சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இந்தியாவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது எனபதில் மாற்றுக் கருத்துக் கிடையாது ஆனால் அதில் மேற்குலகத்திற்கும் பங்குள்ளதா என்பதே பிரதான கேள்வி.

 
ஏனெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற இந்த அரசியல் மாற்றத்திற்திற்கு பின்னர், மேற்குலகம் சார்ந்த அறிக்கைகள் எல்லாம் சிறீலங்காவில் இடம்பெற்ற மாற்றத்திற்கு ஆதரவானதாக இல்லை.

 
சிறீலங்கா அரசு அதன் அரசியல் வரைமுறையை மதிக்க வேண்டும் என்றும், பதவியில் அமர்வதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் எனவும் கூறுகின்றது அமெரிக்க வெளிவிவகார செயலகத்தின் அறிக்கை. சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதித்தன்மையால் அங்கு செல்பவர்களுக்கான பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது பிரித்தானியா.

 
சிறீலங்காவின்; நிலையை தாம் கவலையுடன் அவதானித்து வருவதாகவும், மக்களை அமைதி காக்குமாறும் மேற்குலகத்தின் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அதிதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

 
அதாவது இந்தியா தன்னிட்சையாக செயற்பட்டுள்ளதாகவே அறியப்படுகின்றது. அதாவது துறைமுகம் ஒன்றை வாடகைக்கு வழங்கும் முயற்சி ஒன்றிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பிரித்தானியவைத் தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 
ஆனால் யாருக்கு எந்த துறைமுகம் என்பதை அது தெரிவிக்க மறுத்துவிட்டது. எனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கொழும்பு காலிமுகத்திடல் அபிவிருத்தித் திட்டத்தையும் சீனா கைப்பற்றிய பின்னர் திருமலைத்துறைமுகத்திற்கான பேரம்பேசல்களே அண்மையில் இடம்பெற்று வந்தன ஆனால் அதனை அமெரிக்காவுக்கு வழங்குவதை இந்தியா விரும்பவில்லை என்பதே தகவல். இது தொடர்பான விரிவான ஆய்வு ஒன்றை நாம் பின்னர் தருகின்றோம்.

 
எனினும் தற்போது சிறீலங்காவில் பேரினவாதக்கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது, பிராந்திய வல்லரசுகளினதும், உலக வல்லரசுகளினதும் போட்டியாக இருக்கின்றபோதும், அதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் சில நன்மைகளை அடைய முடியும் என்பதில் எந்த மாறறுக் கருத்தும் இருக்க முடியாது.

 
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தீர்மானத்தை எட்டமுடியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் உரிமைக்காக போராடும் இனத்தின் பிரதிநிதிகளாக தம்மைச் சித்தரித்துக் கொண்டுள்ள இவர்கள் ஆதரவு கொடுப்பதற்கான காரணங்களைத் தேடுவதும், அனைத்துலக தூதரகங்களின் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் தான் தமது முடிவுகளை கூறப்போதவதாகவும் தெரிவிப்பது வேடிக்கையானது.

 
ஏனெனில் வெளிநாட்டு தூதுவர்களின் நன்மைக்காக பணியாற்றப்போவதாகக் கூறி தமிழ் மக்களிடம் அவர்கள் வாக்குக்களை கேட்கவில்லை. அல்லது வட இந்தியர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூறி அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.

 
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தற்போதைய கூட்டமைப்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அன்றைய கூட்டமைப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது ஊடக வியாபாரிகள், இணையத்தள வியாபாரிகள், அண்டைய நாட்டு உளவு அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விடுதலைப்புலிகளால் புறம்தள்ளப்பட்ட ஒட்டுக்குழுக்கள் என்பவர்களைக் கொண்டே தற்போதைய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 
எனவே அவர்களிடம் நாம் இனப்பற்றை எதிர்பார்க்க முடியாது தான் எனினும் தமிழ் மக்களிடம் வாக்குக்களை கேட்டு வரும்போது அவர்கள் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்தாவது அவர்கள் பின்வரும் நிபந்தனைகளில் சிலவற்றையேனும் சிறீலங்கா அரசுக்கு விதிக்க முடியும்.

 
• அரசியல் கைதிகள் அனைவரினதும் நிபந்தனையற்ற விடுதலை

 
• சிறீலங்கா இராணுவத்தினரால் தற்போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்.

 
• வடக்கில் சட்டம் ஒழுங்கை சிறீலங்கா அரசு நிலைநாட்டவேண்டும் இல்லை என்றால் காவல்துறை அதிகாரம் வடமாகாண சபைக்கு வழங்கப்படவேண்டும்.

 
• வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சிறீலங்கா இராணுவம் வெளியேறவேண்டும் அல்லது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு குறைக்கப்படவேண்டும்.

 
• வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரம் தொடர்பான பேச்சுக்களுக்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

 
• காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்படவேண்டும் மற்றும் அதற்கான தீர்வு விரைவில் எட்டப்படவேண்டும்.

 
• சிங்களக் குடியேற்றம் மற்றும் மதத் திணிப்புக்கள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.

 
இவை தான் தற்போதைய முக்கிய தேவையாகும் அதனை விடுத்து மேற்குலகத்தினாலும், இந்தியாவினாலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஜெனீவாத் தீர்மானத்தை கையில் எடுக்கின்றார் சுமந்திரன். அதாவது குற்றவாளியிடம் வழக்கை ஒப்படைக்கின்றார். இதன் மூலம் ஒன்று எமக்கு புலப்படுகின்றது. அதாவது சிறீலங்கா அரசுக்கு சாதகமான நிபந்தனைகளை தேடி அலைகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

 
ஜெனீவா தீர்மானத்தின் நடைமுறையில் அனைத்துலகத்தின் பங்களிப்பு முக்கியமானது அதனை புலம்பெயர் சமூகம் கையில் எடுக்கவேண்டும். ஆனால் நிபந்தனை என்ற பெயரில் அதனை மகிந்தாவிடம் ஒப்படைத்து அந்த தீர்மானத்தையும் அழித்துவிடத் துடிக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

 
அவர்களின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகின்றது அதாவது மகிந்தாவுக்கான ஆதரவுகளை அவர்கள் எவ்வாறு வழங்கவேண்டும், அதற்கு எவ்வாறு வலுவற்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்பது எல்லாம் அவர்களுக்கு இந்தியாவால் ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது.

 
இது மிகவும் திட்டமிட்ட நகர்வாகவே தோன்றுகின்றது, அதாவது நிபந்தனை என்ற போர்வையில் ஜெனீவாத் தீர்மானத்தையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டே சிதைக்கப்போகின்றது இந்தியா.

 
ஆனால் கூட்டமைப்பும் அதன் ஆதரவாளர்களும் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளவேண்டும் அதாவது அவர்கள் மேலும் மேலும் துரோகம் செய்வார்களேயானால் வரலாற்றில் இருந்து மறைந்தே போவார்கள்.

 
நன்றி
ஈழம் ஈ நியூஸ் ஆசிரியர் பீடம்.