நவிபிள்ளையின் உளவியலை உடைத்த சிங்களம்

0
1039

paraniஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து குறிப்பாக இறுதிநாள் அவர் நடத்திய ஊடகசந்திப்பில் அவர் ஆற்றிய உரை குறித்து பெண்ணிய உளவியலாளரும் அரசியல் விமர்சகருமான பரணி கிருஸ்ணரஜனியிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவரது கருத்துக்கள் வருமாறு,

நவிபிள்ளையின் பயணத்தை 3 காலகட்டங்களாக பிரித்து பார்க்க வேண்டும்.

மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவர் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததை ஒரு கட்டமாகவும் வடக்கு கிழக்கு பயணத்தினூடாக இனஅழிப்பின் வடுக்களையும் அதன் விளைவான மக்கள் அவலத்தை நேரில் தரிசித்ததை இன்னொரு கட்டமாகவும் சிங்களம் திட்டமிட்டு உருவாக்கிய ஒரு எதிர்ப்பலையின் விளைவாக அவர் அடைந்த நிலைமாற்றத்தையும் மூன்றாவது கட்டமாகவும் நாம் பார்க்கலாம்.

இந்த 3 கட்டங்களிலும் அவர் 3 வெவ்வேறு உளவியல்நிலைகளை கடக்கிறார். விளைவாக அவர் பதட்டமடைகிறார். அவரது உரையில் இந்த பதட்டத்தை நாம் இலகுவாக இனங்காணலாம்.

இந்த உரையை ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலும் மேற்குலக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அடையாளம் காணும் அதே தருணத்தில் சிங்களம் புலிப்போர்வையை அவர் மீது போர்த்தி திட்டமிட்டு பரப்பிய சதி வலைக்குள் வீழ்ந்து தனது பதவி நிலையை மறந்து தன்னை பாதுகாக்கும் ( Defend )அல்லது தன்னை புனிதப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியிருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.

விளைவாக புலிகள் மீதும் புலிகளை தமது போராட்ட பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழர்தரப்பு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நவிபிள்ளை இனஅழிப்பு அரசின் மீது விமர்சனங்கள் வைப்பதற்கு அழகான – இலகுவான சொற்களை தேட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.

இன அழிப்பு அரசிற்கு கிடைத்த ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றி இது.

ஆனால் எமது ஊடகங்களும் சில தமிழ் தலைவர்களும் இந்த அரசியல் புற நிலையை மறந்து நவிபிள்ளையின் உரையில் ஏதோ சிங்களத்திற்கு அடி விழுந்துவிட்டதாக உளறிகொட்டுவது வருத்தத்திற்குரியது.

பல சாத்தியமான விடயங்கள் அந்த உரையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த உரையின் ஆபத்தையும் அபத்தத்தையும் நாம் சேர்த்து புரிந்து கொள்வதனூடாகத்தான் அடுத்த கட்ட நீதியை நோக்கி எம்மை நகர்த்தி செல்ல முடியும்.

சிறீலங்கா அரசு என்பது வேறு மகிந்த அரசு என்பது வேறு. இரண்டையும் உச்சரிக்கும் இடங்களைப் பொறுத்து அதன் அரசியல் பெறுமானம் வேறுபடும். ஆனால் எம்மில் பலர் அதை உணர்ந்தது போல் தெரியவில்லை. நவிபிள்ளையின் வீரியமற்ற இந்த குற்றச்சாட்டுக்கள் சிங்கள அரசை நோக்கி வைக்கப்படவில்லை. மகிந்த அரசை நோக்கியே வைக்கப்பட்டுள்ளது. ஒரு இன அழிப்பு வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாக சுருக்கப்பட்டுள்ளது.

நடைபெற போகும் பிராந்திய – பூகோள பகடையாட்டங்களைப் பொருத்து அவையும் செயலிழந்து போகுமளவிற்கு இந்த உரையில் நிறைய சமரசங்கள் இருக்கின்றன. ஒரு ஆட்சிமாற்றத்துடன் நடந்த இன அழிப்பிற்கான நீதியை குழிதோண்டி புதைக்கும் சாத்தியம் இந்த உரையில் கோடுகாட்டப்பட்டுள்ளது.
navanee
இது ஒன்றும் புதிய விடயமுமல்ல. நல்லிணக்க ஆணைக்குழு தமிழர்தரப்பால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. அது நடைமுறைப்படுத்த படுகின்றதா என்பதை நேரில் பார்ப்பது என்பதே அம்மையாரின் நிகழச்சி நிரல். இராணுவ பரம்பலுக்கு வழிகோலும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த படுகின்றதா என்பதை ஆராயும் ஒரு பயணம் எமக்கு சாதகமான ஒன்றல்ல என்பதை நாம் ஏற்கனவே புரிந்திருக்க வேண்டும்.

இருந்த போதும் நேரில் நடக்கும் கொடுமைகளை அவர் பார்ப்பதனூடாக அவர் செப்டம்பரில் வழங்க இருக்கும் வாய்வழி வாக்குமூலத்தில் (Oral status) சில சாதகமான அம்சங்களை உள்ளடக்கலாம் என்றே தமிழர் தரப்பு கணித்தது.

