தமிழ் மக்கள் போராடுவது எவரையும் நம்பியல்ல… தமிழ் மக்களாகிய எம்மை நம்பி மட்டுமே!

 

தமிழ் மக்களின் குரலாக இருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அரசின் ஊதுகுழல்ககளாக விளங்கி அரசு விருந்து படைத்த எலும்பு துண்டுகளுக்காக அரசுக்கு வாலாட்டி செய்த இரண்டகத்தால் எமக்கான நீதி மறுப்பு என்பது அனைத்துலகிற்கு இலகுவானது.

 

வாக்களித்த மக்களுக்கு இரண்டகம் செய்த தமிழ் தலைமைகள் வரலாற்றில் தவறு இளைத்திருந்தாலும் தமிழ் மக்களின் போராட்டம் அவர்கள் கைகளிலோ இந்த உலகின் கையிலோ இல்லை. அது தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.

 

எங்களுக்கான நீதியை வென்றெடுக்கும் வரை தமிழ் மக்கள் நாம் மனசோர்வின்றி தொடர்ந்தும் போராடுவோம்!

 

உலகை சாட்சியாக வைத்து நடத்தப்பட்ட இந்த நூற்றாண்டின் கொடிய தமிழினப்படுகொலைக்கு நீதியை பத்து ஆண்டுகளின் பின் இந்த உலகம் தானாக இலகுவில் கையில் தரும் என நினைப்பது மடமை என தமிழ் மக்கள் நன்கு அறிவர் என்றாலும் போராடிய தமிழ் மக்களை இந்த சர்வதேசம் ஈவு இரக்கம் இன்றி இழுத்தடித்து ஏமாற்றி இருக்கின்றது என்பதால் தமிழ் மக்களில் பலருக்கு சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் 40 வது கூட்டத்தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதையும் மறப்பதற்கு இல்லை.

 

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

 

இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.

 

இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

 

“இலங்கையில் நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் காலவரம்புக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும்!” என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதில், உரையாற்றிய போதே பிரித்தானிய பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

 

“இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர்க்குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரம்புக்குட்பட்ட வகையிலான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி.

 

“சிறிலங்கா உடனடியாக, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், நிலையான நல்லிணக்க செயல்முறையை நிறுவுவதற்கான நிலையான நடவடிக்கையை, முன்னெடுப்பதற்கு தெளிவான காலவரம்புடன் கூடிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிறிலங்காவில் துன்புறுத்தப்படுவது மற்றும் கண்காணிக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக கிடைக்கும் அறிக்கைகள் கவலை அளிக்கிறது.” என்றும் கூறினார்.

 

இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வாறு கூறியுள்ளது.

 

2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி சில விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.எனினும் பல விடயங்களில் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்ட போதும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

 

போர்க்குற்ற பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தில் இன்னும் இணக்கம் ஒன்று எட்டப்படவில்லை.

 

இந்தநிலையில் ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் தொடர்ந்தும், பொறுப்புக்கூறலில் காலதாமதம் இருக்கக்கூடாது.

 

அதற்கு பதிலாக இலங்கை தமது பொறுப்பை நிறைவேற்ற சர்வதேசத்தின் கண்காணிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கள அவதானிப்பு சாட்சிய திரட்டல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை என்பன அவசியம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

“தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது.

 

இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதும், பாதிக்கப்பட்ட எல்லா சமூகத்தினரதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.

 

குறிப்பிட்ட காலவரம்புக்குள், சிறிலங்கா அரசாங்கம், விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறைகளுக்கான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

சுதந்திரமான, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டம், முக்கியமான அடுத்த கட்டமாக இருக்கக் கூடும்.

 

சிறிலங்கா அரசின் உயர் மட்டத் தலைமையின், தூரநோக்கின்மையால், போர்க்கால அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும், தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா தவறி விட்டது.

 

ஐ.நாவுடன் கொழும்பு ஒத்துழைத்த போதும்,2010 பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை மிக மெதுவாகத் தான் நடைமுறைப்படுத்துகிறது.

 

2015இல் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அரசாங்கம், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும், அனைத்துலக – ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிப் பொறிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது.

 

ஆனால், இரண்டு தரப்பிலும் பத்தாயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டதற்கு நீதியை உறுதிப்படுத்தவதற்கான எந்த பொறிமுறையையும் கொழும்பு இன்னமும் உருவாக்கவில்லை.

 

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் இன்னும் சீரான, விரிவான முறையில் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

 

அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை கடுமையாக மீறியவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டிருப்பது, கவலையளிக்கும் ஒரு நிலைமையாகும்.

 

மனித உரிமைகள் விடயத்தில் கேள்விக்குரிய படை அதிகாரிகளை நீக்குவதற்கு, ஆய்வுச் செயல்முறைகளை உள்ளடக்கிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 43 ஆண்டுகளுக்குப் பின்னர், மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அதிபரின் அறிவிப்பு கவலை அளிக்கிறது.

 

அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் தைரியமான முடிவு மற்றும் தலைமைத்துவத்தின் மூலம், கடந்தகால வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

 

சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை அமைக்கவும், தெளிவான காலவரம்புக்குட்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமைக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் நேற்று சமர்ப்பித்த விரிவான அறிக்கைக்குப் பதிலளித்து, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

 

இதன்போது அவர், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையை அமைப்பதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் நிராகரித்தார்.

 

நாட்டின் அரசியலமைப்புப் படி, சிறிலங்காவின் குடியுரிமை கொண்டடிராத நீதிபதிகளை விசாரிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 

2015 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலோ வேறு எந்த அதிகாரபூர்வ ஆவணங்களிலோ, சிறிலங்கா படையினருக்கு எதிராக போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, எந்தவொரு நிரூபணமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

”சிறிலங்கா படையினர், பல நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீவிரவாத அமைப்புடனேயே போரிட்டனரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிராக போரிடவில்லை.

