைத்து “புலி நீக்கம்” செய்யும் அரசியலில் இறங்கியிருக்கிறது.

இதற்குத்தானே கூட்டமைப்பு இருக்கிறது. இதற்கு ஏன் இன்னொரு கட்சி? கூட்டமைப்பிற்கான மாற்று என்று ததேமமு ஐ வேறு பிரித்து பார்க்கும் இடைவெளியாக இருந்த ஒரே ஒரு கோடு இதுதான். அதை ததேமமு தானே அழித்துவிட்டிருக்கிறது. இனி மக்கள் முன்போய் நிற்பதற்கான தார்மீக அறம்தான் என்ன? அதன் அரசியல்தான் என்ன?

புலிகளை போர்குற்றவாளிகளாக்கி கழுவிலேற்ற துடிக்கும் நிலாந்தனுக்கும் புலிகளின் தியாகங்களிலிருந்து அரசியல் செய்ய புகுந்த ஒரு கட்சிக்கும் இடையில் எந்த அடிப்படையில் தொடர்பு ஏற்பட முடியும் என்று எமக்கு புரியவில்லை. அதை ததேமமு யினர் தான் விளக்க வேண்டும்.

மாற்றுக்கருத்தாளர்கள், எதிர்க்கருத்தாளர்களுக்கு தளம் கொடுப்பது என்பது ஜனநாயக அறம்தான். அதைத்தான் கூட்டடைமப்பு செய்து வருகிறதே.! அதற்கு ஏன் ததேமமு? ஆனால் சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் மகிந்த சகோதரர்களுடன் கைகுலுக்கியபோதும் புலிகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்த போதும் ததேமமு அறச்சீற்றம் கொண்டு பொங்கியதையும் நாம் அறிவோம்.

ஆனால் தற்போது பிரபாகரனை மனநோயாளி – போர்க்குற்றவாளி என்று கூறும் நிலாந்தனை மேடையேற்றி இந்த தமிழ் சமூகத்திற்கு சொல்ல வருவதுதான் என்ன? இந்த செயலை மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் உயிருடன் இருந்தால் எற்றுக்கொண்டிருப்பாரா? மாவிரர்களின் ஆவிகள் உங்களை பார்த்து காறி உமிழ்வதையாவது அறிவீர்களா?

பிரபாகரனை பாசிஸ்ட் என்பவன் வாயால் குமார் பொன்னம்பலத்திற்கு என்ன புகழாரத்தை சூட்ட விரும்புகிறீர்கள். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உண்மையாக இருக்குமா? அப்படியானால் பிரபாகரன் குறித்து அவன் உளறிக்கொட்டிய வார்த்தைகளை நீங்கள் தமிழ் சமூகத்திற்குள் கடத்த விரும்புகிறீர்களா?

இதை தமிழில் நமது மக்கள் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லது பச்சோந்தித்தனம் என்று சொல்வாhர்கள். ததேமமுன்னணியினரான உங்களுக்கு ஏன் இந்த இழி நிலை? இனி மாவீரர்களையும் தலைவரையும் எமது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் யாரையாவது விமர்சிக்கும் தகுதியை விடுவோம் அவர்களை நிமிர்ந்து பார்க்கும் தகுதியாவது கஜேந்திரகுமார் குழுவிற்கு உண்டா?

கூட்டமைப்பிற்கு மாற்று என்றும் புலிகளின் தியாகங்களை மதித்து அந்த பாதையில் பயணிக்கும் ஒரு கட்சி என்று கடந்த 4 வருடங்களுக்கும்மேலாக நம்பிய தமிழீழ மக்களை இப்படி நட்டாற்றில் விடும் திட்டத்தை எத்தனை நாளாகத் தீட்டிக்கொண்டிருந்தீர்கள்?

என்றைக்கு மாவீர்களையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுக்க துணிந்தவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ள முற்பட்டீர்களோ அன்றே உங்களின் முடிவுரை எழுதப்பட்டு விட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு புள்ளியையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

புலிகளை போர்க்குற்றவாளிகள் என்று தான் மட்டுமல்ல பலரது கருத்துக்களையும் ஆவணப்படுத்தி அதை திரைமறைவு இயக்கமாகவே முன்னnடுத்து வரும் நிலாந்தனை மேடையேற்றும் உங்களது ஈனச்செயல்போல் கூட்டமைப்பு கூட இதுவரை செய்யாதது. இது ஒரு ஆபத்தான போக்கு. தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து உடனடியாக நிர்மூலம் செய்யப்பட வேண்டிய ஒரு அரசியல் அமைப்பாக நீங்களே உருவெடுத்துள்ளீர்கள்.

