நாம் போராடும் வழிமுறை சரியானதுதானா?

0
684

ஐந்து வருடங்களுக்கு முன்னர் திரு பரணி கிருஸ்ணரஸனியால் ஈழம் ஈ நியூசிற்காக எழுதப்பட்ட இந்த பத்தியை தற்போதைய காலத்தின் தேவை கருதி இங்கு மீழ் பிரசுரம் செய்கின்றோம்.

 

2009 மே இற்கு பிறகு “தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிந்துவிட்டது ” என்று உள்ளும் வெளியும் இருந்து கூறியவர்களே, இப்போது அந்த வாக்குமூலத்தை மீளப்பெற்றுக்கொண்டிருக்கும் காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். ஏனென்றால் போராட்டம் பல தளங்களில் பல பரிமாணங்களுடன் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

 
2009 மே வரை தாயகத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த எமது போராட்டம் இன்று புலத்திலும் தமிழகத்திலும் தனது வேர்கனை ஆழமாக பதித்து வேருன்றி கிளை பரப்பியிருக்கிறது.

 
தாயகத்தில் இராணுவ அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பும் துரிதமடைந்துகொண்டிருக்கும் சமகாலத்தில் எமது விடுதலையை நோக்கி பல இராஜதந்திரவெற்றிகளை தமிழர் தரப்பும் குவித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

 
ஆனாலும் எமது போராட்ட வழிமுறைகளில் ஒரு தேக்கநிலையையும் அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக நாம் எந்த இடத்தில் சறுக்குகிறோம் என்பதை கண்டறிவதே உடனடித் தேவையாக இருக்கிறது.

 
மேலே கூறியதுபோல் போராட்டம் தற்போது ஒரு தளத்தில் தனிப்பட்ட ஒரு தரப்பிடம் குவிந்து கிடக்கவில்லை. அது பல தளங்களிற்கு பரவி தனித்தனி அலகுகளாக குவிந்திருக்கிறது. களம், புலம், தமிழகம் என்று 3 தளங்களில் அதுவும் வெவ்வேறு விதமான போராட்டசக்திகளை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

 
எனவே இந்த 3 தளங்களிலும் பரவியிருக்கும் சக்திகளை ஒன்றிணைத்து ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்தை நாம் உடனடியாக உருவாக்க வேண்டும்.

 
எந்த போராட்ட இனத்திற்கும் இல்லாத வரப்பிரசாதமாக எமக்கு தமிழகம் இருக்கிறது. ஆனால் தமிழக போராட்டங்களை புலத்துடனும் தாயகத்துடனும் இணைக்கும் பொறிமுறை உருவாக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

 
முன்பு ஒரு ஆய்வாளர் எமது விடுதலை சார்ந்து தமிழகத்தின் பங்கு குறித்து கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:

 
“எந்த ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் போராடும் இனத்திற்கும் இல்லாத பலம் ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் ஒரு சிறிய நீர்ப்பரப்பு பிரித்து வைத்திருக்கும் கூப்பிடு தூரத்தில் ஒரு தனித்த மாநிலமாக 7 கோடி தமிழர்களை கொண்ட ஒரு நிலப்பரப்பு இருக்கும்வரை தமிழீழப் போராட்டத்தை யாரும் தோற்கடிக்க முடியாது. இந்த புவியியல் அமைவு பிராந்திய பூகோள நலன்களை என்றாவது ஒரு நாள் ஈழவிடுதலைக்கு சார்பாக திருப்பும் வல்லமை கொண்டது.

 

சனத்தொகையில் ஈழம் தமிழகம் சேர்ந்த நிலப்பரப்பை ஒப்பிடும்பொழுது சிங்களவாகள் எந்த பெறுமதியும் அற்றவர்கள் ஆவார்கள். இது பிராந்திய அரசியலில் பலம் சார்ந்து முக்கியமான கூறு. என்றாவது ஒரு நாள் தமிழகம் ஈழ விடுதலையை சாத்தியப்படுத்தும் அரசியலை எழுதும்.”

 
கன கச்சிதமானதும் தெளிவானதுமான ஒரு கருத்து இது. எனவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தமிழக போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டியது அவசியம்.
நாம் போராடுகிறோம். ஆனால் எதையும் ஒன்றிணைக்காததே நமது இலக்கு நோக்கிய பயணத்தை சிதறடிக்கிறது.

