Thamiliniமே 18 இற்கு பிறகு பலியெதிர்ப்பு – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலை நிறுவ பாடுபட்ட ஒரு தனி மனித இயக்கம்தான் நிலாந்தன். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலத்தில் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியங்கள் ஆவணப்படுத்தப்பட நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிலாந்தனின் பங்கு இருக்கிறது.

 

தொடர்ந்து போராட்டத்தை காட்டிக்கொடுத்து கொண்டிருப்பதுடன் தமிழ்த்தேசிய அரசியலை நுட்பமாக நிர்மூலம் செய்துவரும் நிலாந்தன் இதன் உச்சக்கட்டமாக தமிழினியை முன்வைத்து தனது காட்டிக்கொடுப்பு அரசியலை செய்யப் புகுந்திருக்கிறார்.

 

மே 18 இற்கு பிறகான அவரது எழுத்துக்கள் அனைத்துமே இந்த வகைதான். ஆனால் இன்று தமிழினியை முன்வைத்து எழுதப்புகுந்த நிலாந்தன், தமிழினியின் வழியாக புலிகளுக்கு தொடாந்து கிடைக்கும் அங்கீகாரத்தை கண்டு பதட்டமுற்றவராக நிதானமிழந்து தன்னை முழுமையாக காட்டிககொடுத்திருக்ககிறார்.

 

செஞ்சோலைப் படுகொலையில் புலிகளை குற்றவாளிகளாக்கும் பரணகம அறிக்கைக்கு நுட்பமாக வக்காலத்து வாங்கும் தந்திரம் ஒன்றை செய்ப்புகுந்து இன்று அம்பலப்பட்டுப்போய் நிற்கிறார்.

 

தமிழ்த்தேசிய மூகமூடியுடன் தனது தனி மனித இருப்பை தக்கவைக்கவும், தனது காட்டிக்கொடுப்புக்களுக்கு அங்கீகாரம் தேடவும் ஒரு போராட்டத்தையும் அதைத் தாங்கிய போராளிகளினதும் மக்களினதும் பிணங்களை புணரவும் தயங்காதவர் என்பதை அவரது அண்மைய இரு கட்டுரைகள் பலருக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

 

தமிழினியின் பிணத்தை சாட்சியாக வைத்து பேராளிகளையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் அவரது தந்திரத்தை பார்த்து பலர் அதிர்ந்து போய் வாயளவில் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் தீபச்செல்வன் இந்த எதிர்வினைகளின் ஒட்டுமொத்த குறீயீடாக தனது எதிர்வினையை பதிவு செய்திருக்கிறார்.

 

தமிழ்ச்சூழலின் மிக முக்கியமான படைப்பாளியும் மே 18 இற்கு பிறகும் தனது சுயத்தை இழக்காமல் இனஅழிப்புக்கு எதிராக காத்திரமாக இயங்கிவரும் தீபச்செல்வன் இவரது அண்மைய கட்டுரைகளை முன்வைத்து எழுதிய எதிர்வினை கீழே உள்ளது.

 

இதை எந்த முன்முடிவுகளுமின்றி வாசித்து தெளிந்து கொள்வது மட்டுமல்ல அதைப் பகுப்பாய்வுக்குட்படுத்தி நிலாந்தன் போன்ற நுட்பமான எதிரிகளை இனங்கண்டுகொள்வதும் காலத்தின் அதிதேவையாகிறது.

 

அதுவே எமது அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைக்க ஏதுவாக இருக்கும்..

 

ஈழம்ஈநியூஸ்.
00000000000000000

 

நிலாந்தனுக்கு எதிர்வினை

 

 

நிலாந்தனின் தமிழினி அக்கா தொடர்பான இரண்டு கட்டுரைகளும் (கட்டுரைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன) முன்னாள் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடைவெளி இருப்பதுபோல காட்டுவதன் ஊடாக முன்னாள் போராளிகளின் இன்றைய நிலையை மறைப்பதற்கான தந்திரத்தை கொண்டிருக்கின்றன.

