நெருக்கடிக்குள் இந்தியாவின் ராசதந்திரம்

0
584

tn-com8பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையில் தீவிரமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கொழும்புக்கு வரும் பயணிகள் விமானங்களை மாத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திசை திருப்பிவிடலாமா என்கிற யோசனை கூட முன்வைக்கப்பட்டதாம். 253 பில்லியன் ரூபாயை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்க முயல்வது சரியென்று நியாயப்படுத்தும் வகையில் , நகரின் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, நவம்பர் 17,18 களில் நடைபெறவுள்ள இம்மாநாட்டினால் பெரும் இராஜதந்திரச் சிக்கலில் மாட்டுப்பட்டுள்ள நாடுகள் பிரித்தானியாவும், இந்தியாவுமே. எப்படியும் இம்மாநாடு இலங்கையில் நடக்கும் என்கிற உறுதி மொழியை, கூட்டமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா வழங்கியதால், பெருமகிழ்வுடன் இருக்கிறது இலங்கை அரசாங்கம்.

இலங்கை அரசைப்பொறுத்தவரை அதற்கு இரண்டு கண்டங்களைத் தாண்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஒன்று பொதுநலவாய நாடுகளின் மாநாடு. அடுத்தது மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர்.

முதலாவது, சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்தும் சாதகமான இடமாக இருக்கிறது. இரண்டாவது, சர்வதேச அங்கீகாரத்தை சிதைக்கும் ஒரு மோசமான களமாக மாறக்கூடிய ஏதுநிலையைக் கொண்டிருக்கிறது.

இதில் சர்வதேச அங்கீகாரம் என்பது, 2009 இற்குப் பின்னர் அரசின் மீது கடுமையாக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச் சாட்டினை முறியடிக்க உதவி புரியுமென்று ஆட்சியாளர் நம்புகின்றார்கள்.
அதாவது, பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பில் அடுத்த இரண்டு வருடங்களிற்கு கிடைக்கும் தலைமைப்பொறுப்பானது, மார்ச் மாத மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரினை பலவீனப்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு சிங்களம் இருப்பது போல் தெரிகிறது.

6 மாதங்களுக்கு முன்பே, ‘மாநாட்டில் கலந்து கொள்வோம்’ என்று பிரித்தானியப் பிரதமர் வாக்குறுதியளித்தவுடன் இலங்கை அரசாங்கமானது புதுத்தென்புடன் தனது மாநாட்டு வேலைகளை ஆரம்பித்துவிட்டது.

அடிக்கடி வரும் குர்ஷித்தும், தனது வரவு நிச்சயிக்கப்பட்டதொன்று என்று ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியும், அரசை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும்.

ஆனால், 52 நாடுகள் கூடும் இம்மாநாட்டினை பகிஸ்கரிக்கப் போவதாக ஐக்கிய தேசியக்கட்சி விடுத்த அறிவித்தல் , அரசுக்கு புதிய நெருக்கடிகளை உருவாக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்த வாரம் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் முன்வைக்கப்பட்டு, அனைத்துக்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட பகிஸ்கரிப்புத் தீர்மானத்தாலும் ,இலங்கை தரப்பு சற்று ஆடிப்போயுள்ளது.

அடுத்தவருட முற்பகுதியில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தை எதிர்த்து , மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் பல மட்டங்களில் எழுந்துள்ளது. இந்தச் சந்தேகம் அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் அவர்களுக்கும் உண்டு.

இலங்கை ஆட்சியாளர்களைவிட, பெரும் இக்கட்டான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பது இந்தியாவின் வெளியுறவு அமைச்சு என்பதுதான் நிஜம்.

தமிழ்நாட்டின் அழுத்தத்தால் இந்தியபிரதமர் வரவில்லை என்கிற நியாயத்தை இலங்கையின் அரச உயர் குழாம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், இதைவைத்து தென்னிலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளான இராவண பலய, ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றவை இந்தியாவிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துவிடும்.

