tamils-idp0தம் தொப்புளைப் பார்த்துக் கொண்டே தமது வரலாற்றைத் தீர்மானிக்கும் நாயகர்களாகவும், வரலாற்றை முழுமையாகவும், ‘உண்மையாகவும்’ எழுத அழைக்கப்பட்டிருக்கும் ‘தெரிவு’ செய்யப்பட்டவர்களாகவும் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் ஈழப்போராட்டம் பற்றி ‘அறுதியான’ கருத்துகளை முன்வைப்பதானது நகைப்பையூட்டுவதாக உள்ளது.

இவர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர்கள். இன்னொரு பகுதியினர் உள்ளிருந்து குளிபறித்துப் பின்னர் வெளியிருந்தும் குளிபறித்துக் கொண்டிருப்பவர்கள்.

நான் “போராளி” என்று கூறுவதும், போராட்டத்தை அழிக்கும் நோக்கில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பிரகடனப்டுத்தியும் செயற்பட்டதும் எவ்வகையிலும் யாருக்கும் முரண்பாடான ஒன்றாகத் தெரியாதது ஆச்சரியமளிக்கிறது. தவறான போராட்டத்தில் தவறான முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் தம்மைப் அந்தப் போராட்டதின் பங்காளிகள் என்று பறைசாற்றுவதில்லை.

‘புத்திசாலித்தனமான’ சொல்லாடல்களையும், சந்தர்ப்பவாத ‘அறிவியலையும்’ மட்டுமே ஆயுதமாக்கி அரசியலோ அன்றில் வரலாறோ தீரமானிக்கப்படுவதில்லை.

பிரஞ்சுப் புரட்சி மற்றும் பரிஸ் கம்யூன் புரட்சி பற்றிய வரலாற்றாளர்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு முக்கிய முரண்பாடு என்னவென்றால், அவர்கள் இப்புரட்சிகளின் வரலாற்றை இருகூறுகளாகப் பிரித்துப் பார்க்க முயன்றார்கள். அதாவது, புரட்சியின் நல்ல பக்கங்கள் என ஒரு பகுதியாகவும், தீய பக்கங்கள் என இன்னொரு பகுதியாகவுமாக. புரட்சியின் நோக்கங்கள் நியாயமானவையென்றும் அப்புரட்சி நடைமுறையில் பல அநீதிகளைக் கொண்டிருந்தது என்றும் விவாதங்களை முன்னெடுத்தார்கள்.

விதிவிலக்கற்ற வகையில் இடதுசாரிகளாலும், கார்ல் மாக்ஸினாலும் கூட, விதந்துரைக்கப்பட்ட இப்புரட்சிகள் பயங்கரங்களையும், கொடூரங்களையும் தம்மகத்தே கொண்டிருந்தன. புரட்சியாளர்கள் எந்த மக்களுக்காகப் புரட்சியை ஆரம்பித்தார்களோ அவர்களில் பலரையே அவர்கள் பலியாக்கினார்கள். புரட்சியின் சூழ்நிலைகள்,அதன் எதிர்பாராத போக்குகள் மற்றும் உள்ளார்ந்த எதிர்ப்புரட்சிச் சக்திகள் போன்றவை அர்ப்பணிப்பு மிக்க புரட்சியாளர்களை கொடூரம் விளைவிப்பவர்களாகவும் மாற்றியிருந்தது. இது வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாத உண்மை.

இக்கொடூரங்களை முன்நிறுத்தி, இவ்விரண்டு தோல்விகண்ட புரட்சிகளையும் அதன் இலக்குகளையும் அழிக்கும் முயற்சியில் பிற்போக்குவாத, தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்க்கும் நோக்கிலான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தோற்றுப்போனவர்களின் முதுகில் சாவரி செய்வதைப்போல் இலகுவானதும் இழிவானதுமான செயலொன்று இருக்முடியாதென்பதில் இரண்டு நிலைப்பட்ட கருத்திருக்கமுடியாது.

ஆனால், காலப்போக்கில் வரலாற்றாளர்களில் மிகப்பெரும்பான்மையினர் இவ்விரண்டு புரட்சியின் மீதும் நல்ல பக்கங்கள், தீய பக்கங்கள் எனப் பிறிதாக்கம் செய்யமுடியாதென்றும் அவற்றை ஒரு முழுமையான “பளொக்” காக மட்டுமே பார்க்கமுடியும் என்றும் இணங்கிக் கொண்டார்கள்.

பிரஞ்சுப் புரட்சியின் இரண்டாவது நூற்றாண்டு விழாக்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் இது மிகவும் உறுதியான முறையில் வெளிப்படுத்தப்பட்டது.

