seeman-887வரும் 24 ம் திகதி திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது. இத் தருணத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் ‘நாம் தமிழர்’ கட்சியின் இந்த அரசியல் இன எழுச்சி மாநாட்டுக்கு ஒருமித்த ஆதரவை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 

சம காலத்தில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் எந்த தலைவரும் சந்திக்காத விமர்மசனங்களை நாம் தமிழர் கட்சி குறிப்பாக சீமான் சந்தித்து வருகிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஈழத்தமிழர்களாகிய சிலரும் அந்த விமர்சனத்தில் கணிசமாக பங்கெடுத்து வருகிறார்கள். இது உண்மையிலேயே துயரம் நிறைந்த ஒன்று.

 

மே 18 இனஅழிப்புக்கு பிறகு தமிழகத்தில் ஒரு இளைய தலைமுறையை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கம் இழுத்து வந்ததில் சீமான் முதன்மையானவர். மே 18 இற்கு பிறகு தமிழகத்தில் இருந்து ஈழ விடுதலை சார்ந்து பல்வேறு அமைப்புக்கள் தோன்றியதும் ஒவ்வொருவரும் தமக்கென வெவ்வேறு பாதைகளை வகுத்துக் கொண்டதும் நடந்தேறியது.

 

சீமான் ஆட்சியதிகாரத்தில் தமிழர் நலன் சார்ந்த ஒரு தலைமை இல்லாததன் விளைவே இனஅழிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற முடிவுக்கு வந்து அதன் வழி படிப்படியாக தேர்தல் அரசியலுக்குள் வந்து சேர்கிறார். இது ஒரு வழிமுறை அவ்வளவுதான். தேர்தல் அரசியலுக்கு அப்பால் நமது அரசியல் போராட்ட வழிமுறைகளை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே போன்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலான ஒரு கட்சியை வளர்க்க வேண்டிய தேவையையும் நாம் மறுக்க முடியாது.

 

இந்த பின்புலத்தில்தான் நாம் தமிழர் கட்சியின் அரசியல் பிரவேசத்தை நாம் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. எனவே குறுகலான தூரநோக்கற்ற பார்வையின் வழி நின்று சீமானின் அரசியல் பிரவேசத்தை விமர்சிப்பது ஈழத்தமிழர்களாகிய எமக்கு எந்த இலாபத்தையும் தரப்போவதில்லை.

 

சகட்டு மேனிக்கு இணைய ஊடகங்கள் வழி ஈழத்தமிழப்பரப்பிலிருந்து விமர்சனங்கள் வைக்கப்படுவது பெரும் கவலையளிக்கிறது. இந்த ஒட்டு மொத்த விமர்சனங்களின் மையப்புள்ளி எது? சீமான் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் விமர்சனம் எந்த நோக்கத்திற்காக – என்ன அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது என்பது இங்கு முக்கியமானது.

 

எமது நேச சக்திகளைக்கூட இனங்காண முடியாமல் அல்லது இனங்காண விடாது தடுக்கும் ஒரு நிகழச்சி நிரலுக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி நாம் இனங்காணத் தவறிய அல்லது அதற்கான முக்கியத்துவத்தை கொடுக்க தவறிய ஒரு ஆளுமையாகவே நாம் சீமானைப் பார்க்கிறோம்.

 

எமக்கும் சீமான் மீது விமர்சனம் உண்டு. ‘உடன்பாடானவர்களுடன்தான் முரண்படவும் முடியும்’ என்ற அடிப்படையில் அந்த விமர்சனப் பார்வையை நாம் வகுத்துள்ளோம். எமக்கு ஆதரவான ஒரு சக்தியை நிர்மூலம் செய்யும் நோக்கிலான அழித்தொழிப்பு விமர்சனம் அல்ல அது.

 

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் – இராஜதந்திர அம்சம். மே 18 இற்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது.

 

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் புரட்சி இலிருந்து ஆட்சியை கைப்பற்றுவது வரை இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நெருக்கடி.
இந்த புரிதலின் அடிப்படையில்தான் 2007 தொடக்கத்தில் தலைவர் பிரபாகரன் – சீமான் சந்திப்பு நிகழ்கிறது. தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்ற தீவிர ஆதரவு சக்திகள் இருந்தாலும் காலத்தின் தேவை கருதி ஒரு இளைய போராட்ட தலைமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் பல பரிமாணங்களின் அடிப்படையில் சீமான் போன்ற இளைய தலைமுறையை தலைவர் அணுகத் தலைப்பட்டார்.

 

கிட்டத்தட்ட தலைவர் தமது இராணுவ பின்னடவை உணர்ந்த பின் நடந்த சந்திப்பு இது என்பதுதான் இங்கு முக்கியமானது. உண்மையில் தமது அழிவுக்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதே சீமான் போன்றவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டது. தலைவரின் தூர நோக்கிலான சிந்தனையில் விளைந்ததே அந்த சந்திப்பு.

 

ஆனால் மே 18 இற்கு பிறகு குழு – கும்பல்களாக பிளவுபட்ட நாம் தமிழகத்திற்குள்ளும் அதை கொண்டு நகர்த்தி அங்கும் பிளவுகளை விரிவுபடுத்தியதுதான் நமது சாதனை. விளவாக சீமான் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

 

சீமான் மீது அவரது அரசியல் பிரவேசத்தினால் அவர் வெளியிட்டிருக்கும் கொள்கை பிரகடணத்தால் தமிழக அளவில் சில விமர்சனங்கள் எழுவது யதார்த்தமானது. ஆனால் ஈழத்தமிழர்களாகிய எமக்கு அவர் மீது விமர்சனம் வைப்பதற்கான முகாந்திரம் எது?

 

மே 18 இற்கு பிறகு எமது தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் அடித்த பல்டியை விட சீமான் என்ன பல்டி அடித்து விட்டார்.?

 

எனவே நேச சக்திகளை ஏன் நாம் விமர்சிக்க வேண்டும்? புறந்தள்ள வேண்டும்? இது அரசியல் சாணக்கியமா?

 

இன்று சீமான் உருவாக்க நினைக்கும்; அல்லது சாதிக்க நினைக்கும் பல வேலைத்திட்டங்கள் தமிழீழத்தின் இருப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்று தமிழக அளவில் சீமான் போட்டிருப்பது ஒரு புள்ளி. அவரால் முடியாவிட்டாலும் அடுத்த தலைமுறை அதை சாதிக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

 

எனவே நாம் தமிழர் கட்சியிடம் குறிப்பாக சீமானிடம் இருக்கும் முரண்பாடுகளுடன் சேர்த்து நாம் அவரை அரவணைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எனவே அவரை விமர்சிப்பதை தவிர்த்து ஆரோக்கியமான உரையாடலாக அதை மாற்றி அவரை எமது விடுதலைக்கு உழைக்கும் ஒரு ஆளுமையாக வளர்த்தெடுப்போம்.

 

அவர் பாதை மாறினாலும் நாம் அவரை எமது வழிக்கு திருப்புவதும் அதை எமக்கு சாதகமாக மாற்றுவதுமே இனஅழிப்புக்குள்ளான – இனஅழிப்புக்கு இன்னும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிற இனத்தின் அரசியல் சாணக்கியமாக இருக்க முடியும்.

 

எனவே நாம் தமிழர் கட்சியின் இனஎழுச்சி மாநாடு இனிதே நடைபெற்று அவர்களது அரசியல் பயணம் வெற்றி பெற ஈழத்தமிழர்களாகிய நாம் மனதார வாழ்த்துவோம்.

 

ஈழம் ஈ நியூஸ்.