தென்னாபிரிக்கா: கூட்டமைப்பின் குழப்ப அரசியல்

0
680

மே 18 இற்கு முன்பே தென்னாபிரிக்கா தமிழர் தேசத்துடன் நெருங்கிய உறவைப் பேணத்தொடங்கிவிட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகளின் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சென்று வரும் இடமாகவும் அது மாறியிருந்தது.

நிறவெறியிலிருந்து விடுதலை அடைந்த தேசம் என்ற அடிப்படையில் புலிகள் அங்கு கற்றுக்கொள்ள நிறையவே இருந்தது.

புலிகளின் பேரம்பேசும் வல்லமையும் தமக்கென ஒரு தெளிவான அரசியலை வரையறுத்துக் கொண்டதும் தென்னாபிரிக்க தமிழீழ உறவில் ஒரு தெளிவான அரசியல் பரிமாணமாக அது முகிழ்ந்திருந்தது.

South-africa
மே 18 இற்கு அனைத்தும் தலைகீழானதுபோல் தென்னாபிரிக்க நிலைப்பாடும் மாறிப்போய்விட்டது. வெற்றி பெற்றவர்கள் பக்கம் சாயும் உலக ஒழுங்கின் விதி அது.

இறுதி இனஅழிப்பு நடந்து முடிந்ததும் சிங்கள அரசு தென்னாபிரிக்க பொறிமுறையை அடியொட்டி தாம் தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்கப்போவதாகக் கூறி “கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” தோற்றுவித்து அதன் பரிந்துரைகளை வெளியிட்டது.

அது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதற்கு அதன் பரிந்துரைகளே சாட்சி. ஆனால் அதையே தமிழர்களுக்கு தீர்வாகத் திணிக்க இந்தியா மற்றும் மேற்குலகம் வரை முண்டியடிப்பது சமகால வரலாறு.

ஆனால் அதைக்கூட நிறைவேற்ற சிங்களம் தயாரில்லை என்பது வேறு ஒரு தனிக்கதை.

உண்மையில் தமது பொறிமுறைக்கு ஏற்ப இது தயாரிக்கப்படவில்லை என்பதை தெளிவாக சொல்ல வேண்டிய தென்னாபிரிக்கா இந்த கணம்வரை அதன் குறைபாடுகள் குறித்து மவுனமே சாதித்து வருகிறது.

இது இப்படியிருக்க மீண்டும் கடந்த வருடத்திலிருந்து மீண்டும் தென்னாபிரிக்காவை அனுசரணையாகக் கொண்டு தீர்வென்றை எட்டவுள்ளதாக சிங்கள அரசுமட்டுமல்ல கூட்டமைப்பும் கூறி வந்தது மட்டுமல்ல மாறி மாறி தென்னாபிரிக்காவிற்கு பயணங்களையும் மேற்கொண்டிருந்தன.

சிங்களத்தின் இழுத்தடிப்பு நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பு இழுபடுகிறது என்று பலதரப்பாலும் விமர்சிக்கப்பட்டபோதும் கூட்டமைப்பு அதை கணெக்கெடுக்கவில்லை.

இந்த நிலையில் அண்மையில் ஜெனிவாவில் அமெரிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது திரைமறைவில் அதை நீர்த்துப்போகும் வேலைகளில் தென்னாபிரிக்கா இறங்கியது அவதானிக்கப்பட்டது.

அத்தோடு அமெரிக்க தீர்மானத்திற்கான வாக்களிப்பில் பங்கெடுக்கமால் அதை புறக்கணித்தது தென்னாபிரிக்கா.

அந்தக் கணமே தமிழர் பிரச்சினையில் ஒரு மத்தியஸ்தத்தையோ அல்லது அனுசரணையாளராகும் வகிபாகத்தையே தென்னாபிரிக்கா இழந்துவிட்டது.

இனப்படுகொலையை விடுவோம். ஆனால் ஒரு மனித உரிமை மீறலை விசாரிக்கும் ஐநாவின் பொறிமுறைக்கே ஆதரவளிக்காமல் சிங்களத்தை காப்பாற்ற முற்பட்டு வாக்களிக்காமல் ஒதுங்கிய தென்னாபிரிக்கா அதற்கான தகுதியையும் இழந்து தன்னையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

TNA_delegation_in_South_Africa1
இதன் பின்னும் எப்படி தென்னாபிரிக்காவை நம்ப முடியும்?

ஆனால் கூட்டமைப்பு மீண்டும் ஒரு பயணத்தை தென்னாபிரிக்காவில் முடித்துகொண்டு திரும்பியுள்ளதுடன் விரைவில் தென்னாபிரிக்க தூதுக்குழு ஒன்று வரவுள்ளதாகவும் இன்று அறிவித்திருக்கிறது..

யாரை ஏமாற்ற இந்த வேலை? யாரை காப்பாற்ற இந்த வேலைத்திட்டம்?

ஐநா கொண்டுவரவுள்ள ஒரு விசாரணைப்பொறிமுறையை சிங்களம் முற்றாக நிராகரித்துள்ளது. தமிழர்களுக்கும் அந்த தீர்ம்hனம் பெரிதாக ஒன்றையும் தரப்போவதில்லை.

ஆனால் அந்த பொறிமுறையை எப்படி சிங்களம் கையாளப் போகிறது என்பதை பொறுத்து தமிழர் தரப்பு அடுத்த கட்ட அரசியலை நகர்த்த வேண்டிய நிலையிலுள்ளது.

ஐநா மற்றும் மேற்குலகமும் கூட சிங்களத்தின் நகர்வை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் சூழலில் கூட்டமைப்பு ஒரு அலங்கோல ஆட்டத்தில் இறங்கியிருப்பதாகவே படுகிறது.

அனுசரணை வகிக்கும் தகுதியை இழந்த ஒரு நாட்டினூடாக, ஐநா பொறிமுறையை ஏற்கமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் ஒரு இனஅழிப்பு அரசுடன் என்ன தீர்வை எட்டலாம் என்று கூட்டமைப்பு நம்புகிறது.?

இவற்றைக்கூட விடுவோம். தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் உச்சக்கட்டமாக இனஅழிப்பு அரசு பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட வகைதொகையில்லாமல் கைதுகளும் கடத்தல்களும், போலி மோதல்களை உருவாக்கி படுகொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அசாதரணமான சூழலில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம்தானா?

அல்லது தொடர்ந்து பேசுவதற்கு ஒரு முன் நிபந்தனையாக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து இராணுவ அடக்குமுறை அழுத்தங்களை குறைக்கும் பரிந்துரைகளையாவது கூட்டமைப்பு முன்வைத்ததா?

அதுவுமில்லை..

கூட்டமைப்பு இனியும் இப்படி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. தொடரும் இராணுவ அழுத்தங்கள் மக்களை நிறையவே சிந்திக்க தூண்டியிருக்கிறது.

கூட்டமைப்பு மக்கள் சார் அரசியலை செய்ய வேண்டும்.. இல்லையேல் மக்கள் போராட்டத்திற்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும்.. இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் சேர்த்துத்தான்…

ஈழம்ஈநியூஸ்.