 

அவை முன்னாள் போராளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் காணாமல் போனவர்களுக்கான போராட்டத்தையும் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நியாயத்தை கோரும் போராட்டத்தையும் பலவீனப்படுத்துவதாக அமைகின்றது.

 

சரணடைந்த போராளிகளை தமிழர் சமூம் வெறுப்பாக பார்கிறது என்று நிலாந்தன் தன் கட்டுரையில் எழுதுகிறார்.

 

Theepaமுன்னாள் போராளிகளை சூழ்ந்துள்ள சிங்கள அரசின் அபாயங்களை குறித்து பேசாமல் இப்படி எழுதுவது எதற்கானது? முன்னாள் போராளிகளை இன்னமும் இலங்கை அரசு அச்சுறுத்துகிறது. அவர்களை பின்தொடர்கிறது. தெரிந்தவர்களை கண்டும் அவர்கள் பேசாமல் போகிறார்கள். அவர்களை கண்டு தெரிந்தவர்கள் பேசாமல் போகிறார்கள்.

 

இன ஒடுக்குமுறை அரசினது இராணுவ படைகள் கொண்ட நிலத்தில் எல்லாவத்றையும் வெளிப்பாடையாக பகிரலாமா? பேசலமா? முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து உதவுபவர்கள் அதனை வெளிப்படையாக செய்ய இயலுமா? அல்லது வெளிப்படையாக செய்ய இது அரசியலா?

 

 

போராளிகள் முள்ளிவாய்க்காலில் சைனைட் கடிக்கத்தான் தமிழ் சமூகம் விரும்பியது என்று எழுதுகிறார். அப்படி என்றால் சரணடைந்த போராளிகளை படுகொலை செய்தமையையும் சரணடைந்தவர்கள் காணாமல்போன சம்பவங்களையும் தமிழ் சமூகம் விரும்புகிறது என்கிறாரா?

 

சரணடைந்தவர்களுக்காகவும் காணாமல் போனவர்களுக்காகவும் நடக்கும் போராட்டத்தையும் இப்படியான கருத்துக்கள் கொச்சைப்படுத்தி அதனைப் பலவீனப்படுத்தலாம்.

 

தமிழினி அக்கா புனர்வாழ்வு என்ற சித்திரவதையை கடந்த பின்னர் முகநூலில் வந்த பின்னர் தமிழ் அரசியல் தலைமைகளை விமர்சித்து கருத்திட்டார். மகிந்தவின் இந்திய விஜயத்தின்போது விக்கியை அழைக்க அவர் மறுத்ததை விமர்சித்தும் பதிவு போட்டிருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பதவியில் வகித்த ஒருவர் அரசின் சிறையில் வைக்கப்பட்டு புனர்வு என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டபோது அவர் எதனை பேச வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பது யாவரும் அறிந்தது. தமிழினி அக்காவை எவரும் விமர்சிக்கவும் இல்லை. அவதூறு செய்யவுமில்லை.

 

அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் அவருடன் பலரும் முகப்புத்தகத்தில் நண்பர்களானார்கள். அவரும் தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவருடனும் உரையாடினார். அவர் விடுதலையாகிய பின்னர் மரணம் வரையில் அவ்வாறுதான் தொடர்பில் இருந்தார்.

 

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மலரஞ்சலி செலுத்தியது நல்ல தொடக்கம் என்று எழுதுகிறார் நிலாந்தன். அப்படி எனில் புனர்வாழ்வை நிலாந்தன் அங்கீகரிக்கிறாரா? புனர்வாழ்வு என்பது கொடுஞ்சிறை. அது போராளிகளின் சமூக அரசியல் ஈடுபாட்டை ஒடுக்குமுறைக்கு எதிரான மனப்பாட்டை அழிக்கும் நோக்கம் கொண்ட இடம். ஒரு சித்திரவதை செயன்முறைக்காய் இலங்கை அரசமைத்த திட்டத்தை புனர்வாழ்வு என்றே நிலாந்தனும் நோக்குகிறரா?

