தெலுங்கானா – ஈழத்தமிழர் தொடர்பில் இந்தியாவின் கொள்கைக்கு விழுந்த அடி

0
656

delunganaஇந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கான உருவாகப்போவது உறுதியாகியுள்ளது. இந்திய மத்திய அரசினால் புறக்கணிப்புக்கு உள்ளாகிவரும் மாநிலங்கள் ஒருபுறம் இருக்க, இந்திய மத்திய அரசுக்கு சாமரம் வீசும் மாநில அரசு ஒன்றினை எதிர்த்து போராடிய ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று தமது போராட்டத்தில் கணிசமான அளவு முன்னகர்ந்துள்ளனர்.

முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாது தனி நாடாக விளங்கிய தெலுங்கான தேசம், இந்தியாவின் போலியான வாக்குறுதிகளால் இந்திய தேசத்துடன் இணைந்தது, பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிய கதையாக மாறியது.

தனிநாடாக தோற்றம் பெற்றிருக்க வேண்டிய தெலுங்கானா என்ற தேசம், இந்திய தேசத்தில் இணைந்ததால், சொந்த மொழிபேசும் மக்களாலே ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு, உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மறுக்கப்பட்ட நிலையில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முதற்படியான தனி மாநிலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

1956 இல் மொழிகளை அடையாளமாகக் கொண்டு இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி இன அடையாளங்கள், பண்பாடு என்பன காப்பாற்றப்பட வேண்டும், பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தெலுங்கான மக்களுக்கு அவை கிடைக்கவில்லை.

ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கான பகுதி கனிம வளமும், நீர்வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாகவே தெலுங்கான காணப்பட்டது.

ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத் உட்பட பத்து மாவட்டங்களைக் கொண்ட தெலுங்கான 1,14,840 சதுர கி.மீ பரப்பளவையும், மூன்றரைக்கோடி மக்கள் தொகையையும் கொண்டது (2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி).

ஆந்திரா மாநிலத்தின் 45 விகித காட்டுப் பகுதியை கொண்ட தெலுங்கானவில் இந்தியாவின் நிலக்கரி வளத்தின் 20 சதவிகிதம் உள்ளது. மேலும் அணுசக்திக்கு பயன்படும் யுரேனியம் கனிம வளமும் அதன் கரிம்நகர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த போராட்டம் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் மிகத்தீவிரமானது. 300 இற்கு மேற்பட்டோர் தீக்குளித்தனர். பல நாட்களாக ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத்தின் இயக்கம் முடக்கப்பட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்களையும், சினிமாதுறையின் முதுகெலும்பையும் கொண்ட இந்த நகரத்தில் தங்கியிருந்த போது நானும் பல தடவைகள் பணிக்கு செல்ல முடியாது விடுதிக்கு திரும்பியிருந்தேன்.

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரபு நாடுகளில் பரவிய ஜனநாயகப்புரட்சி தற்போது இந்தியாவின் மாநிலங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது எகிப்திலும், சிரியாவில் நடைபெற்றும் வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் புரட்சி மிக வேகமாக பரவக் காரணம் என்ன?

அதாவது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது இன்றைய உலகின் இடைவெளியை மிகவும் குறைத்துவிட்டது. இணையத்தளம், முகநூல், செல்லிடத் தொலைபேசிகளில் உள்ள வசதிகள் ஊடாக மேற்கத்தைய ஜனநாயக நாடுகளில் அதன் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் என்பவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்கின்றனர்.

எனவே நாமும் அவ்வாறு வழவேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் தோன்றி வருகின்றது. இது தான் பல நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை சிந்திக்கை வைத்துள்ளது.

எனவே தான் சீனா, இந்தியா மற்றும் சிறீலங்கா உட்பட பல நாடுகள் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மட்டுப்படுத்தி வருகின்றன. எனினும் அதனை முற்றாக தடுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் பயன்பாடுகன் அன்றாட வாழ்வுடன் இணைந்துவிட்டது.

இன்று தெலுங்கானாவின் பிரிவு தமிழகத்திலும் பல கருத்து மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. தெலுங்கானவைப் போல இந்திய மத்திய அரசினல் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உட்பட்டுவரும் தமிழகம் தனது விடுதலைக்கான போரை ஆரம்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக தமிழக மக்கள் கருதுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.
jegan_002
தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் பாக்கு நீரிணையில் சந்தித்துவரும் அடக்குமுறைகள், எதிர்கொள்ளும் தாக்குதல்கள், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசு பின்பற்றிவரும் கொள்கைகள், சிறீலங்கா அரசுக்கு ஆதரவான அதன் போக்கு, வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் போன்ற சம்பவங்கள் இந்தியா மீது தமிழக தமிழ் மக்களுக்கு வெறுப்பை தோற்றுவித்து வருகின்றது.

தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஒருவரின் கருத்தை இங்கு தருவது பொருத்தமானது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளிடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் தமிழ் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றியீட்டுவதே அவர்களின் கொள்கையாக உள்ளது.

எனவே இந்த கட்சிகளுக்கு மாற்றீடாக தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சமரசம் இன்றிப் போராட ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்றம் என்பது தானாக நிகழாது. முதலில் நாம் மாற வேண்டும். நான் ஒருவன் மாறினால் மட்டும் மாற்றம் நிகழ்ந்துவிடுமா என்றால் கண்டிப்பாக நிகழும் என்பதே அவரின் கருத்து.

தெலுங்கானாவின் மாற்றம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்கத்தை பிரித்து கோர்காலாந்து தனி மாநிலம் அமைக்கக்கோரி கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு ஓகஸ்ட் 10 ஆம் நாள் வரை தொடர்ந்து 8 நாட்களாக முழு அமைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே ஆந்திராவில் சிக்கியுள்ள தமிழர் நிலங்களை தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டம் ஒன்றும் கடந்த 10 ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுள்ளது. தமிழர் எழுச்சி இயக்கம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவில் ஏற்படும் இந்த மாற்றங்கள் சிறீலங்காவிலும் மாற்றத்தை உண்டுபண்ணும்.

சிறீலங்காவில் ஏற்படும் பூகோள மாற்றம் தனது மாநிலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற இந்தியாவின் கணக்கு தற்போது எதிர்மறையாக மாற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா மேற்கொண்ட போருக்கான ஆதரவு, 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது திணிக்க முற்படும் அரைகுறைத் தீர்வு, அனைத்துலக அரங்கில் சிறீலங்காவை பாதுகாக்கும் இந்தியாவின் உள்நோக்கத்தின் அடிப்படைக் காரணிகள் தற்போது அதன் எல்லைக்குள்ளாகவே ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதுன. இந்திய மத்திய அரசு மீது விழப்போகும் இந்த நெருக்கடிகள் சிறீலங்கா அரசுக்கு அது வழங்கிவரும் ஆதரவுக்கு ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உண்மை.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்- நம்தேசம், ஆவணி வெளியீடு