திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி பற்றி சர்வதேச விசாரணை தேவை: மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

0
831

RayappuJoseph20123மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் பகுதியில், நீர் விநியோக குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது, கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புதைகுழி கண்டுபிக்கப்பட்டது.

இதையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அந்தப் பகுதியைத் தோண்டிய போது, இதுவரை 10 மனித சடல எச்சங்களும், மண்டையோடுகளும் மீட்கப்பட்டன. மீண்டும் இந்தப் பகுதியில் வரும் சனிக்கிழமை தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, இந்தப் புதைகுழிப் பகுதியை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைக்கு மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, இந்தப் புதைகுழி தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இவை போர் காலத்தில் காணாமற்போன பொதுமக்களுடையவையாக இருக்கலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் காணாமற்போனவர்கள் குறித்து எந்த முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தப் புதைகுழி வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கான கண்களைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையும், சிறீலங்காவுக்கு கொடைவழங்கிய நாடுகளும், அனைத்துலக சமூகமும் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சுயாதீன விசரணை தேவை என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

பல பத்தாயிரம் தமிழ் மக்களின் படுகொலையுடன் நிறைவடைந்த இந்தப் போரில் இருந்து உயிர்தப்பிய தமிழ் மக்கள், தமக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்த சாட்சியங்களை உலகின் முன்னனி ஊடகங்களின் முன்பும், மனித உரிமை அமைப்புக்களிடமும் கூறிவருகின்ற நிலையில் மேலும் பல ஆதாரங்கள் மனிதப்புதைகுழிகளாக வெளிவர ஆரம்பித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.