நாடுகடந்த தமிழீழ அரசு : ஜனநாயகம் கிலோ என்ன விலை?

0
682

idp-7உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஜெர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ன முடிவை அறிவிக்கப்போகிறது என்று ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்த சமகாலத்தில் அமெரிக்காவில் நாடுகடந்த அரசு கூடி தமக்குள் பதவிகளை பங்கிட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது அரசு. அவர்களது பதவிகள் அவர்கள் பங்கிட்டு கொள்ளட்டும். இதற்குள் நாம் தலையிடுவது அறமல்ல.

இருந்தாலும் ஒரு கவலைதான். மே 18 இற்கு பிறகு நடந்த இன அழிப்பிற்கு நீதிகேட்கப் போவதாக புறப்பட்ட ஒரு அமைப்பு ஒரு அனைத்துலக கவனத்தை ஈர்த்து தமிழர் தலைவிதியை மாற்றப்போகும் ஒரு தீர்ப்பு குறித்து விவாதித்து கொண்டிருந்த நாட்களில் அந்த தீர்ப்பாயத்துடன் இணைந்து ஆதாரங்களை சமர்ப்பித்து நீதிக்காக போராடாமல் கதிரைகளுக்காக ‘போராடு’கிறதே என்ற கவலைதான்.

நாடுகடந்த அரசு. இந்த பெயரை கேட்டாலே இந்த பந்தியை தொடர்ந்து மக்கள் வாசிக்க மாட்டார்கள் என்பதே இன்றைய யதார்த்தம். இருந்தாலும் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சிறு பதிவு.

நாடுகடந்த அரசிற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடக்காமலேயே வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதும், தற்போது கூடி கதிரைகளை பங்கிட்டு கொண்டதும் இங்கு பலருக்கு தெரியாது. ஏன் எமக்கு கூட தெரியாது. என்னதான் நடக்கிறது என்று விசாரித்த போது பலர், ‘என்ன சிவாஜி செத்திட்டாரா?’ என்ற ரேஞ்சிற்கு வியப்பை வெளியிட்டதுதான் மிச்சம்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள, நீங்கள் திரிசா குளித்த வீடியோவையும், தேங்காய் போடாமல் புட்டு அவிப்பது எப்படி? என்ற தகவலையும், கூடவே சில அரசியல் செய்திகளையும் ‘பிட்’ டாக போடும் சில இணையங்களை கண்வெட்டாமல் பார்த்துகொண்டிருக்க பயிற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் சேகரித்த தகவல்களை வைத்து அலசுவது நமது கடமை.

என்னதான் நடந்தது?

தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்த வரலாறு உலகெங்கும் உண்டு. தேர்தல் அறிவித்த பின்பும் போட்டியிட ஆள் வராத வரலாற்று சாதனையை நாடுகடந்த அரசு தட்டிச்சென்றிருக்கிறது.

விளைவு |ஜனநாயகப்படி’ வெற்றியாளர்களை அவர்களே அறிவித்து விட்டார்கள். கேட்கும் உங்களுக்கே புல்லரித்தால் இதையெல்லாம் தேடித்தேடி கேட்ட நமக்கு எப்படி இருந்திருக்கும். பல நாடுகளில் பலவந்தமாக, பணம் கொடுத்தெல்லாம் வேட்பாளர்களை களமிறக்கும் நிகழ்வுகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கும் மக்கள் மசியவில்லை. அப்படி மக்களுக்கு இந்த அமைப்பின் மீது என்னதான் கொலைவெறி?

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் கதை எமக்கு தெரியும். இங்கு வேட்பாளர்களுக்கு அது நடந்திருக்கிறது. பல சாதனைகளை படைத்து தமிழீழ விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று நம்பப்பட்ட ஒரு அமைப்பு இன்று வேறொரு கோணத்தில் பல கின்னஸ் சாதனைகளை படைக்க புறப்பட்டிருக்கிறது. இப்பவே கண்ணைக் கட்டுது. இனி என்னவெல்லாம் சாதனை புரியப்போகிறார்களோ தெரியாது.

சரி எந்த இடத்தில் இந்த அமைப்பு சறுக்கியது என்று பார்க்கலாம் என்றால் அது ஒன்றால்ல இரண்டல்ல பல்லாயிரம் பக்கங்களில் எழுதப்பட வேண்டிய வரலாறு அது. அந்த அவலத்தை உங்கள் மீது நாம் திணிக்க விரும்பவில்லை.

நாடுகடந்த அரசு தன்னை சுயவிமர்சனம் செய்யாததும் ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கி தம்மை மீளமைத்துக்கொள்ளாததாலும் வந்த வினை இது. வேட்பாளர்கள் களமிறங்க மறுத்த அடுத்த கணமே மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பதும் தெரிந்து விட்டது. ஒரு கட்டமைப்புக்கு ஒட்டுமொத்தமாக மக்கள் சேர்ந்து அடித்த சாவுமணி அது. மறுகணமே நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். யாராவது அதை எடுத்து நடத்த வருமாறும் பகிரங்க அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது எல்லாம் தலைகீழ். மீண்டும் அதே பல்லவி . மெகாசீரியலின் அடுத்த காட்சிகள்.

