pillai-9ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது.

தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளையும் அவரே மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் சிறீலங்கா சென்றிருந்த அவரை அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்தின் ஊடகவியலாளர் எமா அல்பெரிசி (Emma Alberici) மேற்கொண்ட நேர்காணல் வருமாறு:

எமா அல்பெரிசி: சிறீலங்காவிற்கான உங்கள் பயணத்தின் போது தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதாக எண்ணுகிறீர்களா?

பிள்ளை: எனது பயணத்தின் போது சிறீலங்கா அரசு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்களை நான் சந்தித்தேன். இரு தரப்பினரும் தமது உறவுகளை இழந்துள்ளனர். அவர்கள் அழுதனர், தமது உறவுகள் தொடர்பான தகவல்களை பெற்றுத்தருமாறு கேட்டனர்.

எமா: போர் நிறைவடைந்த பின்னர் கடந்த நான்கு வருடங்களில் அங்குள்ள மக்களின் வாழ்வு எவ்வாறு உள்ளது, அது தொடர்பில் அவர்கள் என்ன கூறினர்?

பிள்ளை: வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் அதிகளவான முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். வடபகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான படையினர் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர்கள் எண்ணுகின்றனர். தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டுள்ளனர். தமது காணிகளை மீட்டுத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
sl-armyஇடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள 700 மக்களை சந்தித்தேன், அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. அதில் படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அற்ற தன்மை, அச்சம் மற்றும் மக்களை படையினர் கண்காணிப்பது ஆகிய சம்பவங்கள் நடைபெறுவதை நான் நேரில் கண்டேன்.

என்னுடன் உரையாடிய கிறிஸ்த்தவ மதகுருவின் வீட்டுக்கு நான் சிறீலங்காவில் நின்றபோதே சிறீலங்கா படையினர் சென்றுள்ளனர். இது தொடர்பில் நான் சிறீலங்கா அரச அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தேன்.

எமா: சிறீலங்கா அரசு சர்வாதிகாரப் போக்கில் செல்கின்றது என நீங்கள் கூறியதற்கு காரணமான எந்த ஆதாரங்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

பிள்ளை: அங்கு பல சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தன அவை தான் பிரதம நீதியாளர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோரை நியமனம் செய்பவை. ஆனால் தற்போது அவை எல்லாம் கலைக்கப்பட்டு, எல்லா அதிகாரமும் சிறீலங்கா அதிபரின் கைகளில் உள்ளது.

நீதித்துறையும், பாதுகாப்பு பிரிவும் அவரின் அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும் அங்கு பதிவு செய்யப்படவேண்டும். அது பாதுகாப்பு பிரிவின் கீழ் அதாவது அரச தலைவரின் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனநாயக மற்றும் பொதுவுடைமை உள்ள நாடு என சிறீலங்கா தன்னை கூறிக்கொண்டாலும், இது சர்வாதிகாரப்போக்கையே காட்டுகின்றது.

எமா: சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என இந்த வாரம் நீங்கள் குற்றம் சுமத்தியிருந்தீர்கள். எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளாது விட்டால், அனைத்துலக சமூகம் அதனை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தீர்கள். அதனை ஐ.நாவுக்கான சிறீலங்கா தூதுவர் நிராகரித்திருந்தார், அதன் பின்னர் என்ன நடந்தது?

பிள்ளை: சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு என்ற தனது சொந்த குழு ஒன்றை அமைத்திருந்தது. போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, இறந்தவர்களின் நினைவு மண்டபங்களை அமைத்தல் போன்றன தொடர்பில் சிறீலங்கா அரசுக்கு அந்தக் குழு பரிந்துரைகளை மேற்கொண்டிருந்தது.
அதனை நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசு தனது சொந்தக் குழுவின் பரிந்துரைகளையே உதாசீனம் செய்துள்ளது.

எனவே தான் சில முக்கியமான நகர்வை மேற்கொள்ள நான் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர்; சிறீலங்கா அரசு அதனை நிறைவேற்றாதவிடத்து, மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான் சமர்ப்பிக்கும் அறிக்கையில் அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை முன்வைப்பேன்.

எமா: தமிழ் மக்கள் பாதுகாப்பு இல்லாது, அச்சத்துடன் வாழ்வதாக நீங்கள் கூறுகின்றீர்கள் ஆனால் அண்மையில் சிறீலங்கா சென்ற அவுஸ்திரேலியாவின் குடிவரவு விவகார அமைச்சர் அங்கு தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

பிள்ளை: உங்களின் நிகழ்ச்சிக்கு முன்னர் நான் உங்களின் அறிக்கையை கேட்டிருந்தேன் எமா, மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் மீது எவ்வாறு வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிந்துள்ளோம். அவருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். அவர்கள் மீது எவ்வளவு வன்முறைகள் பிரயோகிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் பேசினேன். நான் நிறந்த மனதுடன் சென்றேன் நான் மக்களின் பிரச்சனைகளையே கேட்டேன். அங்கு பாரிய அளவில் அச்சம் நிலவுகின்றது. மக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆவலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லோர் மீதும் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த வன்முறைகள் விசாரணை செய்யப்படவேண்டும், நிறுத்தப்படவேண்டும்.

அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வருபவர்களின் நிலை தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அவர்களின் அகதித் தஞ்சம் பரிசீலிக்கப்படவேண்டும். அரசின் அறிக்கையை அதிகாரிகள் பின்பற்றக் கூடாது என நான் அவுஸ்திரேலியாவை கேட்டுக்கொள்கிறேன்.

நாளை தொடரும்.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.