இத்தகைய எதிர்ப்பலைகள், சீனாவிற்கு சார்பான புதிய சிங்கள கூட்டுமன உணர்வினை உருவாக்கிவிடும் என்பதுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் டெல்லி- சென்னை மூலோபாய கற்கைநெறிக்கான நிறுவனங்களின் ஆஸ்தான ஆய்வாளர்களின் கவலை.

கேணல்.ஹரிஹரன், பேராசிரியர் சூரியநாராயணன் போன்ற அரசறிவியலாளர்கள் மத்தியிலும், நீண்டகாலமாகவே இந்தச் சந்தேகம் இருந்து வருகிறது. ஏனெனில் அவர்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய நலன் என்பதன் அடிப்படையிலே இலங்கை விவகாரத்தைப் பார்ப்பார்கள்.

மனித உரிமையினை மேம்படுத்தச் சொல்லி ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரலாம். அதற்கு ஆதரவும் அளிக்கலாம். ஆனால், அதையே ஒரு காரணியாக வைத்து, இலங்கையைப் புறக்கணித்தல் என்பது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்று இந்தியா கணிப்பிடுகிறது.

இலங்கையில் சீனாவின் முதலீடுகள், தனது எதிர்கால பிராந்திய பாதுகாப்பிற்கு சவாலாக இருக்குமென இந்திய எண்ணுவதில், நியாயம் இருப்பதாவே ஹரிஹரனின் அண்மைய கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

இங்கு இன்னொரு விதமான பார்வை பற்றியும் குறிப்பிட வேண்டும்.

அதாவது இந்தியாவின் சீனப் பூச்சாண்டியானது பூசி மெழுகப்பட்ட கற்பிதம் என்பதாக, புதிய பார்வை ஒன்றினைப் புகுத்துவோர், சீனாவும் இந்தியாவும் தமக்கிடையே பொருளாதார உறவினை மேம்படுத்தும் சங்கதிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்கிறார்கள்.

ஆனால், இதற்கு எதிர்வாதமாக தென்சீனக் கடல் விவகாரத்தைக் குறிப்பிடலாம். அதாவது, அமெரிக்கக் கடன் பத்திரங்களை ட்ரில்லியன் டொலர் கணக்கில் சீனா வாங்கினாலும், பிரித்தானிய அணு உலைகளில் முதலீடு செய்ய முன்வந்தாலும், தென் மற்றும் கிழக்கு சீனக் கடலில் மேற்குலகம் கூட்டுச் சேர்வது ஜப்பான் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடுதான்.

ஆகவே இலங்கையில் சீனாவின் பொருண்மிய வகிபாகம் கற்பிதமல்ல. எச்சிம் வங்கியிலிருந்து நடந்த பணப்பரிவர்த்தனை கற்பனையல்ல. அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு கனவுலகமல்ல.

வன்னிப்போருக்கு சீனா வழங்கிய எறிகணைகளும், போர்விமானங்களும் உண்மையென்பதை ஐ.நா.சபையின் நிபுணர் குழு அறிக்கை உரத்துச் சொல்கிறது.

ஆகவே வல்லரசுகளின் பிராந்திய நலன் பேணும் போட்டியில், ஈழத்தமிழினம் அகப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

இலங்கையுடன் இராஜதந்திர உறவினை பலப்படுத்த வேண்டும் என்று, இந்திய நடுவண் அரசின் வெளியுறவுக் கொள்கை சொல்லும். ஒடுக்கப்படும் எமது இனத்திற்கு ஆதரவாக செயற்பட வேண்டுமென தமிழக அரசு கூறும்.

இந்த முரண் நிலையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் இந்திய அரசின் பெருங்கவலை.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிந்தாலும், இந்த முரண் நிலை இன்னும் வேகமாக நகரும்.

இதயச்சந்திரன்.