நாம் போராடியது ஈழத்திற்காக!

0
563

india-thambiதமிழக முதல்வர் ஜெயலலிதா 13ஆவது திருத்த சட்டத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தியப் பிரதமரை வலியுறுத்திக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 13ஆவது திருத்தத்தை மாற்றம் செய்வது கவலையளிக்கிறது என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, அந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். 13ஆவது அரசியல் திருத்தத்தை இலங்கையின் அரசியலில் பிரதான பேசுபொருளாகப் பிரபலப்படுத்தியிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. ராஜபக்சேவின் இந்த சூழ்ச்சி அரசியல் தமிழக அரசியல் தலைவர்கள் வரை வலை விரித்திருக்கிறது. இப்படித்தான் உலகின் கவனத்தை தான் விரும்பிய பக்கமெல்லாம் திருப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக்சே.

அப்படியெனில் 13ஆவது திருத்தம் அர்த்தமற்றது, அதை சிங்களர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று இருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஒன்றுமில்லாத வெற்றுக்கடுதாசியை அல்லது வெற்று ஒப்பந்தத்தைக் கிழிப்பது தொடர்பான சிங்கள இனவாதிகளின் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில், எமக்குச் சம்பந்தமும் பலனுமில்லாத இதை எல்லாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அப்படிப் பல விடயங்கள் பேசப்படுவதும் பின்னர் அது காற்றில் பறந்து செல்வதும் இலங்கை அரசியலில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

13ஆவது அரசியல் திருத்த சட்டம் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் 1987இல் செய்து கொண்ட ஒப்பந்தத் தின்படி இலங்கை அரசியல் யாப்பில் செய்யப்பட்ட திருத்தம். தனி ஈழத்திற் கான போராட்டம் உக்கிரம் கொண்ட அக்காலத்தில் இலங்கை அரசு ஒரு மாகாண அரசை அமைக்கும் உடன்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அதை இந்தியா இலங்கைக்குப் பரிந்துரைப்பதாகவும் அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. அன்றைய சூழலில் தனி ஈழப் போராட்டத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் என்பது ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கும் ஒப்பந்தம் என்று இதை தமிழீழ விடுதலைப்புலிகள் அன்றே நிராகரித்தனர்.

இந்தியா எங்களுக்குத் தந்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோம் என்று டக்ளஸ் தேவானந்தாவும் வரதராஜப்பெருமாளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி தீர்வுக்குப் போயிருந்தால் இன்று எங்கயோ போயிருக்கலாம் என்றார்கள். இதை அவர்கள் உச்சரித்த காலம், புலிகள் இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட காலமும் அதற்கு முன்னரும். டக்ளஸ் தேவானந்தா மட்டுமல்ல, பலர் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்த சட்டத்தையே நம்பியிருந்தார்கள். 13 பிளஸ் என்று ஜனாதிபதி சொல்லியதாகவும் 13க்கு அப்பால் செல்வார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் அவர் ஆட்சிக்கு ஏறியதும் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக 13ஐயே கையில் எடுத்துக்கொண்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு புலிகளை அழித்து 13ஐ நடைமுறைப்படுத்துவேன் என்றார். 13ஐ நடைமுறைப்படுத்துதல் என்பது ஈழத்தை இந்திய வல்லாதிக்கத்தின்கீழ் கொண்டுவரும் ஒரு கனவாக இந்தியாவுக்கு இருந்து. ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் எத்தகைய ஆதரவையும் வழங்குவோம், எத்தகைய கொலைகளையும் நடத்தலாம், ஆனால் புலிகளை அழிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் சிங்களப் பேரினவாதக் கனவுகளை நிறைவேற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன செத்த பின்னர் அவரது ஒப்பந்தமும் செத்தது என்கிறபொழுது ராஜீவ் காந்தி செத்த பின்னர் அவரது ஒப்பந்தத்தை அவர்கள் என்ன செய்வார்கள்? உண்மையில் அந்தத் தலைவர்களின் சவப்பெட்டிகளிலேயே அந்த ஒப்பந்தம் வைக்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்கள் அதைத்தான் சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் அன்றே செயலிழந்து விட்டது என்று சிங்கள இனவாதி அமைச்சரான சம்பிக்க ரணவக்க சொல்லுகிறார். அன்று சிங்கள அரசைக் காப்பாற்றிய ஒப்பந்தத்தை புலிகளைக் காப்பாற்ற கொண்டு வந்த ஒப்பந்தம் என்று இன்று சிங்கள இனவாதிகள் கூறுகின்றனர்.

