27 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவித் தமிழ் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு நீதிக்குப் புறம்பாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசும், அதன் நீதித்துறையும், தற்போது தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் முற்றாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

 
இந்திய சிறீலங்கா அரசுகள் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தொடர்பான தகவல்களையும்;, அதற்கு எதிராக தமிழ் மக்கள் மேற்கொண்ட விடுதலைப்போரையும் ஆதாரமாகக் கொண்டு பழ நெடுமாறன் அவர்களால் 1993 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலை தடை செய்துள்ள இந்திய மத்திய மற்றும் அதன் கூட்டாளியான மாநில அரசுகள் தற்போது அவர்களின் நீதித்துறையின் மூலம் அவற்றை அழிக்க உத்தரவிட்டுள்ளது உலகத் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
தமிழீழத்தில் மற்றும் தழிழகத்தில் வாழும் தமிழ் மக்களினதும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் குரல்வளையை நெரிக்கும் இந்திய ஏகாதிபத்தியத்தின் வடிவமே இந்த நூல்களின் அழிப்பாகும்.

 
தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களை அழிப்பதிலும், தமிழ் மொழியை அழிப்பதிலும், தமிழகத்தில் தமிழர் அல்லாதவர்களின் ஆட்சியை அமைப்பதிலும் திட்டமிட்டு செயற்பட்டுவரும் இந்திய கொள்கைவகுப்பாளர்களின் மற்றுமொரு நகர்வே இந்த நூல்களின் அழிப்பாகும்.

 
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்கி ஒடுக்கி தமிழ் மக்களை அடிமைகளாக ஒரு அச்சமுள்ள சூழ்நிலையில் வைத்திருப்பதற்கே இந்திய மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகின்றது.

 
அதன் வெளிப்பாடுகள் தான் தமிழகத்தில் தொடரும் திராவிட ஆட்சிகள், விடுதலைப்புலிகள் – இந்திய போர், 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனஅழிப்பு போர், அண்மையில் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை என்பனவாகும்.

 
தமிழர் அல்லாத ஆளுனர்களை தமிழத்தில் நியமித்து அவரின் மூலம் தமிழ் மக்களின் நீதியை முடக்குதல், பேச்சு சுதந்திரத்தை அழித்தல், தமிழ் மக்களை அடிமை நிலையில் வைத்திருந்தல் போன்ற செயற்பாடுகளை இந்திய மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதிகாரம் மித மிஞ்சிப்போன ஆளுனர்கள் தமது பசிக்கு தமிழ் பாடசாலைச் சிறுமிகளையும் விடுவதில்லை.

 
ஏனெனில் வேற்று மாநில ஆளுனர்களின் பார்வையில் தமிழ் மக்கள் எல்லாம் அவர்களின் அடிமைகள் அதற்கான அதிகாரத்தை இந்திய மத்திய அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. அவர்கள் தமிழகத்தின் நீதித்துறையின் மீதும் தமது ஆதிக்கத்தை செலுத்தலாம். அதன் வெளிப்பாடுகள் தான் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய புரோகித் என்ற ஆளுனர், அப்பாவி தமிழ் மக்கள் 7 பேரின் விடுதலையையையும் தடுத்து வைத்துள்ளான்.

 
தமிழகத்தில் நாம் ஏழு கோடி பேர் உள்ளோம், 70 மேற்பட்ட தமிழ் கட்சிகள் உள்ளன ஆனால் யாரும் எதுவும் செய்ய இயலவில்லை, ஏனெனில் நாம் அடிமைகள். தனி ஒருவனாக அந்த ஆளுனர் செய்யும் செயல்களை தட்டிக் கேட்பதற்கான துணிவு யாருக்கும் கிடையாது. ஏனெனில் பல பத்து ஆண்டுகளான நாம் அடிமைகளாக வாழப் பழகிவிட்டோம்.

 
அதன் தொடர்ச்சியே தற்போது ஒரு நீதி மன்றம் தமிழ் இனத்தின் விடுதலை தொடர்பாக எழுதப்பட்ட நூலை எரிக்கச் சொல்கின்றது, அன்று யாழ் நுலகம் எரிக்கப்படும்போது தமிழகம் அமைதி காத்தது, இன்று தமிழகத்தில் நூல் எரிக்கப்படுகின்றது, நாளை தமிழ் மொழிப் பாடசாலை நூல்கள் அனைத்தும் எரிக்கப்படும். அப்போதும் நாம் உரத்துக் கூச்சலிடுவோம் தமிழர் நாம் அடிமைகள் என்று.

 
இன்று சிறீலங்காவிலும் தமிழ் மக்களின் அரிய பொக்கிசமான நூலகத்தை கொழுத்திய சிங்களக் கட்சியை காப்பாற்றுவதற்கு ஒரு தொகுதி தமிழ் அடிமைகள் தீயாக பணியாற்றுகின்றன. ஆம் எந்த நிபந்தனையும் இன்றி அடிமைத் தொழில் புரிவதற்கு அவர்கள் வெக்கப்படுவதில்லை. அதே போல அந்த அடிமைகள் புரியும் காரியங்களை அப்படியே விழுங்கி பின்னர் வாந்தி எடுப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள அந்த அடிமைகளின் வாரிசுகளும் பின்நிற்பதில்லை.

 
ஓவ்வொரு தமிழ் மகனும் தனது அடிமை மனநிலையில் இருந்து தன்னை விடுவிக்கும் வரை எமக்கு விடுதலை கிட்டப்போவதில்லை. அதுவரை நாம் கொல்லப்படுவோம், நாம் அவமானப்படுத்தப்படுவோம், நாம் ஏமாற்றப்படுவோம், எமது மொழி அழிக்கப்படும், எமது நூல்கள் எரிக்கப்படும் இவை அனைத்தும் தொடரும்.

 
ஆனால் ஒன்று யாராவது உணர்வுள்ள தமிழர் இருப்பார்களானால் நெடுமாறன் அவர்களின் நூலை மின்னியல் நூலாக மாற்றி சமூகவலைத்தளங்களில் பரப்புங்கள், அப்போது பார்ப்போம் இந்திய ஏகாதிபத்தியம் சமூகவலைத்தளத்தை எரியூட்டுமா என்று.

 
நன்றி
ஈழம் ஈ நியூஸ்.