தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் போராளிகள் இயக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கி விடுதலைப்புலிகளால் தனிப்பெரும் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

ஆனால் எந்த நோக்கத்திற்காக அது உருவாக்கப்பட்டதே அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி நாட்களிலும் தமிழ் மக்களின் அழிவு தொடர்பான அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருந்தது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தவறுக்கு இந்திய சார்பு நிலை கொண்ட தன் தலைமையும், பெரும்பாலான உறுப்பினர்களுமே காரணமாக இருந்தனர். போரின் முடிவின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் சிங்கள அரசுக்கான அழுத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்கும் அது தள்ளப்பட்டது. ஜனநாயக வழியிலான போராட்டங்களைக் கூட அவர்கள் மேற்கொள்ள முன்வரவில்லை.

 
அது மட்டுமல்லாது தமிழ்தேசியம் பேசுபவர்கள் இந்திய அரசின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி உதயமாகியது. எனினும் தமிழரசுக் கட்சியின் ஊடக பலம், இந்திய ஆதரவு என்பன தமிழ் மக்களுக்கு தவறான பாதையை காண்பித்து துரோகிகள் தியாகிகளாகவும், தேசத்தின் விடுதலைக்கு உழைத்தவர்கள் துரோகிகளாகவும் காண்பிக்கப்பட்டனர்.

 
ஆனால் ஆசியக் கண்டத்தின் சாபக்கேடான இந்த உழல் நிறைந்த அரசியல் மற்றும் ஊடகத்துறையின் ஆட்டங்களுக்கு எல்லாம் முடிவுரை எழுதியது சமூக வலைத்தளம். அதன் தாக்கம் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் எதிரொலித்தது.

 
ஆனால் தற்போது வடமாகாணசபைக்கான தேர்தல் வரும் நிலையில் வட தமிழீழத்தில் இரண்டு புதிய அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன.

 
விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் எழிலன் அவர்களின் மனைவி அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வடமாகாணசபையின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

 
இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாத்துச் செல்கின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன், அனந்தி சசிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் என அதன் பட்டியல் நீளம். ஆனால் இன்னும் பலர் வெளியேறலாம் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

 
இதற்கான காரணம் என்ன? அரசியல் தீர்வு தொடர்பாக தொடர்ச்சியாக பொய்கயை கூறிவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, தாம் கூறியது பொய் என்பதைக் கூட மறுக்காத அதன் இறுமாப்பு, எந்தவித வெக்கமுமின்றி தொடர்ந்து பொய்யை கூறி மக்களை ஏமாற்றிவரும் தலைவரின் கீழ் இயங்கும் உறுப்பினர்கள். தமிழ் மக்களின் போராட்டங்களைக்கூட கண்டுகொள்ளாத அதன் போக்கு, இந்திய – சிறீலங்கா விசுவாசம் என நாம் பலவற்றை இங்கு முன்வைக்கலாம்.

 
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களும் அதன் போக்கை கண்டு அஞ்சுவதாகவே தெரிகின்றது.

 
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக களமிறங்க காரணம் என்ன?

 
தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்கு சென்ற விக்கினேஸ்வரனை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு உட்பட பலர் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் முடிவில் சில நகர்வுகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போதைய பூகோள அரசியலை இந்த நகர்வுகள் அல்லது மாற்றங்கள் தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த உதவும் என்று நம்பப்பட்டது.

 
ஆனால் இந்தியா இந்த முடிவுகளை அறிந்து கொண்டது, விக்கினேஸ்வரனையும், அனந்தியையும் இந்திய உளவுத்துறை ஓரங்கட்ட முனைந்தது. அதனை தமிழத் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்தியது. ஆனால் நிலமை தலைகீழாகிவிட்டது.

 
சிறீலங்காவிடம் இருந்து தீர்வினைப் பெறமுடியாது என்பதே விக்கினேஸ்வரனின் கூற்று ஆனால் அதனை பலர் சிறீலங்காவிடம் இருந்து தீர்வினைப் பெறமுடியாது என்றால் சீனாவிடம் இருந்தா அல்லது அமெரிக்காவிடம் இருந்தா தீர்வைப்பெறப்போகின்றார் என கேலியாகக் கேட்டிருந்தனர் ஆனால் அவர்கள் கேலியாக் கேட்டதில் தான் உண்மை பொதிந்துள்ளது.

 
தமிழ் மக்களுக்கான தீர்வை சிறீலங்கா தரப்போவதில்லை, அதனை இந்தியாவும் அனுமதிக்கப்போதில்லை. ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியலில் நாம் எடுக்கும் பங்கு எமக்கான தீர்வின் பாதையை நிர்மாணிக்கும், அதன் காரணகர்த்தாவாக சீனாவோ அல்லது அமெரிக்காவோ இருக்குமே தவிர இந்தியாவோ அல்லது சிறீலங்காவோ இருக்காது. எனவே நாம் அதனை நோக்கி நகர்வோம்.

 
ஈழம் ஈ நியூஸ்.