தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பகுதி 2- பிஞ்ஞகன்

0
900

இலங்கையின் வடபகுதியில் தமிழர்களின் இனப்பரம்பல் 14 இலட்சத்தால் வீழ்ச்சி யடைந்துள்ளமையை 2011-2012 புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009 மே மாதமளவில் தமிழின அழிப்புடன் தமிழர்களின் போரிடும் வலுவும் அழிக்கப்பட்ட பின்னர் வன்னிப்பிரதேசத்தின் அரச பொதுக் காணிகள் யாவுமே இராணுவக் குடியிருப்புக்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து கடந்த 60 வருடங்களில் அபகரிக்கப்பட்ட நிலத்தைவிட தமிழர்களின் போரிடும் வலுவாகிய விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரான கடந்த 5 வருடங்களில் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலம் பன்மடங்கு அதிகமானது என்று பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

2009 மே வரை தமிழர்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்ற தொடர் படுகொலைகளைப் புரிந்த அரசு இன்று தமிழ் இனஅழிப்புப் போரில் உயிர்தப்பி மீள்குடியேறிய தமிழர்களை காட்டு யானைகளை விட்டு அச்சுறுத்தி வெளியேற்றும் உத்தியைக் கையாண்டு வருகிறது. கடந்த 20 வருடங்களில் வன்னிப் பகுதியில் யானை தாக்கி எவருமே இறந்ததில்லை. ஆனால் 2014 மார்ச் 09 ஆம் திகதி கிளிநொச்சி முரசு மோட்டை முருகானந்த கல்லூரியின் உயர்தர கலை பிரிவு மாணவன் சிவசுப்பிரமணியம் கஜானன்(18) யானை தாக்கிக் உயிரிழந்துள்ளான். (http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/102682-2014-03-10-01-57-19.html) தென்பகுதியில் மதம் பிடித்து அலையும் யானைகளை வனஇலாகவினர் பிடித்து மன்னார்‚ முல்லைத்தீவுப் பகுதியில் விடுவதன் நோக்கமென்ன? யானை தாக்கி பாடசாலை மாணவன் ஒருவன் இறந்துள்ளமை யுத்தத்தின் பின்னர் தமிழர்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றும் நில ஆக்கிரமிப்பு வடிவத்திற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

ஒரு புறம் யானைகளை விட்டு அச்சுறுத்தும் சிங்கள அரசு மறுபுறம் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தமிழர்களை அனுப்புகிறது. கடற்படை மூலம் இலங்கையரசு மேற்கொள்ளும் இந்த நிகழ்ச்சிநிரலை இலங்கையின் காவற்றுறையின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. பணம் இல்லாதவர்களிடம் காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா சென்று பணத்தை அனுப்புமாறு கூறும் சிங்களக் கடற்படை முகவர்கள் அகதிகள் படகு வருவதை அவுஸ்திரேலியக் கடற்படைக்கு அறிவித்து தாய்நிலத்தை விட்டுச் சென்ற தமிழர்களை நட்டாற்றில் தத்தளி்க்க விடுகிறது.

இந்நிலையில் தமிழ்நில அபகரிப்பின் வரலாற்றுப் பின்புலத்தின் 2 வது பகுதியை நோக்குவோம்.
Singala-settபடம் 1 – 1948 முதல் 2008 வரை தமிழர் பிரேதேசத்தில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்ளைக் காண்பிக்கிறது.

4. மகாவலி அபிவிருத்தித் திட்டமும் தமிழர் தாயகக் கோட்பாட்டின் சிதைப்பும்

கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டம் இதுவாகும். சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தவும் மின்னுற்பத்திக்காகவும் என மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசன திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏறத்தாழ 300 கிலோமீற்றர் நீளமானதும் இலங்கையின் மிக நீண்டதுமான மகாவலி கங்கை நீர்ப்படுகை (Catchment Area) மூலம் தீவின் மொத்த நிலப்பரப்பில் பதினாறில் ஒரு பங்கு செழிப்புறுகிறது. கண்டிநகரில் உற்பத்தியாகி வடபகுதி நோக்கி வந்து திருகோணமலைக் கடலில் சங்கமிக்கும் மகாவலி நீரானது புராதன காலத்திலிருந்து நீர்ப்பாசனத்திற்காக அரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது

1970 இல் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதென அரச அதிகாரிகளாலும் அன்றைய சனாதிபதியாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது. அம்பாறை முதல் திருகோணமலை வரையான தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதும் இத்திட்டத்தின் இன்னொரு இலக்காகும்.