இதற்கு பின்பும் அவர்களது அறிக்கைகளில் இது ‘ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களின் ஏகோபித்த ஆதரவு’ என்று உங்களுக்கு வாந்திபேதியுடன் கூடிய மாரடைப்பு வரக்கூடிய அனைத்து அறிகுறிகளும் உள்ளன. எனவே அவற்றை வாசிப்பது இனி உங்கள் பொறுப்பு. வாசித்து வரும் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பெடுக்காது.

உண்மையில் மே 18 இற்கு திசை தெரியாமல் நின்ற இனத்திற்கு நம்பி;க்கை வெளிச்சம் பாய்ச்சிய ஒரு கட்டமைப்பு நாடு கடந்த அரசு என்றால் அது மிகையல்ல. பலர் நம்பிக்கையுடன் அதை கட்டியெழுப்ப களமிறங்கினார்கள் என்பதும் உண்மைதான். தமிழ்ப்பரப்பிலேயே இந்த கட்டமைப்பை உடைக்க பல சதிகள் நடந்ததும் உண்மைதான். ஆனால் அது ஒரு சூழலின் விளைவு. ஒரு இனத்தின் பேரழிவுக்கு பின்பு நடந்த குழப்பங்களினதும் உளவியற் சிக்கல்களினதும் விளைவு.

இந்த குழப்பமான சூழலினூடாகத்தான் தமது பயணம் இருக்கும் என்பதை தெரிந்து தம்மை தயார் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மாறாக வெளிப்படைத்தன்மையற்ற கட்டப்பஞ்சாயத்து, மாபியா கும்பல்களைப்போல் உள்முகமாக சுருண்டு மடிந்ததன் விளைவுதான் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இன்று ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்படும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.

பலர் திட்டமிட்டே இந்த அமைப்பை உடைக்க முற்பட்டார்கள் என்பதற்காக மக்களது சந்தேகங்களிற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நழுவ முடியாது. உதரணத்திற்கு ஒன்று.

கேபி என்பவர் இந்த கட்டமைப்பை நிறுவ முயற்சித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அனால் அவர் இனத்தை கூண்டோடு காட்டிக் கொடுத்தவர் என்பது பிற்பாடு அனைவருக்கும் தெரிந்தும் விட்டது. சிலர் குழப்புவதற்காக இந்த விடயத்தை தூக்கி பிடிக்கிறார்கள் என்பதற்காக மக்களுக்கு பதில் சொல்லாமல் தப்ப முடியாது. ‘எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்’ என்ற களயதார்த்த்தில் வளர்ந்த மக்களுக்கு இதை தெளிவு படுத்த வேண்டும்.

மாறாக நாடுகடந்த அரசின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று நம்பப்படுகிறவர்கள் வெளிப்படையாகவே கேபியை ஆதரிப்பதும் நாடு கடந்த அரசில் அங்கம் வகித்ததும் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைந்தவர்களே இன்னும் களி தின்னும்போது கேபியின் சுதந்திரமான நடமாட்டம் மக்களிடம் ஒரு தெளிவான சிந்தனையை கொடுத்துவிட்டது. எனவே மக்களை பல நாடுகடந்த அரசின் உறுப்பினர்கள் முட்டாளாக்க முற்பட்டார்கள். விளைவு தேர்தல்கூட நடத்த முடியாமல் தூக்கியெறியும் நிலைக்கு மக்களால் தள்ளப்பட்டு விட்டது நாடுகடந்த அரசு.

இது ஒரு உதாரணம். இப்படி வெளிப்படைத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பல நூறு காரணங்களை நாடுகடந்த அரசின் கட்டமைப்புக்குள் மக்கள் கண்டடைந்ததன் விளைவுதான் இந்த இழி நிலை.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தாங்களே தங்களுக்குள் உருவாக்கிய அவையை கலைத்துவிட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். யாராவது வெளித்தரப்பின் ஊடாக மறுதேர்தலை நடத்தி ஜனநாயகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் நிலை நிறுத்த வேண்டும்.

ஏனென்றால் ‘நாடு கடந்த அரசு’ என்ற பெயருக்கு பின்னால் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவங்கள் இருக்கிறது என்று நாம் இன்னும் நம்புகிறோம். தமிழீழ விடுதலை தொடர்பான சாத்தியமான பொறிமுறைகளை நாடுகடந்த அரசினூடாக உருவாக்கலாம் என்றும் நம்புகிறோம்.

ஆனால் அதற்கு அந்த அமைப்பு வெளிப்படைத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும். அல்லது தமிழின வரலாற்றில் காணால்போன அமைப்புக்களின் பட்டியலில் விரைவில் அது சேரும்.

ஈழம் ஈ நியூஸ்.