ஆனால் சிங்களம் திட்டமிட்டு பரப்பிய உளவியல் போருக்குள் தன்னை பலிகொடுத்து தன்னை பாதுகாக்கும் ஒரு சிறுபிள்ளைதனத்தை அம்மையார் செய்திருக்கிறார். மெர்வின் சில்வாவின் “கல்யாண கதையும்” சிங்கள இனவாத அமைப்புக்களின் போராட்டங்களும் தன்னை திசைதிருப்ப சிங்களத்தால் திட்டமிடப்பட்டவை என்பதை நவிபிள்ளை உணராதது துரதிஸ்டவசமானது.

விளைவாக தனது பதவிநிலையையும் வந்த நோக்கத்தையும் மறந்து தனி மனுசியாக தன்னை புனிதப்படுத்த புலிகள் மீதும் தமிழர் தரப்பு மீதும் சேற்றை வாரியிருக்கிறார்.

சிறீலங்கா அரசு மீது குற்றங்களை வைக்க சொற்களை தேடி அகராதிகளின் துணையை நாடிய அவர் புலிகள் மீதான குற்றத்திற்கு அகராதிக்கு வெளியில் இருந்து சொற்களை கொண்டு வந்திருக்கிறார்.

எந்த விசாரணையும் இல்லாமல் சிறீலங்கா அரசால் பரப்புரை செய்யப்பட்ட கொலைகளை புலிகளின் கொலைகளாக அவர் சித்திரிப்பது அவர் பதவி நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.

நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் படுகொலைகளை புலிகள் செய்ததாக அடித்து கூறும் இவர் இதற்கான தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

நீலனின் கொலையை புலிகள் ஒப்புக்கொண்டார்களா? அல்லது புலிகளின் தலைவர்கள் இக்கொலை தொடர்பாக நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்களா? அல்லது அனைத்துலக நீதி மன்றங்கள் எதிலாவது இதில் புலிகள் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதா? அல்லது இலங்கையாவது கொலைகாரர்களை நீதியின் முன்நிறுத்தி நீதி வழங்கியதா? சரி அப்படி சிறீலங்கா நீதிமன்றம் குற்றம் சுமத்தினாலும் அந்த நீதி எத்தகையது? பிரதம நீதியரசர் விவகாரத்திலிருந்து இலங்கை நீதித்துறையின் முறைகேடுகளையும் உரிமை மீறல்களையும் கண்காணிக்கத்தானே நவி பிள்ளை இலங்கைக்கு வந்திருக்கிறார்.

ஆனால் முடிந்த முடிவாக புலிகள் நீலன் திருச்செல்வத்தை கொலை செய்ததாக சொல்கிறார். நவிபிள்ளை முடிந்தால் தமிழர் தரப்பிற்கு இந்த ஆதாரங்களை தர வேண்டும்.

ராஜீவ்காந்தி தொடக்கம் பிரேமதாச வரை புலிகள் எப்படி அன்னிய சதிகளினூடதாக அரசியற் படுகொலைகளில் சம்பந்தபடுத்தப்பட்டார்கள் என்பது தற்போது நிருபணமாகிவருகிறது. இதற்காக புலிகள் அமைப்பிலிருந்தே பலர் விலைக்கு வாங்கப்பட்டதும் நிருபணமாயிருக்கிறது. இன்று இன அழிப்பு அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கும் குமரன் பத்மநாதன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

சுயாதீனமான அனைத்துலக விசாரணையை தமிழர்கள் கோருவது தமிழர்களுக்கு நீதி கிடைக்க மட்டுமல்ல தமிழர்களின் போராட்ட சக்தியான புலிகள் மீதான இந்த குற்றச்சாட்டுக்களை களைவதற்குமாகும். ஆனால் பொறுப்பான பதவியில் இருக்கும் நவிபிள்ளை எந்த ஆதாரங்களுமின்றி அவதூறு பரப்புவது கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழர் அமைப்புக்கள் உடனடியாக நவிப்பிள்ளையிடம் இதற்கான விளக்கத்தை கோர வேண்டும். தமிழர்களிடம் நவிபிள்ளை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இது எமக்கான ஆறுதலுக்காக அல்ல. எமக்கு முழுயைமான நீதி கிடைப்பதற்கான அடிப்படை இது.

இனத்திற்காக போராடியவர்களையும் ஒரு இன அழிப்பு அரசையும் சமப்படுத்தும் போக்கு எமக்கான நீதியை தாமதப்படுத்தும் அல்லது தடுக்கும் முயற்சி என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

நவிபிள்ளை தனது வாய்மொழி வாக்கு மூலத்தை வழங்க முன்பாக தமிழர்கள் பரந்தளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சிறீலங்கா அரசினால் பதட்டப்படுத்தப்பட்ட ஒரு தனி மனுசியாக அல்லாமல் மேற்குலக நிகழ்ச்சி நிரலையும் தாண்டி தான் கண்ட கேட்ட சாட்சிகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான நீதியை முன்வைக்க வேண்டும் என்று போராட வேண்டும்.

ஏனென்றால் மக்கள் போராட்டம்தான் எல்லாவற்றினதும் அடிப்படை.