இதன் விளைவாக எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்ற தலைவரின் கூற்றை தெளிவாக உள்வாங்கிய சமூகமாக கூட்டமைப்பைவிட ஆபத்தான சக்திகளாக தற்போது நீங்களே இருக்கிறீர்கள். ஏனென்றால் கூட்டமைப்பு வெளிப்படையாக புலிநீக்கம் செய்யப்பட்ட அரசியலை செய்கிறது. ஆனால் நீங்கள்?

யார் இந்த நிலாந்தன்?

மே 18 இற்கு பிறகு எதிரிகளினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் தமிழர்களின் போராட்ட சக்திகளான புலிகளையும் இல்லாதொழிக்க எதிரிகளால் களமிறக்கப்பட்ட ஒரு நபர்தான் நிலாந்தன். அவரது தொடர் செயற்பாடுகளும் எழுத்துக்களும் அதற்கு ஆதாரமாக இருக்கின்றன. 2009 மே இற்கு முன்பே வன்னயிலிருந்து தப்பியோடிய நிலாந்தன் துணை இராணுவக்குழுவான ஈபிடிபி உடன் தொடர்புகளை ஏற்படுத்துகிறார். இந்த இணைப்பை இவருடன் தப்பியோடிய கவிஞர் கருணாகரன் அவரது உறவினரான ஈபிடிபி சந்திரகுமார் மூலம் ஏற்படுத்தி கொடுக்கிறார்.

முகாமில் இருந்தபடியே முகமுடி போட்டு புனைபெயர்களுடன் தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலம் வரை புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பபடுகின்றன.

தொலைபேசி வாயிலாக மற்றும் இணையம் வழி நிலாந்தன் பலரை தொடர்பு கொண்டு அதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கிறார். தமிழகம் மற்றும் புலத்தில் நிலாந்தனை மேற்கோள்காட்டியும் காட்டாமலும் அது ஒரு பெரிய எதிர்ப்பு அலையை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் புலிகளுக்கும் எதிராக உருவாக்குகிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் புலிகளுக்கு எதிராக மாற நிலாந்தன் ஒரு தனிமனித இராணுவமாக செயற்பட்டது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் பெரிய கதை. அதை எழுதித் தீராது. இவற்றையெல்லாம் அவரே மறுக்க மாட்டார்.

மே 18 இற்கு பிறகு போராட்டத்தை நியாயப்படுத்த புறப்பட்ட எம்மைப்போன்றவர்களுக்குத்தான் நிலாந்தனின் வாக்குமூலங்கள் ஏற்படுத்திய பாதிப்பு தெரியும். ஏன் இன்று கூட புலிகளுக்கு எதிராக வாதம் வைக்கும் அனைவரும் நிலாந்தனின் எழுத்துக்களையே மேற்கோள்களாக காட்டி வருகின்றனர். இப்போது சிங்களம் கூட ஜெனிவாவில் போர்க்குற்ற சாட்சியாக அதை மொழிபெயர்த்து ஆவணப்படுத்துகிறது.

ஆனால் பாவம் ததேமமு இனருக்கு இது எதுவுமே தெரியாதாம்? நாங்கள் நம்பிவிட்டோம். அண்மையில் 3 மாதங்களுக்கு முன்பு இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க இலக்கிய கூட்டம் என்ற பெயரில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் நிலாந்தன். தாயகத்திலிருந்து மட்டுமல்ல புலம் மற்றும் தமிழகத்திலிருந்து இதை புறக்கணிக்குமாறு பலர் வற்புறுத்தியும் அதை நடத்தி முடித்தது ஒரு கும்பல். அந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட நூலில் நிலாந்தனின் ஆக்கத்தை பார்க்க முடியும். முன்புதான் அவர் அப்படி, தற்போது திருந்திவிட்டார் என்று கூறுபவர்கள் இந்த இலக்கிய சந்திப்பு குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?

அது சரி நாளை கருணா, டக்ளஸ், கேபி போன்றவர்களும் இப்படி வாக்குமூலம் வைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அவர்களின் செய்கை போராட்டத்திற்குள் ஏற்படுத்திய பாதிப்புக்களுக்கு என்னதான் தீர்வு?