 

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்ற கலப்பு நீதிப் பொறிமுறைக்கு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பது, சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளுக்கு அமைய கடினமானது.

 

இலங்கையர் அல்லாத நீதிபதிகளை அத்தகைய நீதிப் பொறிமுறையில் உள்ளடக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடனும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக ஈற்றில் அறிவிக்கப்பட்டது.

 

இது தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தருகின்றது. குறிப்பாக வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு என்ன வேண்டும் என மக்கள் அனைத்துலகிற்கும் தெரிவித்த பின்பும் இப்படி சர்வதேசம் ஒரு முடிவை தமிழ் மக்கள் மனங்களுக்கு முரணாக முன்வைத்தமை வேதனையும் சோர்வும் விசனமும் தருகின்றமை உண்மையே.

 

ஆனால் எந்த தோல்வியும் தோல்வியல்ல. இன்னொரு பாதைக்கான முயற்சிக்கான முதற்புள்ளியாகவே ஒவ்வொரு தோல்விகளும் அமைகின்றன.

 

தமிழினத்தின் மீதான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்கள் மூலமோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயன்கள் மூலமோ முயல்வோம் என தமிழ் மக்கள் அடுத்த பாதைகளை பயணித்து பார்க்க முடிவெடுத்ததையும் நாம் காண முடிகின்றது.

 

ஐ. நா. போல் அங்கும் தமிழர்கள் தோற்றுப்போவார்கள் என சிலர் இப்பொழுதே ஆரூடம் கூறி முயற்சிகளை முடக்க நினைக்கின்றார்கள்.

 

ஆனால் அனைத்து வழியிலும் அனைத்து காலங்களையும் களங்களையும் நமதாக்குவது போராட்டத்தின் அங்கமாகும்!

 

தோற்றுவிடுவோம் என முயற்சிகளை முன் முனையாமல் இருப்பதை விட முயற்சியை அனைத்து திசைகளிலும் வீச்சாக்குவோம்!

 

ஈழத்தமிழர்களின் நீதிக்கான செயல்வழிப்பாதை ஜெனிவாவோடு மட்டுப்படுத்தப்படாமல் அதற்கும் அப்பாலும் நமக்கான வாய்ப்புக்கள் என நினைக்கும் அனைத்து வழிகளிலும் நாம் போராட வேண்டும்.

 

தமிழினம் முதலில் ஒற்றுமைப்பட்டு செயல்பட வேண்டும். இன்றும் தமிழினத்திடம் ஒற்றுமை இருந்திருந்தால் சர்வதேசத்தால் எழுந்தமானமாக தமிழ் மக்களை ஏமாற்றி தமது முடிவுகளை திணித்திருக்க முடியாது.

 

இனப்படுகொலைக்கான சாட்சியங்கள் போதுமானவையாக இருந்தும் தமிழர் குரல்களை இந்த உலகம் மதிக்கவில்லை.

 

ஆளுக்கொரு திசையில் தமிழர்கள் நின்றதால் தான் தமிழருக்கான தீர்வை இந்த உலகம் இழுத்தடித்து மறுக்கவும் வாய்ப்பானது. அதில் முதன்மை பங்கை ஆற்றிய இழிவு தமிழ் அரசியல் தலைமைகளை சாரும்.

 

போராடும் மக்களின் குரல்களாக வலிமையாக குரல் கொடுத்திருக்க வேண்டியவர்கள் அற்ப சலுகைகளுக்காக பல இழுத்தடிப்புகளை இந்த பத்து ஆண்டுகளில் செய்து தமிழ் மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்தார்கள்.

 

ஐ.நாவின் 40வது கூட்டத் தொடர் தமிழர் தரப்புக்களை ஓரளவுக்கு ஒற்றைப்புள்ளியில் இணைத்துள்ளது எனும் நம்பிக்கையை சற்றே தந்தாலும் இந்த ஒருமித்த செயல்பாடு இனி வரும் காலங்களில் மென்மேலும் வலிமையாக அமைய வேண்டும்.

 

தாயக மண்ணில் களத்தில் இருந்து கொண்டு அதிகம் பேசாமல் செயல்களை மட்டுமே வரலாறாக்கிக்கொண்டு சுட்டு விரலால் சுட்டி காட்டிய திசை எல்லாம் எப்படி தேசியத்தலைவரின் வழி நடத்தல் தமிழினத்தை வழிநடாத்தியதோ அத்தகைய வலிமையான ஒற்றைப்புள்ளியின் கீழ் தமிழினம் ஒன்றுபட வேண்டும்.

 

காலத்தால் ஒப்பிட முடியாத தலைவர் தேசிய தலைவர் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் காலம் இன்று அவருக்கு நிகரான தலைமையை எதிர்பார்க்கின்றது.

 

போராடும் சக்தியில் இருந்து அத்தகைய தலைமை மக்களால் உறுதியாக ஒரு நாள் உருவாக்கப்படும்!

 

அதுவரையேனும் ஒருங்கிணைந்த மக்களுக்கான ஒற்றுமையை தமிழ் மக்களுக்காக அனைத்து தரப்பினரும், அனைத்து தமிழ் மக்களும் இதய சுத்தியதோடு கடைப்பிடித்து சோர்வின்றி தொடர்ந்தும் வலிமையான குரல்கொடுப்போடு இன்னமும் வீச்சாக போராட வேண்டும்!

 

காலங்கள் நீளலாம்! ஆனால் போராட்டங்கள் என்றும் தோற்பதில்லை!

 

நன்றி: சிவந்தினி