தமிழர் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் 1978இல் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் கீழ் அரங்கேறும் தேர்தல் திருவிழா.

செய்தி: தற்போது அமுலில் உள்ள அரசியல் சாசனம் தமிழ் மக்களின் சம்மதத்தை பெறாத ஒரு அரசியல் சாசனம் அது சிறுபான்மை மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசனம் அல்ல – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

பின்னணி: ஜயா அவ்அவப்போது பேச வேண்டியதையும் பேசிவிடுகின்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் முழுமையாக புரியும் படி தான் பேச மறுக்கின்றீர்கள். 1978 அரசியல் யாப்பை மட்டுமல்ல சிறீமாவின் 1972 அரசியல் யாப்பையும் தமிழர் தரப்பு நிராகரித்தது என்பதைக் கடந்து அதை அமுல் செய்தவர்களான சிறிமாவும் ஜெயவர்தனாவும் அது குறித்த தமிழர் தரப்பின் அபிப்பிராயத்தை கேட்கவே விழையவில்லை என்பதுவே உண்மை.

இதைத் தொடர்ந்து 1983இல் அரங்கேறிய 6 ஆம் திருத்தத்ச் சட்டத்தை அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியாகிய நீங்கள் ஏற்க மறுத்தே இந்தியாவில் வந்து தங்கியிருந்ததுவும் அதன் போது நான் உங்களை பலவேளைகளில் அதுவும் கூட்டணித்தலைவர் சிவசிதம்பரத்தின் அடுக்குமனையில் சந்தித்துப் பேசியதும் பழைய கதைகள். அதேவேளை 1972 யாப்பின் போது இருந்த மகிந்தாவும் 78 யாப்பின் போது இருந்த ரணிலும் தான் இன்றைய கதாநாயகர்கள் என்பது வேறு கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஜெயவர்த்தனாவால் 78 அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியை 2015இல் மேற்க்கொள்ளப்பட்ட 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் ஓரளவு மட்டுப்படுத்தினாலும் அதன் ஒரு அங்கமாக அரங்கேறிய புதிய தேர்தல் முறையான விகிதாச பிரதிநிதித்துவம் அவ்வாறே தான் இன்றும் உண்டு. நல்லாட்சி என்ற போர்வையில் இயங்கிய ஆட்சியில் நீங்கள் முயன்ற புதிய அரசியல் யாப்பு ஒன்றில் கூட புதிய ஒரு தேர்தல் முறைமை குறித்துப் பெரிதும் இல்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற உங்கள் முயற்சியில் தமிழர்தரப்பை படிப்படியாக இல்லாதொழிக்கும் முறைமை கொண்டது தற்போதைய தேர்தல் முறை என்பதாவது இப்போதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ஜயா? 1977இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் இருந்த 160 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் மூன்று அங்கத்துவ தொகுதிகளாக நான்கு இரட்டை அங்கத்துவ தொகுதிகள் என மொத்தம் 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் முறைமை இருந்தது.

அத்தேர்தலிலேயே 144 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று நாலில் ஜந்து பெரும்பான்மையுடன் தாமே தொடர்ந்து ஆளும் வகையில் ஜக்கிய தேசியக்கட்சியின் ஜெயவர்த்தனா புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். 77 தேர்தலில் சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களையே பெற 16 ஆசனங்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வ எதிர்கட்சியானீர்கள். 168 தொகுதிகளில் யாழ் குடாவில் 10 தொகுதிகளும் வன்னி பெருநிலப்பரப்பில் 4 தொகுதிகள் என 14 தொகுதிகள் வடக்கில் இருந்தன. திருமலையில் 3 தொகுதிகளும் மட்டக்களப்பில் 3 தொகுதிகளில் 4 பேரைத் தெரிவு செய்யும் வாய்ப்பும் அம்பாறையில் 4 தொகுதிகளல் 5 பேரைத் தெரிவு செய்யும் வாய்ப்பும் இருந்தது. ஆக மொத்தத்தில் 168 பேரில் வடக்குக் கிழக்கில் இருந்து 26 பேரை தெரிவு செய்யும் வாய்ப்பு அதாவது 15.48 சதவீத பிரதிநிதித்துவம்.

