படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் -பழ.நெடுமாறன்அழைப்பு!

0
714

அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி பன்னாடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவா முன்றலில் முருகதாசன் திடலில் எதிர்வரும் 16ஆம் நாள் அணிதிரள்கின்றார்கள் அனைத்து புலம்பெயர் மக்களும் இதில் கலந்துகொள்ளவேண்டும் இது திருப்பு முனையினை ஏற்படுத்தபோகும் போராட்டம்..
geneva3
துயரத்தின் கடலில் மூழ்கி தவிக்ககூடிய தமிழர்களை கரையேற்றுவதற்காக உலசமுதாயம் அந்த முயற்சியில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும் என்பதற்கா இந்த போராட்டம் ஐ.நா முன்றலில் நடைபெறுகின்றது. இதில் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டு எங்கள் குரலினை ஓங்கி ஒலிக்க செய்யவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு அந்த கடமையினை செய்ய எதிர்வரும் 16 ஆம் நாள் ஜெனீவா நகருக்கு வாருங்கள் .

ஐ.நா முன்றலில் அலைஅலையாக கூடுங்கள் உரக்க குரல் எடுத்து தமிழர்களின் கோரிக்கையினை உலகிற்கு தெரிவிக்க வேண்டுகின்றேன் இந்த ஒற்றுமையின் மூலம் துயரக்கடலில் மூழ்கியிருக்கம் தமிழ்மக்களின் விளிகளில் பெருகும் நீரினை துடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரண்டு வாருங்கள் என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே தனது உயிரைத் தியாகம் செய்த செந்தில்குமாரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகம் எங்கும் இடம்பெற்று வருகின்றன.

ஈகைப்போராளி ரட்ணசிங்கம் செந்தில்குமரனிற்கு கனடியத் தமிழர்களின் வீர வணக்கம்!

புரட்சி என்பது பிறப்பில் கருவாவதில்லை. ஒரு மனிதனின் வாழ் காலத்தில் அவனை சுற்றி நிகழும் தான் சார்ந்த சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப் படும் ஒடுக்குமுறைகள் கண்டு வெகுண்டு எழுந்து வெடிப்பதே புரட்சி. தமிழீழ மண்ணில் தொடர்ந்து வரும் இன அழிப்பு அவலங்களைப் போக்க காலத்துக்குக் காலம் பலர் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து மாவீரர்களாகவும் நாட்டுப் பற்றாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் இன உணர்வாளர்களாகவும் ஈகையாளர்களாகவும் விடுதலை தீ வளர்க்க ஆகுதியாக்கி உள்ளனர்.

அந்த வரிசையில் செந்தில் குமரன் என்ற ஈகைப்போராளியும் எம் இனத்தின் இருள் களையத் தன்னை எரித்து விடுதலை நெருப்பிற்கு நெய் வார்த்துள்ளார். செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகைப்போராளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்து வரலாற்றில் தனக்கான நித்திய இடத்தை பிடித்துள்ளார்.

அவரின் வீரச்சாவு உறங்கிக் கிடக்கும் உலகின் மனசாட்சியை உலுப்பி எம் இனத்துக்கான நீதியைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இழக்கக் கூடாத இன்னுயிரை அள்ளி இனத்துக்காகக் கொடுத்துள்ளார். அவரது இந்த வீரமரணம் உலகிடம் நீதி கேட்டு தொடரும் எம் இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு உரமாக உருமாறி எம் பயணங்களை வீச்சாக்கும்.

அவருக்காக கலங்கும் எம் விழிகள் அவரின் உன்னதமான ஈகையை மதித்து அவர் எம் இனத்துக்காக விட்டுச் சென்ற பணிகளை எம் நெஞ்சில் ஏற்று பயணிக்க ஒவ்வொரு தமிழனையும் உணர்வேற்றி அழைக்க வேண்டும்! விடுதலை தீ பற்ற தீயள்ளிக் குளித்த செந்தில் குமரனின் இழப்பில் துயருறும் அவரது செல்வங்களுக்கும் மனைவிக்கும் எமது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொள்ளும் கனடியத் தமிழர் தேசிய அவை அவரது விடுதலை தாகத்துக்கு அனைத்து தமிழர்களும் தொடர்ந்தும் முன்னின்று உழைத்து அவர் கனவு கண்ட தாயக விடுதலையை வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து வீர வணக்கத்தை செலுத்திக் கொள்கின்றோம்.

மண்ணில் விழும் விடுதலை வித்துக்கள் யாவும் நாளைய விருட்சங்களாக வளர்வதற்கான விதைகளாகவே வீழ்கின்றன. புதைந்து அழிந்து போகும் மண்ணுலக வாழ்வில் மண்ணை நேசித்து மண்ணுக்காக உயிர் கொடுத்த செந்தில் குமரன் போன்றோர் வரலாற்றில் நித்திலங்களாக ஒளிர்ந்து தமிழர் உள்ளங்களில் விடுதலை தீ மூட்டியவாறே என்றும் நிலைத்து இருப்பார்கள்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!