தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைக் கழகம் என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் தமிழ்ச் சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்து வந்தவர்.

nallathamby
இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் வீறு கொண்டெழுந்தபோது 1984 ஆம் ஆண்டிலிருந்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று பயணித்தார்.

இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வுமிக்க மூத்த மகனை ஒட்டுக்குழுக்களின் துப்பாக்கிக்குப் பலிகொடுத்த நிலையில் இந்தியப்படை நல்லதம்பி ஐயாவைக் கைதுசெய்து சிறை வைத்திருந்தது.

இவரின் இன்னொரு மகன் கப்டன். ரதீஷ் 24 . 10 .1987 அன்று களத்தில் வீரச்சாவடைந்தார்.

தேசியத்தலைவரால் அறியப்பட்டிருந்த தீவிர ஆதரவாளர்களுள் நல்லதம்பி ஐயாவும் ஒருவர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட ஆரம்பகாலப் போராளிகளுள் இவரை அறியாத நிலையில் எவரும் இருந்ததில்லை எனுமளவுக்கு போராட்டத்தோடு ஒன்றித்திருந்தவர் நல்லதம்பி ஐயா.

தென்தமிழீழத்தில் எமது இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிக்கு நல்லதம்பி ஐயாவின் பங்களிப்பு அளப்பரியது.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நல்லதம்பி ஐயாவின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.

எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் நல்லதம்பி ஐயாவும் இணைந்துகொள்கிறார்.

தான் நேசித்த தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தனது மனைவியோடு விடுதலைப் புலிகளுடனேயே பயணித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தார்.

தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை நாட்டுப்பற்றாளர் எனக் கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012.