நிலாந்தன் தற்போது திருந்தினாலும் நிலாந்தனின் வாக்குமூலங்களால் எழுத்துக்களால் புலிகளுக்கும் போராட்டத்திற்கும் எதிராக ஒரு பெரிய இயக்கமே உருவாகியிருக்கிறது. இதற்கு நிலாந்தனின் பதில் என்ன?

தான் திருந்தியது உண்மை என்றால். நிலாந்தன் தலைவர் பிரபாரகரன் குறித்து, போராட்டம் குறித்து எழுதிய கருத்துக்களை பகிரங்கமாக மீள எடுப்பாரா? அல்லது அவரை மேடையேறற்pய கஜேந்திரகுமார் எடுக்க சொல்வாரா? புலிகள் போர்க்குற்றம் செய்யவில்லை என்று வாதாடும் கஜேந்திரகுமார் புலிகளை போர்க்குற்றவாளிகள் என்று பகிரங்கமாக அறிவித்தவரை மேடையேற்றுவதனூடாக தமிழ் மக்களுக்கு சொல்லவரும் செய்திதான் என்ன?

ஆசிரியர் வரதராஜன் அவர்கள் ததேமமு இலிருந்து வெளியேறியது தொடக்கம் அண்மையில் அரியநேந்திரன் எம்பி கஜேந்திரகுமார் பற்றி பரப்பிய சில செய்திகள் வரை பல வதந்திகள் இருக்கின்றன. ஆனால் தற்போது நிலாந்தனை மேடையேற்றி அவற்றை ததேமமு யே நிருபிக்க முற்படுவதுபோல் தெரிகிறது. இது மிகவும் துரதிஸ்டவசமானது.

நிறைய நாம் பேச விரும்பவில்லை. எம்மிடம் மிக எளிமையான கேள்விகளே உள்ளன. புலிகள் குறித்தும் போராட்டம் குறித்தும் தான் பரப்பிய வதந்திகளை நிலாந்தன் மீள எடுக்காதவரை அவர் தமிழ்த்தேசியம் குறித்து பேச எந்த அருகதையும் அற்றவர்.

ததேமமு நிலாந்தனின் வாக்குமூலங்களை சிங்களம் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற ஆவணங்களாக ஜெனவாவில் ஒருவேளை சமர்ப்பிக்க முற்பட்டால் அதற்கு அவரை மேடையேற்றியதனூடாக ஒரு அங்கீகாரத்தை வழங்கி சிங்களத்திற்கு துணைபோவதாக நாம் கருத இடமுண்டு. இதற்கு பெயர் தமிழத்தேசியமா?

நிலாந்தனை மேடையேற்றிய ததேமமு புலிகள் குறித்த அவதூறுகளை நிலாந்தனை மீள பெற வற்புறுத்துமா? அவரையோ அவரது வாக்குமூலங்களையோ ஜெனிவாவிற்கு வராமல் தடுக்க ததேமமு முயலுமா? மீறி நடந்தால் ததேமமு என்ன செய்யப்போகிறது?

இதற்கு எல்லாம் ததேமமு பதில் சொல்லுமா?

நிலாந்தனை மேடையேற்றியதற்கு ததேமமு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் ததேமமு ஐ தமிழ் மக்கள் புறக்கணிப்பதை;த தவிர வேறு வழியில்லை. மாவீரர்களையும் தேசியத்தலைவரையும் கொச்சைப்படுத்தும் நயவஞ்சக பச்சோந்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு தேவையில்லை..

எல்லா துரோகங்ளையும் போல் இந்த துரோகத்தையும் தமிழ் மக்கள் கடப்பார்கள். மக்களும் மாணவர்களும் இணைந்த ஒரு மாற்று இயக்கத்தை நிறுவ நாம் ஒன்று பட்டு உழைப்போம். துரோகிகளுக்கு பாடம் படிப்பிப்போம்.

“வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” என்றார் தேசியத்தலைவர். அவர் வழி நிற்கும் நாம் தமிழ் மக்களிடையே தவறான வரலாற்றை கற்பிக்கும் யாரையும் அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

கஜேந்திரகுமார் குழுவை மாவீரர்களினதும் குறிப்பாக குமார்பொன்னம்பலத்தினது ஆத்மா மன்னிக்கட்டும்.

ஈழம்ஈநியூஸ்.