13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள காணி அதிகாரத்தை யும் காவல்துறை அதிகாரத்தையும் நீக்க வேண்டும் என்பதே சிங்கள இனவாதிகளின் கோரிக்கை. மகிந்த ராஜபக்சேவின் சகோதரர்களான பசில் ராஜபக்சேவும் கோத்தபாய ராஜபக்சேவும் இதைத்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். இந்த அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் வடக்கில் தமிழ் இராணுவம் உருவாகும் என்று ‘ஹிந்து’ பத்திரிகைக்கு பசில் ராஜபக்சே சொல்லியிருக்கிறார். இந்த அதிகாரங்களுடன் வட ஈழத் தேர்தல் நடத்தினால் தமிழீழம் அமைந்துவிடும் என்று கோத்தபாய எச்சரிக்கிறார். இந்த அதிகாரங்களை வழங்கினால் பிரபாகரனின் கனவு நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க சொல்கிறார்.

இந்தச் சொற்களைக் கேட்டே சிங்கள அரசியல்வாதிகள் பலரும் மாகாண சபை அதிகாரங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துவிட்டனர். வடக்கில் தேர்தல் நடத்தினாலோ, வடக்கு மாகாண சபைக்கு அதிகாரம் கொடுத்தாலோ தமிழீழம் அமைந்துவிடும் என்பதுதான் சிங்கள இனவாதிகளின் அச்சம். இந்தக் கூச்சலை ராஜபக்சேதான் தன் அரசியல் ஆட்டத்திற்காக உருவாக்கியிருக்கிறார். தேர்தல் நடத்தினால் ஆயிரம் பிக்குகள் தீக்குளிப்போம் என்று சொல்லி, பொதுபலசேனா என்று ராஜபக்சேவால் உருவாக்கப்பட்ட இனவாத அமைப்பு எச்சரித்துள்ளது. 13ஆவது திருத்தம் வருத்தமளிக்கிறது என்று இந்தியப் பிரதமர் குறிப்பிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தார். ஆனால் இந்தத் திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன் என்று கோத்தபாய குறிப்பிடுகிறார்.

***

13ஆவது திருத்த சட்டத்தை அன்று புலிகள் நிராகரித்தது ஏன் என்று அதை ஆதரித்தவர்கள் இன்று புரிந்துகொண்டி ருப்பார்கள். எளிதில் அழிக்கக்கூடிய ஒரு அரசியல் திருத்தமாக, எளிதில் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட எளிதில் மீறக்கூடியதாக இருக்கிறது.இதை வைத்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க நினைத்தார்கள். அன்று இதைச் செய்ய முற்பட்ட பொழுது மறுத்த தலைவர் பிரபாகரன் தனிநாடு கோரிப் போராடினார். இன்று மீண்டும் அந்தத் திருத்தத்தை வைத்து ஈழத் தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் கொடுக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

இதில் மன்மோகன் சிங் அழுததாகவோ, சோனியாகாந்தி குதித்ததாகவோ சொன்னாலும் ஈழத் தமிழர்கள் யாரும் நம்பும் நிலையில் இல்லை. வரலாறு முழுதும் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டு தன் நலனை சாதித்துக்கொண்டிருக்கிறது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ராஜீவ் காந்தியும் எப்படியானார்களோ அப்படியே இந்த ஒப்பந்தமும் அரசியல் திருத்தமும் ஒரு அரசியலாக இருக்கிறது.

அதே கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னொரு விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். உலகத் தமிழர்களிடையே தனித் தமிழீழம் குறித்து கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத்தான் ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைவிடவும் அதுதான் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடரும் பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது. 13ஆவது திருத்தம், கிராம சபை, திவி நெகும இப்படி பல அரசியல் அஸ்திரங்களை ராஜபக்சே உலாவவிட்டு,ஈழத் தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் திசையை மாற்றி இனத்தையும் நிலத்தையும் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். எனவே ராஜபக்சேவின் ஆட்சிக்குள் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் தனி ஈழக் கோரிக்கையை இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

***
ele-jaf-2
அப்படியெனில் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதா என்கிற கேள்வி எழுகிறது. தமிழ் தேசிய முன்னணி என்ற தமிழ்த் தேசியக் கட்சி ஒன்று தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. அத்துடன் 13ஆவது திருத்த சட்டம் எமது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் இந்தத் தேர்தலோ அல்லது அதற்குப் பின்னாலுள்ள சட்டமோ பிரச்சினைக்கான தீர்வாக சிறிய புள்ளியாகக் கூட இல்லை என்கிறது அந்தக்கட்சி. தேர்தலைப் புறக்கணித்தால் வடக்கில் ராஜபக்சே வெற்றி பெற்று தனது ஆட்சியை அமைப்பார். அதற்காகவேணும் மக்கள் வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பல தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதை ஆரம்பப் புள்ளியாக பார்க்கிறது. இதை ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தா உள்பட பலர் ஆரம்பப் புள்ளியாகப் பார்த்து ஏமாந்த நிலையில் இப்பொழுது கூட்டமைப்பு நம்புகிறது.