 

முன்னாள் போராளிகள் விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு நடந்து கொண்ட விதம் குறித்து எழுதுகிறார். முன்னாள் போராளிகள் கட்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நாடகம் எதற்கானது? அதன் பின்னணி என்ன?

 

எதற்காக தமிழ் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள் என்பதெல்லாம் தெரியாமல் “அதை மெய்யாகவே முன்னாள் போராளிகள் கட்சியாக நம்பி“ ஒரு ஆய்வை எழுதத்தான் வேண்டுமா? இதில் இருக்கும் உள் அரசியலை வெளிப்படையாக்கி மதிப்பிட மறுப்பது ஏன்?

 

தமிழினி அக்காவை இலங்கை அரசு தேர்தலில் இறக்கி வெற்றி பெற விரும்பிய உபாயத்தை தமிழ் மக்கள் அறிவார்கள். அதை அவர் விரும்பவில்லை. அத்துடன் அதை மக்கள் எவரும் விமர்சிக்கவில்லை. முன்னாள் புலிகளை பலவந்தப்படுத்தி அரசியலில் ஈடுபடுத்தி வெற்றிபெற நினைக்கும் இலங்கை அரசின் அரசியலும் முன்னாள் போராளிகளுக்கும் தமிழ் சமூகத்திற்கும் நெருக்கம் உண்டென்றால் நிருபிக்க வேண்டுமென நினைக்கும் நிலாந்தனின் மதிப்பீட்டும் ஒரே விதமாக தென்படுகின்றது.

 

தனது அரசியலுக்காக இலங்கை அரசு உருவாக்கிய இதுபோன்ற சிக்கல்களையும் இலங்கை அரசின் முன்னாள் போராளிகள்மீதான விரோத நடவடிக்கைகளையும் இவைகளினால் ஏற்பட்ட சூழல்களையும் தமிழ் சமூகத்திற்கும் முன்னாள் போராளிகளுக்குமான இடைவெளியாக வெறுப்பாக எப்படி பார்ப்பது?

 

அவ்வாறு பார்க்கும் மனதின் அடிப்படை என்ன? ஆனால் புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை காட்ட இவ்வாறான சூழல்களை கடந்த மகிந்த அரசு உருவாக்கியது. அதை அப்படியே நிலாந்தன் நம்புகின்றாரா?

 

தமிழ் இனத்திற்கான போராடிய முன்னாள் போராளிகள் இன்னமும் அங்கீகரிக்கப்படாதவர்களாக பயங்கரவாதிகளாக அரசாலும் படைகளாலும் பார்க்கப்படும் நிலையில் அவர்களை நெருங்கவும் பழகவும் அல்லது அவர்களை கொண்டாடுவதுபோல கட்டி அதன் ஊடாக அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் மக்கள் எவரும் விரும்பவில்லை. இவ்வாறுதான் இன்று பலரை கடந்து செல்கிறோம். அத்துடன் போராளிகளுடனான உறவு இரகசியமாகவும் மறைமுகமாகவுமே இருக்கிறது. இதனை வெளிப்படையாக்கும் ஒரு அரசியல் சூழல் ஏற்படவில்லை என்பதுதான் இன்றைய ஈழத்தின் நிலை.

 

தமிழினி அக்காகூட எவருடைய உதவிகளையும் பெற விரும்பவில்லை. அவரது குடும்பமும் அவ்வாறே.

 

புலிகளின் நிழலில் வாழ்ந்த சிலர் பின்னாளில் அரச அமைச்சர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளின் நிழலில் வாழ்ந்து நிதி மூலங்களையும் பாதுகாப்பையும் பெற்றது போல அவர் வாழ விரும்பவில்லை.

