சிறீலங்காவின் இரு பிரதான இனவாதக் கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்திற்காக போராடிவரும் நிலையில் எந்ந ஒரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் கண்டனத்திற்குரியது.

 
தமிழின அழிப்பில் தென்னிலங்கையின் இரு பெரும் கட்சிகளும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல, தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஒன்றே. ஒரு கட்சியை தண்டிப்பதற்கு அல்லது சிங்கள தேசங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அல்லது அவர்களின் கடும்போக்கான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே அரச தலைவர் தேர்தலின் போது ஏதாவது ஒரு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதுடன்டு.

 
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கே தமது வாக்குகளை அளிப்பதுண்டு. அவ்வாறு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை பெற்ற பின்னர் தமது பணத் தேவைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப்பெரும் இன அழிப்பை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்குவது மிகப்பெரும் வரலாற்று துரோகமாகும்.

 
தென்னிலங்கையில் நெருக்கடிகள் வரும்போது அவர்களை காப்பாற்றி எம்மை அழிக்க அவர்களுக்கு துணைபுரிவதற்காக தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எந்தவித நிபந்தனையுமின்றி காப்பாற்ற வேண்டும் என்றால் கடந்த தேர்தலின் போது தமிழ் மக்கள் விஜயகலா மகேஸ்வரனின் குழுவுக்கு வாக்களித்து அவர்களில் 14 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.

 
மேற்குலகம் வழங்கிய போலியான வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கிய பணத்தையும் வாங்கிக்கொண்டு தமிழ் மக்களின் கோரிக்கைகளை விற்றுப் பிழைக்கும் காரியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள் பரிசீலினை செய்யவேண்டும்.

 
மகிந்த ராஜபக்சாவுக்கு ஆதரவுகளை வழங்குவதானால் பின்வரும் நிபந்தனைகளுக்கு மகிந்தா உடன்பட்டு எழுத்து மூலமான பதிலைத் தரவேண்டும் என சம்பந்தர் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

 
அவர் தெரிவித்த கோரிக்கை பின்வருமாறு:

 
நம்பிக்கையுடைய உறுதியான அதிகாரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படையில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் நாளாந்த தேவைகளை மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக பிராந்திய சபையின் ஊடாக வழிவகுக்பப்பட வேண்டும் என்பது தான் அந்த தீர்வுத் திட்டம்.

 
கேட்பதற்கு நான்றாகத் தான் இருக்கின்றது, ஆனால் அதற்கான பதிலை மகிந்தா கூறவில்லை. எனினும் ரணில் விக்கிரமசிங்காவிடம் இது போன்ற கோரிக்கைக்கான எழுத்து மூலமான உறுதி மொழிகளை வாங்கியுள்ளாரா சம்பந்தன் என்றால் அதற்கான பதிலைத் தெரிவிக்க சம்பந்தர் மறுத்துவிட்டார்.

 
ரணிலுடன் ஒரு வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையின் எந்த கட்சியையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையில்லை, மேற்குலகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியமும் எமக்கில்லை.

 
கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் மக்கள் போரில் தோல்வியடைந்து சரணடைந்த அடிமை வாழ்வையே அனுபவித்து வருகின்றனர். கடந்த ஒன்பது வருடங்களில் மேற்குலகம் எமது இன்னல்களை போக்கவில்லை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நல்லாட்சி அரசு என்ற அரசும் எமக்கு எதனையும் செய்யவில்லை. அதாவது எமது அடிப்படைப் பிரச்சனைகளை கூட தீர்க்கவில்லை.

 
ஒரு மிகப்பெரும் போரினால் பாதிப்புக்களைச் சந்தித்த இனம் என்ற ஒரு அனுதாபத்தைக் கூட யாரும் எமக்கு காண்பிக்கவில்லை. எனவே இந்திய நலனையோ அல்லது சர்வதேச நலனையோ அல்லது சிங்கள தேசத்தின் நலனையோ காப்பாற்ற வேண்டிய தகமையில் இருந்து அவர்கள் எம்மை அகற்றிவிட்டனர். நாம் அவர்களுக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத்தேவையில்லை.

 
போரினவாதி ரணிலைக் காப்பாற்றுவதற்கு மாற்றீடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன கோரிக்கைகளை அல்லது உறுதிமொழிகளின் முன்வைத்துள்ளது என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

 
இல்லையேல் ஐ.தே.காவிடமோ அல்லது அதற்கு ஆதரவான நாடுகளிடமோ மறைமுகமாக பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு நிபந்கதையற்ற ஆதரவை வழங்கியதாகவே நாம் கருத இடமுண்டு. அதாவது ஒட்டுக்குழு டக்களஸ் தேவானந்தாவிற்கும், கட்சி தாவியதால் துரோகி என்று அழைக்கப்படும் வியாழேந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்த வேறுபாட்டடையும் நாம் காணமுடியாது.

 
ஓட்டுக்குழு தலைவன் டக்களஸ் கூறுகின்றான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 9 ஆம் நாளில் இருந்து நிவாரணம் வழங்கப்படுமாம், வியாழேந்திரன் கூறுகின்றார் எதிர்வரும் மார்கழி மாதம் 31 ஆம் நாளுக்கிடையில் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுமாம், அரசியல் கைதிகள் தொடர்பிலும் நடவடிக்கையாம்.

 
ஆக மொத்தத்தில் துரோகிகள் கூட ஒரு நிபந்தனையுடன் தான் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள பேரினவாதக் கட்சிக்கு தாம் வழங்கும் ஆதரவுக்கான நிபந்தனைகளை தெரிவிக்கமறுத்தால் தமிழ் மக்கள் அனைவரும் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பதுடன், ஏகமனதாக ஒரு மாற்று அரசியல் தலைமை ஒன்றை நாம் விரைந்து உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

 
ஈழம் ஈ நியூஸ்