கருணாநிதியின் மறைவோடு திமுக இணைய உடன்பிறப்புகள் தீராத மன நோய்க்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

 

இந்த மனப் பிறழ்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

பாவம், தம் கண் முன்னேயே “கலைஞர்”என்ற பிம்பம் கலைந்து உருத் தெரியாமல் அழிந்து போவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

 

கருணாநிதி ஒரு சிந்தனையாளர்/ கோட்பாட்டாளர்/ புரட்சியாளர் என்று அவர்கள் ஆழ் மனதில் காலம் காலமாக விதைக்கப்பட்டிருந்த போலி நம்பிக்கையின் விளைவாக மார்க்‌ஸ், அம்பேத்கர், பெரியாரின் தொடர்ச்சியாக அவர் இருப்பார் என்று அப்பாவித்தனமாக நம்பியிருக்கிறார்கள்.

 

ஆனால் யாருமே இந்த அங்கீகாரத்தைத் தரத் தயாராயில்லை. அவ்வளவு ஏன் திமுக வை ஆதரிக்கும் திராவிட இயக்கங்கள்/ கட்சிகள் கூட கருணாநிதிக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கத் தயாராக இல்லை. அண்மைய திருச்சி பேரணியில் இதை அப்பட்டமாகவே பார்க்க முடிந்தது.

 

விளைவு இந்த உளச் சிக்கல்.

 

யாராவது அவர்கள் ஆழ் மனத்திற்குள் புகுந்து,

 

01. சிந்தனையாளர்/ கோட்பாட்டாளர்/ புரட்சியாளர்களுக்கான வரையறை என்ன என்பதைப் பதிவு செய்ய வேண்டும்.

 

02. ஊழல் பெருச்சாளிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள், இனப்படுகொலைக்குத் துணை நின்றவர்கள், குறிப்பாக தேர்தல் அரசியலில் நின்று சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தவர்கள், ஜனநாயகம் பேசியபடியே உட்கட்சி கொலை/ கட்டப் பஞ்சாயத்து / ரவுடிசத்தை ஊக்குவித்தவர்கள் இந்த பட்டியலில் அல்ல அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூட முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.

 

03. ஒரு மாநிலத்தில் பல தடவை ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஒருவருக்கு அவருக்கு முன்பும், சமகாலத்திலும் பல கட்சிகள், இயக்கங்கள், மக்கள் அமைப்புக்கள், தனி நபர்களின் போராட்டத்தின் விளைவாக நடந்த நன்மைகள்/ சமூக மாற்றங்களை அவர் கணக்கில் மட்டும் வைப்பிலிட்டு அவருக்கு “புரட்சியாளன்” பட்டம் கொடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை பதிவு செய்யுங்கள். அவரும் சேர்ந்து உழைத்தார் என்று வரலாற்றில் பதிவு செய்யலாம். அவ்வளவுதான். அதற்காக கார்ல் மார்க்சில் தொடங்கி அம்பேத்கர் வரை நீளும் பட்டியலில் இடம் கேட்பது ரூ மச் இல்லை திறீ மச்.

 

இந்த அபத்தத்தின் நீட்சி நாளை எடப்பாடிக்கும் இந்த பட்டியலில் இடம் கேட்கும். யோசிக்கவே கண்ணைக் கட்டுது.

 

இதில் என்ன பிரச்சினை என்றால், அவர்களது மனப் பிறழ்வு அவர்களை விபரீதமான கற்பனைகளை நோக்கி உந்தித் தள்ளுகிறது.

 

விளைவாக கருணாநிதிக்கான இடத்தை இல்லாமல் செய்தது ஈழப் போராட்டமும்/ பிரபாகரனும்தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

 

தமிழகத்தில் கட்சிகள் / இயக்கங்கள்/ அமைப்புக்கள்/ மாணவர்கள் போராட்டங்களில் மட்டுமல்ல குடும்ப நிகழ்வுகள் / தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்/ திரைப்படங்களில் கூட பெரியார், அம்பேத்கர் வரிசையில் தலைவர் பிரபாகரன் இடம் பிடித்து விட்டார்.

 

இது இயல்பான ஒன்று. ஏனென்றால் எதிரிகளே ஏற்றுக் கொண்ட ஒரு புரட்சியாளன் அவர். “நந்திக்கடல்” வழியே ஒரு கோட்பாட்டாளனாகவும் அவர் பரிணமித்திருக்கிறார்.

 

ஆனால் இந்த உண்மையை/ யாதார்த்தத்தை ஏற்க மறுக்கும் மனப் பிறழ்வுக்குள் கிடந்து உழல்கிறார்கள் உடன் பிறப்புக்கள்.

 

விளைவாக தலைவர் பிரபாகரன் மீதும்/ புலிகள் மீதும் சேறு பூசிவிட்டால் கருணாநிதிக்கு அந்த இடம் கிடைத்து விடும் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.

 

பார்த்தீர்களா! நோய் எவ்வளவு முத்திவிட்டது என்று..

 

பிரபாகரன் வரலாற்றில் அம்பேத்கர் / பெரியார் வரிசையில் மட்டுமா வருகிறார்.

 

அவரை ஒரு வகையில் பிடல் காஸ்ட்ரோ/ அரபாத்/ மண்டேலா வரிசையில் வைக்கலாம்.

 

பகவத் சிங்/ சுபாஷ் சந்திரபோஸ் வரிசையில் வைக்கலாம்.

 

இன்னொரு வகையில் மாவோ/ கோசிமின்/ சே குவேரா வரிசையில் வைக்கலாம்.

 

பாட்ரிஸ் லுமும்பா/ தோமஸ் சங்கரா/ சமோரா மார்சல் என்றொரு வரிசை.

 

அமில்கர் கப்ரால்/ அப்துல்லா ஒசலான் என்று பிறிதொரு வரிசை.

 

ஏன் அவரது நந்திக்கடல் பிரவேசத்தினூடாக அவர் மனித குல வரலாற்றில் நவீன இராஜதந்திரங்களை வகுத்த தூசிடிடேஸ் /சன்சூ / கௌடில்யர் வரிசையில் கூட வருகிறார்.

 

உலகின் போராடும் தேசிய இனங்களின் “ஆன்மா” வாகிவிட்ட / நவீன உலக ஒழுங்கிற்கு அறைகூவல் விடுக்கும் கோட்பாடுகளின் சொந்தக்காரனை ஒரு மாநிலத்தின் கட்சி அரசியல்வாதியுடன் ஒப்பிட்டு அலைந்துழந்து தீராத மன நோய்க்குள் சிக்கித் தவிக்கும் உடன் பிறப்புக்களுக்கு யாராவது கூட்டு கவுன்சிலிங் கொடுக்க முன் வர வேண்டும்.

நன்றி: பரணி கிருஸ்ணரஜனி