 

hero-2013-v
உதாரணத்திற்கு, “பொதுநலவாய மாநாடு சிறீலங்காவில் நடத்தக் கூடாது” என்று போராடினோம். ஆனால் எம்மையும் மீறி அது நடந்து முடிந்தவுடன் நாம் சோர்ந்து போய் அதை அப்படியே கைவிட்டுவிட்டோம். இந்த அடிப்படையே தவறானது. கொழும்பில் மாநாடு நடந்திருக்கலாம், தலைமைப்பொறுப்பும் சிறீலங்காவிற்குக் கிடைத்திருக்கலாம், ஆனால் மறுவளமாக எமது போராட்டம் சிறீலங்காவிற்கு மிகுந்த நெருக்கடியையும் அனைத்துலக அழுத்தத்தையும் கொடுத்திருப்பதை மறந்து விட்டோம்.

 
ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரம், மனித உரிமைகளை பேணல் போன்ற தீர்மானங்களை வழிமொழிந்த பொதுநலவாய அமைப்பின் தலைமைப்பொறுப்பிற்கு தற்போது சிறீலங்கா வந்திருக்கிறது. எனவே இதையே நாம் சிறீலங்காவிற்கான வலையாக மாற்ற முடியும். ஏனென்றால் தற்போது அனைத்துலக கவனம் சிறீலங்கா மீது குவிந்து கிடக்கிறது.

 
தொடரும் மனித உரிமை மீறல்களை, ஊடக அடக்குமுறைகளை தகுந்த ஆதாரங்களுடன் அனைத்துலகத்திற்கு எடுத்துக்காட்டி சிறீலங்கா பொதுநலவாய விழுமியங்களையோ, மாநாட்டு தீர்மானங்களையோ கடைப்பிடிக்கவில்லை என்று நிருபித்து அதனை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்த முடியும். இதன் வழி இன அழிப்பிற்கான நீதியை நோக்கி நாம் நகர முடியும்.

 
எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நாம் களம், புலம், தமிழகம் என்று பரவியிருக்கும் போரட்டங்களை முதலில் ஒன்றிணைக்க வேண்டும். சமகாலத்தில் 3 தளங்களிலும் சமாந்தரமாக மக்கள் போராட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.

 
நாம் ஒன்றை தெளிவாகக் கவனிக்க வேண்டும். முன்புபோல் சீருடை தரித்த சிங்கள இராணுவம் ஒரு தமிழன் மீது துப்பாக்கி குண்டுகளை உமிழமுடியாது. ஏனென்றால் முன்பு கூறியதுபோல் அனைத்துலக கவனம் சிறீலங்காவில் குவிந்து கிடக்கிறது. இதுதான் எமக்கான பலம்.

 

அனாமதேய கடத்தல்கள், மற்றும் காணாமல்போதல்களை செய்யலாமே ஒழிய வெளியாக எந்த அழித்தொழிப்பும் செய்ய முடியாது.

 
ஆயுதப்போராட்டத்தை ஈவிரக்கமின்றி அழித்ததை போல் மக்கள் – மாணவர் போராட்டங்களை அழிக்க முடியாது. முன்பு பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியால் மேற்குலக ஆதரவும் இருந்தது இந்த அழித்தொழிப்பை சாத்தியப்படுத்தியது. எனவே இவையெல்லாம் தாயக மக்களுக்கு தெளிவாக விளக்கம் செய்யப்பட வேண்டும்.

 
மக்கள் தொடர் அடக்கு முறைகளின் விளைவாக போராட தயாராகும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எனவே தாயகத்தில் மக்கள் வீதிக்கு வரும் சமகாலத்தில் புலமும் தமிழகமும் உச்ச பங்களிப்பை வழங்க வேண்டும்.

 
அதற்கு இந்த 3 தளங்களையும் இணைக்கும் ஒரு பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும்.

 
நமது அமைப்புக்களும் தலைவர்களும் உடனடியாக சிந்தித்து செயலாற்றவேண்டிய மையப்புள்ளி இதுதான்.

 
பரணி கிருஸ்ணரஜனி.