வரலாறு அது நடைபெற்ற காலத்திலிருந்து நகர்ந்து செல்கையில் அதுபற்றிய கருத்துகளும் பார்வைகளும், ஆய்வுகளும் மாறுபட்டுச் செல்கின்றன. இது ஒரு தவிர்க்கமுடியாத வரலாற்று இயல்பாகும். இவ்விடயம் தனியாக பிரஞ்சுப் புரட்சிக்கும், பரிஸ் கம்யூன் புரட்சிக்கும் மட்டுமே பொதுவான வியடம் அல்ல.

பரிஸ் கம்யூன் புரட்சிவாதிகள் 26 மே 1871 ல் நடாத்திய படுகொலைகள் பாரதூரமான கொடுரங்கள் நிறைந்தவை. இருப்பினும் கார்ல் மாக்ஸ் இந்தப்புரட்சியை தலையில் வைத்துக் கொண்டாடினார் என்பதையும் மறக்காதிருத்தல் வேண்டும். இதற்கான காரணத்தை கார்ல் மாக்ஸிடம் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கில்லை. அவரின் ஆவியுடன் கதைப்பவர்களில் நம்பிக்கை வைப்பதும் உவப்பான ஒன்றல்ல.

புரட்சி, போரட்டம் எனும் பரிமாணங்களுக்குள் வரலாறு நுழையும்போது வன்முறையும் கொடூரங்களும் அனுமதியின்றியே அங்கு நுழைந்து விடுகின்றன. அநீதியின் பிரசன்னம் அங்கு தவிர்க்கமுடியாததாகிறது. மனித அறிவிற்கும், விருப்பிற்குமிடையிலான முரண்பாடுகளை உளவியற் தளத்தில் அணுகுவது பற்றி நாம் கற்றுக்கொள்ள இன்னமும் ஏராளமான விடயங்கள் உள்ளன.
mannar-mass7
இவ்வகையில்தான் ஈழப்போராட்டமும் அதன் “நல்ல, தீய” பக்கங்களும் பார்க்கப்படல் வேண்டும் எனத்தோன்றுகிறது. ஆசியக் கண்டத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள் நடைபெற்ற அல்லது நடைபெறும் ஒரு காலகட்டத்தில், உலகின் வல்லரசுகள் தங்கள் நலன்களை இக்கண்டத்தில் நிலைநிறுத்த உக்கிர முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஈழப்போராட்டம் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துத் தோற்றுப்போனது. ஈழத்தில் தமிழர்களின் இருப்பு நிலைக்கும், இப்பிரதேசத்திலான சர்வதேச நலன்களுக்குமான ஒரு போராட்டமாக இந்தப் போராட்டத்தைப் பார்த்தல் உகந்தது.

அண்மைக் காலங்களில் ஈழப்போராட்டதின் இறுக்கட்ட இலக்கிய விபரிப்புகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இறுதிக்கட்ட அவலங்களின் சாட்சிகள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக்கொள்ளும் நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும் தோன்றுகிறது. போராட்டத்துடன் நெருங்கிப் பிணைந்திருந்தவர்கள் கூட “நான் அவனில்லை அல்லது அவளில்லை” எனும் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வண்ணமாகவும், “பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்” என்ற நிலைப்பாட்டிலும் தான் இன்றுள்ளார்கள் எனத்தோன்றுகிறது. அவர்களுக்கு வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஈழப்போராட்டத்தின் சாட்சிகளின் பதிவுகள் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறன. இன்னமும் ஏராளமான விடயங்கள் வெளிவரவேண்டியிருக்கிறது. அதற்கான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகியிருப்பதாகவும் சொல்லமுடியாது. போரில் இறந்தவர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்த உரிமையற்ற நாட்டில், போர் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் உரிமை இருப்பதாக யாரும் அப்பாவித்தனமாகக் கருதிவிடமுடியாது.

சாட்சியங்களும் ஞாபகக் குறிப்புகளும் வரலாறாக மாற்றம் பெறுவதற்கு அது புறநிலை ஆய்வொன்றினூடாக அணுகப்படவேண்டும். குறிப்பாக அப்படியான ஒரு ஆய்வு, இவ்வரலாற்றுச் சம்பவங்களுடன் நேரடிப் பங்காற்றல் இல்லாதவர்களினால் முன்னெடுக்கப்படவேண்டும். இந்நிலைகள் சாத்தியப்படவேண்டுமானால் அதற்குக் காலம் முன்னகரவேண்டும்.

அதுவரையும் பதிவுகளையும், சாட்சியங்களையும், ஞாபகக் குறிப்புகளையும், புனைவுகளையும், பொய்களையும் உங்வாங்கி சலனமற்றுப் பகுப்பாய்வு செய்யும் பக்குவம் நம்மெல்லோருக்கும் வேண்டும். தீர்ப்பு வழங்குவது வரலாற்றுக்கு மட்டுமே உள்ள கடமை.

ஈழம்ஈநியூஸ்.