நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும்

0
641

vaiko“குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத்துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றிலும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.

தற்போது தமிழக மக்களையும், ஏன்? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் விதத்தில், இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் கேரளத்தைச் சேர்ந்த தியாகராஜன் வாக்குமூலம் தந்துள்ளார். மனித மனங்களை உருக்கும் உணர்ச்சிமயமான ஒளிப்படமான “உயிர்வலி”யில் தியாகராஜன் தன் மனசாட்சியைப் பாரமாக உலுக்கிக் கொண்டிருந்த உண்மையை இப்போது கூறுவதாகவும், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமாக நான் பதிவு செய்தபோது, பேட்டரி செல்கள் எதற்கு என்னை வாங்கச் சொன்னார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியதை தான் பதிவு செய்யவில்லை என்றும், பேரறிவாளனின் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரண தண்டனையில் இருந்து அவர் விடுபடுவார் என்று நினைத்ததாகவும், தற்போது அவர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பதால், தன் நெஞ்சில் உறுத்தும் முள்ளாகிய இந்த உண்மையைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொய்யின் அடிப்படையிலேயே வழக்கு சோடிக்கப்பட்டது என்று இந்த வழக்கு விசாரணையின்போது, என்னைப் பிரண்ட சாட்சியாக அரசு வழக்கறிஞர் அறிவித்த நேரத்தில் நான் ஆணித்தரமாகக் கூறினேன்.

முருகன், சாந்தன் மீதும் இட்டுக்கட்டிய பொய்களை காவல்துறையிடம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலமாக்கி, இந்த வழக்கைப் புனைந்தனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

எண்ணற்ற ஈழத் தமிழர்களின் அழிவுக்குக் காரணமான அமளிப் படையை அன்றைய ராஜீவ்காந்தி அரசு ஏவியது. தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டவும், பழிவாங்கவும் இந்தத் தடா வழக்கை காங்கிரÞ அரசு பயன்படுத்தியது. அதனால்தான் கருணை மனுக்களையும் மத்திய அரசு நிராகரித்தது.

மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை ஆணை தந்தவுடன், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது என்று காங்கிரÞ கட்சி உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததால், வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது, விசாரணைக்கான நிலுவையில் உள்ளது.

தியாகராஜனுடைய வாக்குமூலத்துக்குப் பிறகாவது மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் நீதி குழிதோண்டிப் புதைக்கப்படாமல் இருக்க, குடியரசுத் தலைவருக்கு உண்மையை தெரிவித்து, மூவரின் மரண தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும்.

22 ஆண்டுகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் வாழ்வையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் வாழ்வையும் நிர்மூலமாக்கிவிட்ட குற்றவாளிதான் மத்திய காங்கிரÞ அரசாகும். இளமை வாழ்வையெல்லாம் சிறையில் இழந்துவிட்ட இவர்களுக்கு அந்த வாழ்வை மத்திய அரசு திருப்பிக் கொடுக்க முடியுமா?

ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது என்பதுதான் அந்த உண்மையாகும். அநீதியின் கொடுங்கரங்கள் அவர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்காமல் காக்க அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் நீதி உயிரோடு இருக்கிறதா? இல்லையா? என்பதை உலகமே இந்த வழக்கில் உற்றுக் கவனிக்கிறது. எவ்விதத்திலும், இம்மூவர் மீது வீசப்பட்ட தூக்குக் கயிறு அறுக்கப்படும். அவர்கள் விடுதலை பறவைகளாக சிறையிலிருந்து வெளிவரும் நாளை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க