நேர்காணல் – பாகம் 2 – மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை இன்றி புனரமைப்பு முழுமையடையாது – பிள்ளை

0
687

pillaiஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது.

தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளையும் அவரே மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் சிறீலங்கா சென்றிருந்த அவரை அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்தின் ஊடகவியலாளர் எமா அல்பெரிசி மேற்கொண்ட நேர்காணலின் இரண்டாம் பாகம் வருமாறு:

எமா: முன்னைய அவுஸ்திரேலியா அரசு 1,000 இற்கு மேற்பட்ட சிறீலங்கா மக்களை திருப்பியனுப்பியுள்ளது. அகதிகளின் புகலிடத்தஞ்சக் கோரிக்கை தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களில் அங்கு நிலமை வழமைக்கு திருப்பியதாக இதனை நீங்கள் கருதுகின்றீர்களா அல்லது தமது தவறுகளை மறைப்பதற்கு சிறீலங்கா புனரமைப்பை மேற்கொள்கின்றதா?

பிள்ளை: புனரமைப்பு, மீள்கட்டுமானம், வீதிகளை அமைத்தல் போன்றவற்றை சிறீலங்கா அரசு மேற்கொண்டுவருகின்றது. இது நன்மையானது. ஐக்கிய நாடுகள் சபை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் நடைபெறும் இந்த அபிவிருத்தியை வடபகுதியில் காணமுடிகின்றது.

ஆனால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை சிறீலங்கா அரசு விசாரணை செய்யத்தவறினால் புனரமைப்பு முழுமையடையாது. பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். இவ்வாறான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் பின்னர் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசு முடிவெடுக்கலாம்.

1951 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகதிகள் தொடர்பான உடன்படிக்கையில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. எனவே அவர்கள் அதற்கமைவாகவே செயற்படவேண்டும்.

2011 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது, அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்றிருந்தேன். பெருமளவான சிறீலங்கா மக்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களை கூறி ஒரு பிரிவு மக்கள் காலவரையறையின்றி அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் இது தொடர்பில் கருத்தில் எடுத்திருந்தோம். அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களை விடுதலைசெய்யுமாறும் கோரியிருந்தது.

எமா: படகுகளில் அகதிகளாக வருபவர்கள் தம்மை தொல்லைப்படுத்துவதாக அவுஸ்;திரேலியாவின் புதிய பிரதமர் ரொனி அபோட் தெரிவித்துள்ளது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பிள்ளை: இந்த அறிக்கை தொடர்பில் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். அகதிகள் தொடர்பான ஐ.நாவின் தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை இது. உலகின் பல பாகங்களில் இருந்து வரும் மக்களுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் அளித்துவருகின்றது.
aus-ship
கடலில் ஆபத்துக்களை சந்தித்த மக்களையும் அவுஸ்திரேலியா காப்பாற்றியிருந்தது, இது ஒரு நல்ல விடயம் ஆனால் பிரதமரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. தமது நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் தான் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர்.

அகதிகளாக வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

எமா: அகதிகள் தொடர்பான தனது முன்னாள் கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும் என்ற கடப்பாடு இல்லை அல்லவா?

பிள்ளை: இதனால் தான் அகதிகள் தொடர்பான கொள்கை கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அவுஸ்திரேலிய அரசினாலும், மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அகதிகள் விவகாரத்தை கருதி அதனை கைவிட முடியாது. பல நாடுகளில் இது வேறுப்பட்டது.

குடியேறும் மக்களிடம் இருந்து தமது மக்களை அரசு பாதுகாக்க வேண்டிய பெறுப்பு உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் எல்லா நேரமும் அனைத்துல மனித உரிமைத் தரம் பேணப்படவேண்டும். ஏனெனில் அது மனிதாபிமானம். அதனை தான் நாம் பின்பற்றுகின்றோம்.

அடிப்படை உரிமைகளை அரசுகள் பின்பற்றவேண்டும். பொதுமக்களை தரம்பிரித்து பாதுகாப்பு காரணங்களை கூறி தடுத்துவைப்பதை நாம் எதிர்த்திருந்தோம்.

எமா: இறுதியாக, உலகில் வெப்ப நிலை அதிகரித்து வருகின்றது. இதில் 95 விகிதமான பங்களிப்பு மக்களின் நடவடிக்கையினால் என காலநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் அதன் உடனடித் தாக்கம் என்ன?

பிள்ளை: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற முறையில் இது தொடர்பில் கவலை அடைந்துள்ளேன். வறுமைப்பட்ட குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமே இந்த காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.

ஆனால் காலைநிலை மாற்றம் ஏற்படுவதற்கான காரணிகளில் அவர்களின் பங்களிப்பு குறைவானது. எனவே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியாவைச் சுற்றி உள்ள தீவுகளில் பிஜி மற்றும் கிரிபாறி ஆகியவற்றில் வசிக்கும் பல நூறு சமூகங்கள் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படுவார்கள்.

முற்றும்.
தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.