ஆனால் 1978 இல் ஜெயவாத்தனா தமிழரின் அங்கீகாரம் இன்றி கொண்டுவந்த விகிதாசார பிரதிநிதித்துவம் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக்கியது. அதில் 196 பேர் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் 29 பேர் நாடுதழுவிய கட்சி சார்ந்த வாக்கின் விகிதாசார அடிப்படையில் தெரிவு என்றாகியது. 22 தேர்தல் மாவட்டங்களுக்கு என மக்கள் தொகையின் அடிப்படையில் ஆசனங்கள் 160 பிரித்துக் கொடுக்கபடும் என்றது. தவிர மேலதிக 36 ஆசனங்கள் மாகாணத்திற்கு 4 ஆக தேர்தல் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றது. அதன் அடிப்படையில் அவை பகிரப்பட்டன. இரண்டு தேர்தல் மாவட்டங்களைக் கொண்ட மாகாணங்களில் அவை இரண்டு இரண்டாக பிரித்து வழங்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணம், வன்னி என்ற இரு தேர்தல் மாவட்டங்களைக் கொண்ட வட மாகாணத்தில் மட்டும் யாழ்ப்பாணத்திற்கு ஒன்றும், வன்னிக்கு மூன்றும் என வழங்கப்பட்டது. நாளை குடிசனப்பரம்பலில் குடியேற்றங்களின் கூடாக மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் வன்னி மாவட்டத்தில், தமக்கான ஆசனங்களை அதிகரிக்கும் உள்நோக்கம் கொண்ட வகையில் அமைந்த இவ்விடயம் கூட, தமிழர்களைக் கடந்தே நடந்தேறியது. கிழக்கு மாகாணத்தின் நான்கும் திருமலை 1 மட்டக்களப்பு 1 அம்பாறை 2 எனப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அவ்வடிப்படையில் 1983 இல் நடைபெற வேண்டிய விகிதாசாரகிதாசார அடிப்படையிலான முதல் பாராளுமன்றத் தேர்தல், சர்வசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் 1989 வரை தள்ளி வைக்கப்பட்டது. 1989இல் நடைபெற்ற முதல் தேர்தலில், யாழ்ப்பாணத்திற்கு 11 பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், வன்னிக்கு 5, திருமலை 4, மட்டக்களப்பு 5, அம்பாறை 6 என 31 பேர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பின்னர் சனத்தொகை அடிப்படையிலான மாற்றம் எனக்கூறி, யாழ்ப்பாணப் பிரதிநிதித்துவம் 11 இல் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 7 ஆகியுள்ளது. அதேபோன்று வன்னி 1ஆல் அதிகரித்து 5 ஆகியது. அம்பாறை 6இல் இருந்து 7 ஆகியுள்ளது. இவ்விரு அதிகரிப்புகளும் கூட தமிழரல்லாதோரின் தெரிவிற்கு மட்டுமே வழிகோலியது. அதாவது தமிழர் பிரதிநிதித்துவம் இக்காலப்பகுதியில் மட்டும் நான்கால் இழக்கப்பட்டது.

இத்தகைய தேர்தல் முறைமை தொடர வரும் காலத்தில் தமிழர் பிரதான தேர்தல் மாவட்டங்கள் மேலும் பிரதிநிதித்துவ எண்ணிக்கைகளை இழக்கும் நிலையையே சுட்டிநிற்கின்றன என்பதுவும் உங்களுக்கு புரியும் என்று நினைகிறேன் சம்பந்தர் ஜயா! உங்கள் கருத்தில் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைக்கு தற்போதைய அரசியல் அமைப்பில் வாய்பில்லை என்றீர்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் தவறாது நாம் ஒரு தேசிய இனமென்றுவிட்டு, பின்னர் தவறாது மீண்டும் மீண்டும் சிறுபான்மை இனம் என்கிறீர்கள். ஒரு தேசிய இனம் தனக்காக சமத்துவமான உரிமைகளை அல்ல தன்னைத் தக்கவைப்பதற்கான தனித்துமான உரிமைகளை வலியுறுத்தும் உரிமை பெற்றது. ஆனால் ஒரு சிறுபான்மை இனம் சமத்துவமான உரிமைகளுக்கு யாசிக்க மட்டுமே முடியும்.

எனவே தான் கூறுகின்றோம். ஈழத்தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதை மறுதலிக்கும் சிங்கள தேசத்தின் அரசியல் யாப்புக்கள் எல்லாம் ஈழத்தமிழினத்தின் இருப்பை கேள்விகுள்ளாக்கி எம்மை அவர்கள் அடக்குமுறை யாப்புகளினூடாக அதில் கரைந்து போகின்ற இனமாக மாற்றும் வகையிலேயே இதுவரை அமைந்தன. அதற்கு தற்போதைய தேர்தல் முறைமை யாப்பும் எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல என்பதுவும் தங்களுக்கு நன்கு புரியும் என்று நம்புகிறோம்.

அவ்வாறானால் இந்தத் தேர்தல் திருவிழாவைக் கடந்து 78இல் தமிழர்களின் வகிபாகம் இன்றி அவர்களின் ஒப்புதல் இன்றி அமைந்த இந்த தேர்தல் முறைமைகளைக் கடந்து ஈழத்தமிழினத்தின் இருப்பை தக்க வைக்கும் வகையிலான உங்கள் திட்டங்கள் தான் என்ன? அது குறித்த பயணம் தான் என்ன? நிராகரித்த யாப்புக்களின் கீழ் தொடர்ந்தும் இவ்வாறான தேர்தல் திருவிழாக்களில் எவ்வளவு காலம் தான் பயணிக்கப் போகிறோம்? இது தான் உங்களின் இறுதி தேர்தல் திருவிழா என்ற வகையில் முடிந்தால் இதற்குமான பதிலையும் தவறாது வழங்கிவிடுங்களேன். இல்லையேல் மேலும் ஒருவர் இவ்வாறே முழுமையாக நாம் கரைந்து போகும்வரை இதில் அழைத்துச் சென்றுவிடுவார்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here