மகாவலித் திட்டத்தின் பிரதான 3 உப நீர்பாசனத் திட்டங்களில் ஒன்றாகிய மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டமானது தமிழர்களின் மரபுவழித் தாயக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை‚ கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் 1000 கெக்ரெயர் நிலம் ஒதுக்கப்பட்டது. 25000 சிங்களவர்களைக் குடியேற்றுவதை நோக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட தெனினும் 1983 இல் நாடளாவிய ரீதியில் நிகழ்ந்த தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து 30000 சிங்களவர்கள் தென் பகுதியில் இருந்து பேரூந்துகள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி குடியேற்றப்பட்டனர். இதன்போது 900 தமிழ்க் குடும்பங்கள் சிங்கள ஆயுதப்படைகளாலும் குடியேற்றவாசிகளாலும் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மட்டு-பொலநறுவை எல்லையில் அமைந்துள்ள வெலிக்கந்தையில் பாரியளவான நிலப்பரப்பில் ஒரு சிங்களக் குடியேற்றம் நிறுவப்பட்டது. 3000 இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டு இக்குடும்பங்களின் வாழ்வாதார விவசாயத்திற்காக கல்லோயா திட்டத்தில் இருந்து நீர் வழங்கப்பட்டது.

இதனை விட தம்பாலை‚ மாணிக்கப்பிட்டி‚ பள்ளித்திடல் முதலான முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலமும் புதுவெளி‚ மன்னம்பிட்டி‚ முத்துக்கள் முதலான தமிழர் பூர்வீக நிலமும் அபகரிக்கப்பட்டு அங்கு பாற்பண்ணை அமைக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இக்காலப் பகுதியில் மாணலாறு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசமானது வெலிஓயா என்ற சிங்கள ஊராக மாற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்கு குடியேற்றப்பட்ட ஒவ்வோரு சிங்களக் குடும்பத்துக்கும் ரூ.800 மாதாந்தம் வழங்கப்பட்டது. 1984 இல் இத்தொகையானது சாதாரண அரச ஊழியர் ஒருவரது சம்பளத்தை விட உயர்வானதாகும். இக்குடியேற்றத் திட்டமானது பல்வேறு பகுதிகளாக முன்னெடுக்கப்பட்டது. 1980களின் இறுதிவரை 50000 சிங்களவர்கள் மணலாற்றில் குடியேற்றப்பட்டனர். அதேவேளை மணலாறு பிரதேசமானது தமிழர் மரபுவழித் தாயகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சிங்களவர் பெரும் பான்மையாக வாழ்ந்து வரும் அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

5. வெலிஓயாவின் குடிப்பரம்பல் வரலாறு

வெலிஓயா என்பது மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசப் பெயரின் சிங்கள மொழி பெயர்ப்பாகும். மணலாறு என்பது முல்லைத்தீவு‚ வவுனியா‚ திருகோணமலை ஆகிய 3 தமிழ் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பிரதேசமாகும். படம் 2 இல் சிவப்பு மையினால் எல்லையிடப்பட்ட பிரதேசமே மணலாறு ஆகும்.

