தமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்காவின் நடவடிக்கைகள் உலகம் எங்கும் பரவி வருகின்றது – போராட்டத்திற்கு ஆதரவு கோருகின்றது தமிழகம்

0
642

no-fireதமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்காவின் நடவடிக்கைகள் உலகம் எங்கும் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. அதன் ஒரு அங்கமாக நேபாளின் தலைநகர் காத்மண்டுவில் நடந்துவரும் தெற்காசிய ஆவணப்படக்கண்காட்சியில் திரையிடப்படவிருந்த இலங்கையைப் பற்றிய 3 குறும்படங்கள் கண்காட்சியிலிருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன.

கண்ணன் அருணாச்சலத்தின் ‘புரோக்கன்’, ‘தி ஸ்டோரி ஆப் ஒன்’ ஆகிய இரண்டு படங்களும், இலங்கை படையினர் போர் குற்றங்களைச் செய்த்தாக குற்றம் சாட்டும் கல்லம் மெக்ரேவின் ‘நோ பயர் சோனும்’ விழாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

இலங்கை அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “எங்களுக்குத் தெரிந்தவரை 3 ஆவணப் படங்களைத் திரையிடக் கூடாது என்று இலங்கை அரசு, நேபாள அரசுக்கு தனது தூதரகம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதையடுத்து நேபாள அரசு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது,” என்றார் பிலிம் சவுத் எசியாவின் தலைவர் கனக் மணி தீக்ஷித்.

திரையரங்குகளில் இந்தப் படங்களை திரையிட முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு இந்தப் படம் தனியாக போட்டுக் காட்டப்படும். இந்தப் படங்கள், சிறந்த ஆவணப் படங்களுக்கான போட்டியில் தொடர்ந்து இருக்கும் என்றும் தெற்காசிய ஆவணப்பட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிறீலங்காவின் போர்க்குற்றங்களை மறைப்பதற்காக நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து தோழர் தியாகு அவர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாநிலை போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் முழு அளவில் ஆதரவு தரவேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பில் முகநூலில் வெளியான தகவல் வருமாறு:
thiyaku-8
தோழர் தியாகு அவர்கள் பல ஆண்டு சிறையை அனுபவித்தவர்,மார்க்கியத்தை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச் சென்றவர்..தமிழ் தேச சிந்தனைகளை தொடர்ந்து பேசி வருபவர்..மூத்தவர்…இப்படி பன் முகத்தன்மை கொண்ட ஒரு போராளி..இந்த முதிர்ந்த வயதில் ”காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது.. கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் ” என மூன்று நாட்களாக ”வெற்றி அல்லது வீரச்சாவு” என்னும் முழக்கத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்திருக்கிறார்…மிக சில தலைவர்கள் வந்து அடையாள அணிவகுப்பு நடத்தியதோடு சரி..அண்ணன் திருமா இன்று முழு நாள் அவருடன் அடையாள உண்ணாநிலையை கடை பிடித்தார்…அவ்வளவே… மூன்று நாள் முடிந்தும் பெருந்திரள் கூடாததும் இயக்கங்கள் அமைதி காத்து ஒதுங்கி நிற்பதையும் பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது..

மது விலக்கு கோரி தனிமனிதன் ஒருவர் அமர்ந்த பொழுது கூட எல்லோரும் முண்டி அடித்து புகைப்படம் எடுத்ததையும் கண்டிருக்கிறோம்…

ஆனால் தோழர் தியாகுவை சாகக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பது போன்ற கள்ள மௌனம் நிலவுகிறது…இதுவும் அடையாளமாக முடிந்து போகுமோ என்கிற பெரும் பயத்தின் நிழலில் இருந்து எழுதுகிறேன்..தலைமைகளே..பிணிகளை கழுவி தியாகு அவர்களை காக்க வாருங்கள்…கைகளை உயர்த்துங்கள்…