 

நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை அவர் முன்னெடுத்தார். அவரது மரணம் விட்டுச்சென்ற செய்தி இதுவே.

 

அதேவேளை இன்னமும் பல போராளிகள் அவ்வாறுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

போர் தொடர்பில் விமர்சனங்களும் வெறுப்புக்களும் அவரின் முதல் களமுனையிலேயே வெளிப்பட்டது.

 

தமிழர்கள் போரை விரும்பவில்லை. கொண்டாடவுமில்லை. அது நிர்பந்திக்கப்பட்டது. தமிழ் போராளிகள் போர் வெறி பிடித்தவர்கள் இல்லை. இதை கடந்த காலத்தில் எத்தனையோ போராளிகள் தங்கள் படைப்புக்களிலும் எழுத்துக்களிலும் வாக்குமூலங்களிலும் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழினி அக்காவின் இறுதி நிகழ்வில் அவரை சிலர் விமர்சித்தாக எங்கிருந்தோ நிலாந்தன் எழுதுகிறார்.

 

ஆனால் நிகழ்வுக்கு சென்ற என் காதுகளில் “தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி இல்லை என்றாலும் தமிழினி அக்கா ஈழச் சனங்களின் மிகப்பெரும் மரியாதையுடன் ‘ஒரு உன்னத மாவீரராக – தலைவியாக’ கிளிநொச்சியில் தமிழ் ஈழ மண்ணில் விதைக்கப்பட்டார். இது உலகத்திற்கொரு செய்தி என்று இறுதி நிகழ்வில் சொல்லிக்கொண்டு வந்தார் ஓர் தாய்.” இதுபோன்ற வசனங்களை கேட்டமையை அன்று முகநூலில் பதிவிட்டேன். நிலாந்தன் தன் பொது அரசியல் மதிப்பீட்டை தமிழினி அக்காவின் மரணத்தில் திணித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

 

தமிழினி சாவின் மூலம் தன்மீதான அவதூற்றை கடந்தார் என்று எழுதுவது எல்லாம் மிகவும் கொடூரமான மதிப்பீடு. தமிழினி அக்காவை தமிழ் சமூகம் எவ்வாறு அறிந்ததோ, எவ்வாறு அவர் கடந்த காலத்தில் செயற்பட்டாரோ அவ்வாறே அந்த மரியாதையுடன் அவர் விடைபெற்றார். அவரது இறுதி நிகழ்வில் அவரின் வாழ்வின் எல்லா கட்டங்களும் உரையாடப்பட்டது. நினைவுகூறப்பட்டது.

 

தமிழினி அக்காவின் செத்த வீட்டில் அரசியல் செய்ததாக சொல்பவர்கள் தமிழினி அக்கா சாவதற்கு முன்னர் அவருக்காகவும் அவரைப் போன்ற முன்னாள் போராளிகளுக்காகவும் பேசியிருக்கலாமே? கட்டுரை எழுதியிருக்கலாமே?

 

இராணுவ புலனாய்வாளர்கள் நிறைய அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள மக்கள் திரண்டிருந்தார்கள். இவ்வாறு பேசுவர்கள் இங்கு வந்திருக்கலாமே? அவர் உயிருடன் இருந்தபோது உதவியிருக்கலாமே இவ்வாறு செய்வதும் செத்தவீட்டு அரசியல் தானே? அல்லது செத்தவீட்டின் பின்னரானான அரசியல் அல்லவா?

 

எனவே இவ்வாறான சூழ்நிலைகளும் பிரச்சினைகளும் உள்ள நிலையில் தமிழினி அக்காவை வைத்து தமிழர் விடுதலைப் போராட்ட எதிர்ப்பை புலி எதிர்ப்பை நூதனமாக மேற்கொள்வது மிகவும் அருவருப்பானது.

