«நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது.

அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

«நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகிந்த இராஜபக்ச வேறுயாருமல்ல. தமிழ் மக்களின் வரலாற்றில் மிகப் பெரும் இரத்த சாட்சியமாய் அமைந்த, மக்களின் கூட்டுநினைவுகளில் நிலைத்துப் போயிருக்கும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு உள்ளடங்கலாக, சிறிலங்கா அரசு ஈழத்தமிழர் தேசத்தின்மீது நடாத்தும் இனஅழிப்பினைக் கடந்த ஒரு தசாப்தமாகத் தலைமை தாங்கி நடாத்திய சிங்கள தேசத்தின் தலைவர் ஆவர். இவரைத் தமக்குக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்துள்ளனர்.

இது தமிழின அழிப்பாளர்களைத் தமிழ் மக்கள் மன்னிக்கவோ அல்லது மறக்கவோ என்றும் தயாராக இல்லை என்பதனையே வெளிப்படுத்துகிறது. மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டமை தமிழர் நிலையில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் என நாம் கருதவில்லை.

rudrakumar
தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமே சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புத்தான். இக் கட்டமைப்பு இந்தத் தேர்தல் ஊடாக ஒரு புதிய முகத்துடன் தன்னை மேலும் நிலை நிறுத்தியுள்ளது என்றே நாம் கருதுகிறோம்.

மேலும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது கையில் தமிழர்களின் இரத்தம் படிந்தவர்தான் என்பதனை எமது மக்கள் மறந்து விட மாட்டார்கள். முள்ளிவாய்க்கால் போரில் பெரும் கொடுரங்கள் நடைபெற்ற இறுதி நாட்களில் மகிந்த இராஜபக்ச வெளிநாட்டில் இருந்த போது பிரதி பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்ததனால் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நேரடிப் பொறுப்பைச் சுமப்பவராவும் மைத்திரிபால சிறிசேன இருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகளின் போது இது இவரின் ஒரு சாதனையாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் இனஅழிப்புத் தொடர்பாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒருவராகவும் இவர் ஏன் கருதப்படக்கூடாது என்ற கேள்வியும் எமது மக்களிடம் உண்டு.

இத்தகையதொரு சூழலில் எமது மக்கள் எந்தவொரு சிங்களத் தலைவர்களிடமும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதே தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்று அனுபவமாக உள்ளது.

இதனால் தமிழர் தேசத்தின் அடையாளத்தையும் உரிமைகளையும்; பாதுகாப்பதற்கு அவசியமானதென நாம் கருதும் சில முன் நிபந்தனைகளைத் தாயகத் தலைவர்களின் கவனத்துக்கும் அனைத்துலக சமூகத்தினதுபார்வைக்கும் முன்வைக்கிறோம்.

1. சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை தேவை. புதிய சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் வெளிப்படுத்திய கருத்தினை நாம் வரவேற்பதோடு சிறிலங்கா சென்று விசாரணைகளை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளரைக் கோருகிறோம்.

2. நிலம் காவல்துறை உள்ளடங்கிய எல்லாவகையான அதிகாரங்களையும் மத்தியில் நிலைப்படுத்தும் ஒற்றையாட்சி முறையினை அடிப்படையாகக் கொண்ட 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு வழிவகுக்குமென நாம் ஏற்க முடியாது. பதிலாக நிலையான ஒரு அரசியற் தீர்வை எட்டுவதற்கான முதற்படியாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும்; விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ஒன்றின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.

3. சிங்கள இராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் போது எமது மக்கள் தாம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாக உணர்கிறார்கள். இதனால் தமிழர் தாயகத்தின் சிவில் வெளியை உருவாக்குவதற்கு முன்நிபந்தனையாக தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

4. தமிழர் தாயகத்தில் சிங்களம் நடாத்தும் நிலக்கபளீகரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் நிபந்தனை ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், யுத்தப் பகுதியில் இருந்து மக்களோடு வெளியேறி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இதுவரை உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விபரம் தெரியாத நிலையில் உள்ள பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி, திலகர் உட்பட்ட போராட்ட அரசியற் தலைவர்களதும் ஏனைய போராளிகளதும் நிலை குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

7. தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் புலம் பெயர் தமிழ்மக்கள் அச்சமின்றிப் பங்குபற்றக்கூடிய வகையிலானதொரு பொறிமுறை அனைத்துலகச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டும்.

8. தமிழ்மக்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் உரையாடவும் விவாதிக்கவும் தடையாகவுள்ள அரசியலமைப்பின் 6 வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இக் கோரிக்கைகள் நீதியின் அடிப்படையில் அமைந்த ஜனநாயகக் கோரிக்கைகளாகும். இக் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அதுவே எங்கள் மக்களின் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலான நிரந்தரமான அரசியற்தீர்வு காண்பது பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இவ்வாறு சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.