கொழும்பு நெருக்கடியை முன்னிட்டு மேற்குலக அரசுகளின்/ அமைப்புக்களின் பதட்டத்தின் உச்சமாக அவசர அவசரமாக மைத்ரியை ஐநா பொதுச் செயலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தும் பாணியில் பேசியதாக அறிய முடிகிறது.

 

இது குறித்த ஐநா பேச்சாளரின் அறிக்கையினூடாக இதை ஓரளவு ஊகிக்கவும் முடிகிறது.

 

எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது புலத்தில் நாம் வீதியில் கிடந்து ஐநா வை தலையிடும்படி மாதக் கணக்காக புலம்பியபோதும் அப்போதைய ஐநா செயலருக்கு நேரடியாக ஒரு அறிக்கை வெளியிட சில மாதங்கள் தேவைப்பட்டது.

 

நேரடியாக தொலைபேசி எடுத்து சிங்கள ஜனாதிபதியை அச்சுறுத்த வேண்டாம், ஒரு பேச்சுக்காவது போரை நிறுத்தும் படி கேட்டிருக்கலாம்.

 

ஆனால் எல்லாம் உச்சக் கட்டத்தை அடைந்த பின்தான் சீனிற்குள் வந்தார் ஐநா செயலர்.

 

ஏனென்றால் தமிழின அழிப்பின் பின்னணியில் இவர்களும் இருந்தார்கள்.

 

தற்போது கடுகதி வேகத்தில் களத்தில் நேரடியாக ஐநா செயலர் குதித்திருப்பதிலிருந்து இதன் புவிசார்/ பிராந்திய அரசியல் போரின் பின்னணியை தமிழர் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

 

ரணிலை தோற்கடித்து மகிந்தவை தலைவர் பிரபாகரன் ஆட்சி பீடம் ஏற்றியது நேற்றுவரை பலரால் விமர்சிக்கப்பட்டே வந்தது – ஆனால் காலம் இன்று அதன் கனதியை / அவரின் தூர நோக்கு சிந்தனையை புரிய வைத்திருக்கிறது.

 

விளைவாக நாம் நிலங்களைத்தான் இழந்தோம் ஆனால் களத்தை இழக்கவில்லை மாறாக சிங்களமும் இந்தியாவும் தமக்கான களத்தை மட்டுமல்ல தமக்கான சமரையே இன்று இழந்து விட்டன.

 

விளைவே இந்த நெருக்கடி.

 

மகிந்தவை ஆட்சியில் வைத்திருப்பதில்தான் எமக்கான அரசியல் இருக்கிறது.

 

இன்றைய மேற்குலக நலனும் எமது விடுதலை அரசியலும் இடைவெட்டும் மையம் இதுதான்.

 

நாம் வாய்கிழிய ஈழத்தில் நடந்தது “இன அழிப்பு” “போர்க்குற்றம்” என்று கத்தியபோது “மனித உரிமை மீறல்” என்று அறிக்கை எழுதியவர்கள் இன்று நாம் கேட்காமலேயே மகிந்தவை “போர்க்குற்றவாளி” என்று மாய்ந்து மாய்ந்து விளிக்கிறார்கள்.

 

மகிந்த தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் விரைவில் அவர் “இன அழிப்பு குற்றவாளி” என்று இதே மேற்குலகத்தால் விளிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

ஏனென்றால் தலைவரின் “நந்திக்கடல்” கணிதம் இது.

 

ஆனால் வழமை போல் எல்லாவற்றையும் கலைத்து தமிழர்களின் பேரம் பேசும் வலுவை செயலிழக்கச் செய்யும் கூட்டமைப்பு தற்போதும் ரணிலை ஆட்சியில் அமர்த்த சேவகம் செய்யும் முடிவை எடுத்திருக்கிறது.

 
இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

 

அதனால் இந்த புவிசார் நெருக்கடியிலிருந்து சிங்களம் தற்காலிகமாகத் தப்பி நாம் மேலும் இன அழிப்பிற்குள் சிக்கலாம்.

 

ஆனால் தேர்தல் அரசியல்வாதிகளின் மேற்படி குண இயல்புகளை சரியாகக் கணித்திருக்கும் நந்திக்கடல் இதற்கு வேறு ஒரு கணிதத்தை வரைந்து வைத்திருக்கிறது.

 

போரில் மட்டும் வென்று தனது களத்தை முற்றாக இழந்து விட்ட
சிங்களம் மீண்டும் இந்த பொறிக்குள் சிக்கும் /அப்போது நந்திக்கடலின் கணிதத்தை தமிழ் அரசியல்வாதிகளினாலும் நீர்த்து போகச் செய்ய முடியாது.

பரணி கிருஸ்ணரஜனி