தமிழ் தேசியத்தைக் காப்பாற்ற தேர்தலில் வாக்களியுங்கள்

0
898

சிறீலங்கா அரசின் 13 ஆவது திருத்த சட்டமோ அல்லது மாகாணசபையோ தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பது தெளிவானது. ஆனால் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக சிறீலங்கா அரசினாலும், இந்திய அரசினாலும் நடத்தப்படும் வட மாகாணசபைத் தேர்தலானது இனஅழிப்பின் மற்றும் ஒரு வடிவமாகும்.

அதாவது தனக்கு சார்பான ஒட்டுக்குழுக்களை களமிறக்குவதன் மூலம் சிங்களக்குடியேற்றம், காணி அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என தொடரும் மறைமுக இனஅழிப்பை அரசியல் அதிகாரத்துடன் மேற்கொள்ள சிறீலங்கா திட்டமிட்டுவருகின்றது.

சிறீலங்கா படைகளுடன் இணைந்து ஏராளமான போராளிகளையும், பொதுமக்களையும் படுகொலை செய்த ஒட்டுக்குழுக்களையும், தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுத்தவர்களையும் கொண்ட சிறீலங்கா அரசின் கூட்டணி வெற்றி பெற்றால் அது தமிழ்த் தேசியத்தின் தோல்வியாகவே கருதப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மீது வடக்கில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை தோற்கடிப்பதற்காக சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படுபவை என்பது தெளிவானது.

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் பெற்றுவிட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுமானால் அது தவறானது. இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை பெறமுடியாது என்பதையே நாம் மேற்கொண்ட கருத்துப் பகிர்விலும் பலரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது தான் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தப்படுத்த வேண்டுமானால் தமிழத் தேசியக் கூட்டமைப்பை வெற்றியீட்டச் செய்யவேண்டும். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கூட தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்பை அவர்களால் தடுத்து நிறுத்த முடியுமான என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இது.

நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் பங்குகொள்ள வேண்டும் என்ற அழைப்பை (ஆணையை) விடுத்த மேற்குலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் மாகாணசபை அதிகாரங்களைக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைக் கூட பாதுகாக்க முடியது என்பதை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு, அந்த நாமத்தை விடுத்து தமது சுய கட்சிகளின் சார்பாக போட்டியிட அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முற்படவில்லை. அதற்கான காரணமும் தெளிவானது. அதாவது விடுதலைப்புலிகள் என்ற நாமம் தான் தமிழ் மக்களின் மூச்சாக உள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளினதும், தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் நாமங்களையே மீண்டும் மீண்டும் கூறி மக்களிடம் வாக்கு கேட்டனர்.

அரசியல்வாதிகளின் உள் மனங்களில் என்ன உள்ளது என்பதை நாம் அறியோம். ஆனால் விடுதலைப்புலிகளின் நாமத்தைக் கூறி, அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் கீழ் போட்டியிடுபவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என எண்ணினால் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றியவர்களாகவே இருப்பர்.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் இதன் மூலம் நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இரண்டு.

ஒன்று சிறீலங்கா அரசுக்கு தோல்வியைக் கொடுத்து தமிழ் தேசியத்தைக் காப்பாற்றுங்கள்.

இரண்டாவது, தேர்தலின் போது தமிழத் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவோமாக அதன் மூலம் நாம் கூறியவை உண்மை என்பதை அவர்களுக்கு உணர்த்த முடியும்.

ஈழம் ஈ நியூஸ்.
19.09.2013