 

2009இற்குப் பின்னரான நிலாந்தனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழ ஆயுதப் போராட்டம் தொடர்பிலான அவரது மதிப்பீட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. 2009 மே யுத்தம் முடிவடைந்த பின்னர் தலைவர் பிரபாகரனை போர்க்குற்றவாளி என்று ((http://www.agiilan.com/?p=291) அநாமதேயமாக எழுதினார். ஆனால் இதனை அவர் எழுதினார் என்பது யாவருக்கும் தெரியும். ஒரு இன அழிப்புப் போரை இவ்வாறுதான் நிலாந்தன் நோக்குகிறார்.

 

தலைவரை போர்க்குற்றவாளி என்றெழுதிய நிலாந்தன் 2010 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தல் தொடர்பான அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கலந்துரையாடலில் அதற்கு ஆலோசனை வழங்கினார். தலைவரை போர்க்குற்றவாளி என அன்று எழுதிய நிலாந்தன், மகிந்தவுக்கு

 

ஆதரவளிப்பதில் இருக்கும் நன்மைகளை எடுத்துரைத்தமை மிகவும் முரணுக்கும் சந்தேகத்திற்கும் உரியது.

 

இது 2009இற்குப் பின்னர் இவர் பேசும் சாம்பல் அரசியல் மற்றும் வெளிப்படை அரசியல் குறித்தும் எனக்கு அவர்மீது நம்பிக்கை இல்லை. தியாகி துரோகி அரசியல் குறித்தும் சாம்பல் அரசியல் குறித்தும் பேசிய நிலாந்தன் தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அறிவுரை வழங்கியதை இரகசியமாகவே பேணினார்.

 

அத்துடன் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்ற மொட்டை கட்டுரையை இன்னமும் உரிமை கோராமல் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பதன் இரகசியம் என்ன? இதை அவரிடம் ஒருநாள் நான்கேட்டபோது அது யுத்தம் முடிந்து முகாமில் வந்திருந்தபோது நிதானமிழந்து எழுதிய கட்டுரை என்றார்.

 

இவர் தன்னுடைய மொட்டைக் கட்டுரையில் இனப்படுகொலைக்கான முர்க்கமற்ற சிங்கள பேரினவாதப் போரில் தன் இலட்சித்தியல் உறுதியுடன் போராடிய தலைவரை நிதானமிழந்து நின்றார் என்று எழுதுவதுததான் இவரது அரசியல் மதிப்பீடா?

 

குறிப்பாக நிலாந்தன் தன் எழுத்துகளில் சிங்கள இனவாத போரையும் அதற்கு எதிரான தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் “ஆயுத மோதல்“ என்று அடையாளப்படுத்துகிறார். இது இவரது எழுத்தை மட்டுமே படிக்கும் வாசகர் ஒருவருக்கு இலங்கையின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும் அதற்கு எதிராக விடுதலையை வலியுறும் தமிழர் போராட்டமும் “வெறும் ஆயுத மோதலாக“ தென்படலாம்.

 

2009 மேயிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவோ பேரினவாத ஒடுக்குமுறை அரசியலை எதிர்ப்பதாகவோ அமையாது தொடர்ந்தும் ”விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதுபோல” தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையில் இவரது எழுத்துக்கள் அமைகின்றன.

 

விடுதலைப் போராடத்தை நூதனமாக கொச்சைப்படுத்துகிறார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் மக்களையும் நோகடிக்கும் வித்தில் தன் கற்பனைகளை எழுதுகிறார். நிலாந்தன் புத்தியால் எழுதுபவர் என்பார் கவிஞர் யேசுராசா. தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையில்தான் இந்த புத்தி விளையாட்டு அமைகிறதே தவிர அதை ஆரோக்கியப்படுத்துவதாக இல்லை.

 

-தீபச்செல்வன்

 

நிலாந்தனின் கட்டுரைகள்

 

01. தமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும் http://bit.do/buzYG

 

02. தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை http://bit.do/buzYH

 

03. பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் http://www.agiilan.com/?p=291