Welioya
வவுனியா மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திற்குரிய 1000 ஏக்கர் நிலமானது தமிழ் தனவந்தர்களுக்கு நீண்டகால குத்தகையடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. இவை டொலர் பாம்‚ கென்ற் பாம்‚ சிலோன் தியேட்டர் முதலான பெயர்களால் அழைக்கப்பட்டன. இதனைவிடவும் 1000 ஏக்கர் தனிப்பட்ட நிலமானது தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தென்னமரவடி‚ பாறையனாறு முதலான இடங்கள் மணலாறு பிரதேசத்திற்குரியதாக இருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய மணலாற்றுப் பகுதியானது கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ ஒதியமலை‚ நாயாறு முதலான பிரதேசங்களைக் கொண்டிருந்தது. 1980 இல் மணலாறு பிரதேசமானது விசேட உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சிங்கள உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் என்ற போர்வையில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். பாலங்கள்‚ பெருந்தெருக்கள்‚ வைத்தியசாலைகள்‚ பாடசாலைகள் முதலான உட்கட்டுமானங்கள் அமைக்கக்பட்ட பின்னர் இப்பிரதேசத்தில் இருந்த 13000 தமிழ்க் குடும்பங்கள் படுகொலைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1984 இல் நிகழ்ந்த திட்டமிட்ட தொடர் தமிழினப் படுகொலைகள் மணலாற்றினை விட்டு தமிழர்களை விரட்டியது.

மலையகப் பகுதியில் தமிழர்களுக்கெதிரான தொடர் கலவரங்களைத் தொடர்ந்து மலையத்தில் இருந்து வெளியேறிய தமிழர்கள் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான குத்தகை நிலங்களில் குடியேறினர். சிங்கள அரசானது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் குடியேறிய மலையகத் தமிழர்களை வெளியேற்றுவதை தனது முதல் இலக்காகக் கொண்டது. 1980 இன் ஆரம்பகாலப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகள் குறிப்பாக சிறைக்கைதிகள் டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

பதவியாவில் முகாம் அமைத்திருந்த இலங்கைப்படையினர் இப்பகுதியில் சுற்றுவளைப்பு என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்து படுகொலைகளைப் புரிந்தனர். 1984 நொவெம்பர் 29 முதல் 1984 டிசம்பர் 2 வரை மணலாற்றில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்த சிங்கள இராணுவம் ஒதியமலை நோக்கி நகர்ந்தது. 1984 டிசம்பர் 1 ஆம் திகதி ஒதியமலை சுற்றிவளைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் இருந்த 32 இளைஞர்கள் பொது மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 2 ஆம் திகதி குமுழமுனைக் கிராமம் சுற்றிவழைக்ப்பட்டு 7 இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 3 ஆம் திகதி மணலாறு கிராமம் சுற்றிவழைக்கப்பட்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் போது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பலர் வீடுகளில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

அயலில் இருந்த பொது மக்கள் நிலைமையை அறிந்து வீடுகளைவிட்டு தப்பி ஓட அவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் மீளவந்து குடியேறுவதைத் தடுப்பதற்காக மக்கள் வெளியேறிய வீடுகளும் உடைமைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ கருநாட்டுக்கேணி‚ நாயாறு‚ அலம்பில் ஆகிய பகுதிகளை சுற்றிவழைத்த சிங்கள இராணுவம் 131 தமிழர்களைப் படுகொலை செய்தது. இவர்களில் 21 பேர் சிறுவர்கள். இப்படுகொலைகைளைத் தொடர்ந்து வெளியேறிய மக்கள் 2008 வரை வன்னிப்பகுதியிலே இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 2009 தமிழின அழிப்பு யுத்தத்தின் போது முல்லைத்தீவின் மணலாற்றுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

2009 யுத்தத்தின் இறுதியில் நடந்தவற்றை விசாரணை செய்யக் கோரும் சருவதேசம் இலங்கை அரசு தனது நாட்டு மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை குறித்து மௌனம் சாதிக்கிறது. 1984 காலப் பகுதியில் மணலாற்றில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கோ பின்னர் நடந்த தமிழினப் படுகொலைக்கோ இலங்கையில் விசாரணை நடத்தப்படவும் இல்லை நீதி வழங்கப்படவும் இல்லை. ஆனால் தமிழினத்தை – தமிழ்நிலத்தைப் இனஅழிப்பிலிருந்து பாதுகாக்க ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களை – விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கையரசுடன் இணைந்து அழித்த கொடுஞ்செயலுக்கு சருவதேசமும் துணை நின்றது.

(தொடரும்)

-ஈழம் ஈ நியூஸ் இற்காக பிஞ்ஞகன்

பகுதி ஒன்றை பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://http://www.eelamenews.com/?p=115421