வடக்கு- கிழக்கு மாகாணம் இணைந்த தமிழர் தாயகம் என்பது கூட்டமைப்பின் கொள்கைகளில் ஒன்று. தமிழர் தாயகம் எனப்படும் இந்த மாகாணங்கள் இலங்கை-&இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டது. பின்னர் இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யால் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட மாகணத்தில் கூட்டமைப்பு போட்டியிடுவது அதன் கொள்கைக்கு விரோதமானது. அதேவேளை வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டு அந்த மாகாணத்தில் ஆட்சி அமைப்பதன் மூலம் பிற்காலத்தில் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றி இரண்டு மாகாணங்களும் இணைந்துகொள்ளுமோ என்ற அச்சம் சிங்கள இனவாதிகளிடம் உள்ளது. அதனால்தான் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்க முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் கேட்கின்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தத் தேர்தலை நடத்தும்படி அறிவித்திருக்கிறார் ராஜபக்சே. அவருடைய கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலேயே பலத்த போட்டி தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முதலமைச்சர் வேட்பாளராக யாரைத் தெரிவு செய்வது என்று பெரும் குழப்பம் நீடித்தது. சிங்கள அரசியல்வாதிகள் 13ஆவது திருத்தம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய பொழுது கூட்டமைப்பு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது.

இறுதியில் கூட்டமைப்பு, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் என்பவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது. இதற்குக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தபொழுதும் கட்சியின் தலைவர் சம்பந்தன் விக்கினேஸ்வரனையே தெரிவு செய்திருக்கிறார். விக்கினேஸ்வரன் கொழும்புத் தமிழர். அவரது பிள்ளைகள் சிங்களர்களையே திருமணம் செய்திருக்கின்றனர். கொழும்புத் தமிழர் ஒருவர் எப்படி வடக்கு மக்களுக்கு முதலமைச்சராக முடியும் என்று கேட்பவர்களும் உண்டு. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய சில மூத்த அரசியல் தலைவர்கள் மேட்டுக்குடித் தலைவர்களாகவே இருந்ததாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

இப்பொழுது 13ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன்தான் பேசிக்கொண்டிருக்கிறார். இந்துமதம், சொற்பொழிவு, சட்டம் என்றிருந்த விக்கினேஸ்வரன் அரசியல் பேசுவதை “எங்கட பிள்ளை அரசியல் பேசத் தொடங்கிற்று” என்று கிண்டல் செய்து இலங்கைத் தமிழ் பத்திரிகை ஒன்று கேலிச்சித்திரம் வெளியிட்டிருக்கிறது. எந்த அதிகாரமுமற்ற கதிரை ஒன்றிற்கான வேட்பாளர் என்ற பொழுதும் இதைத் தந்திரமாகக் கையாள்வதன் மூலம் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நகர்த்த இயலும்.கொழும்புத் தமிழரோ,இந்துவோ, கிறிஸ்தவரோ என்று அவரை ஈழத் தமிழர்கள் பார்க்கமாட்டார்கள்.

ஆனால் அவரது சில பேச்சுக்கள் அந்த நம்பிக்கையைத் தரவில்லை. அவர் நீதித்துறையில் இருந்தாலும் நல்ல அரசியல்வாதிபோலப் பேசுகிறார். இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்தமையால்தான் தமிழ் அரசியல் தலைவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ‘இந்துஸ்தான் ரைம்’ இதழுக்குச் சொல்லியிருப்பது ஏன்? ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழ்த் தலைவர்கள் சொன்னபொழுது அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழ் அரசியல் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்ட பொழுதே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். தமிழீழம் பெற்றுத்தருவோம் என்று சொல்லி தேர்தலில் வென்ற அன்றைய அரசியல் தலைவர்கள் பின்னர் வேறு கனவுகளில் மூழ்கியமையால் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளானார்கள். இப்பொழுது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பொழுது மீண்டும் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில்தான் மீண்டும் இலங்கை அரசும் ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு செய்த எல்லா நடவடிக்கைகளையும் முதலில் இருந்து தொடங்கியுள்ளது. ஆயுதப் போராட்டக் காலத்தில் அபகரிக்கப்படாத நமது மண் இப்பொழுது அபகரிக்கப்படுகிறது.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்குக் காரணம், சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல; தமிழ் மிதவாதத் தலைவர்களுமே. இவர்கள் செய்த ஜனநாயக அரசியலின் தோல்வியே ஆயுதம் ஏந்த வைத்தது.

ஈழ மக்கள் சிந்திய இரத்தம் எதற்காக? கொடுத்த உயிர்கள் எதற்காக? ராஜபக்சே இன்று ஒரு பாதையைத் திறந்து போக்குவரத்து உரிமை என்று பெயரிடுவதுபோல வடக்குத் தேர்தலையும் ஒரு உரிமையாகவே தருகிறார். நாம் போராடியது தேர்தலுக்காகவோ அல்லது எதுவுமற்ற கதிரைக்காகவோ அல்ல. விடுதலைக்காகவும் வாழும் கனவுக்காகவும். அந்த ஏக்கத்துடன், கனவுடன் செத்துப்போன லட்சம் பேர் புதைக்கப்பட்ட மண்ணில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.

தீபச்செல்வன்
உயிர்மை –
deebachelvan@gmail.com