பாலியல் ‘குற்றம்’ சுமத்தலும் களைதலும் – மகேஷ்

0
668

கொரோனா கால முகநூல் உலகத்தில் நிகழ்ந்த பேரிடர்களில் ஒன்று, மனம்போன போக்கில் பாலியல் ஒழுக்கேடுகள் என்பது பற்றி நிகழ்ந்த பேச்சுகள் ஆகும். இது முதலில் ஒரு ரகசிய சமூக ஊடகப் பெண்கள் குழு ‘கூட்டுக் கலவி’, ‘ஒழுக்கச் சீர்கேடு’ ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்கிற குற்றச்சாட்டாக எழுந்தது. பின்னர், திராவிட – பொதுவுடைமை இயக்கங்களில் செயல்படும் சில செயல்பாட்டாளர்களின் ‘ஒழுக்கக் கேடு’ பற்றிய குற்றச்சாட்டாகவும் ‘குற்றம்’ சாட்டப்பட்டவர்களை உடனடியாக அந்த அமைப்புகளிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஆணையாகவும் மாறியது. இப்போது “விபரமாக, வெளிப்படையாக, ஆட்கள், இயக்கங்கள் எல்லாவற்றையும் பேர் சகிதம்” எழுதுவேன் என்கிற புரட்சி இயக்கங்கள் குறித்த ‘அம்பலப்படுத்தல்’ ஆகியுள்ளது.

பொதுவாக,

1. பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்திற்கு காரணமானவர்கள் ஆக்குவது,

2. பாதிக்கப்படும் பெண்களையே அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் காரணம் ஆக்குவது,

3. பெண்களிலும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பாலியத் தொழிலாளிகளையே சமூக பாலியல் சீர்கேடுகளுக்கான காரணங்களாக மாற்றுவது,

4. சமூக சீர்கேடுகளுக்கான காரணங்களை விளக்கி அதற்கு எதிராக போராடுகிறவர்களையே சமூக சீர்கேடுகளுக்கான காரணங்களாகவும், அதனை உருவாக்குபவர்களாகவும் திரிப்பது

ஆகியவை ஆளும் சமூக அமைப்பின் ஆதிக்க சிந்தனைப் போக்கு இருப்பதை நாம் கண்டு வருகிறோம். மேற்கண்ட அம்சங்கள் இப்போது குற்றச்சாடுகளை முன்வைப்போர் தரப்பு வாதங்களில் தெளிவாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

மா.லெ.மா. அமைப்புகளின் கூட்டறிக்கையில் குறிப்பிட முயல்வதைப் போல, பாலியல், பொருளாதார, சமூக ஒழுக்க சீர்கேடுகள் போன்றவை நடப்பு சமூகம் முழுதும் பரவியிருக்கிறது. அச்சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவை நீக்கமற நிறைந்துள்ளன. ஆளும் வர்க்க கட்சிகள் இத்தகைய சீர்கேடாளர்களால் நிறைந்துள்ளன. ஆளும் வர்க்க கொள்ளைகளுக்காக, அதிகார வெறிக்காக இத்தகைய ஆளும் தரப்புக் கட்சித் தலைமைகள் அனைத்து மோசடிகளிலும் ஈடுபட்டு, சமரசங்களையும் செய்து கொள்ளும் வகையில் தங்களின் கட்சிகளின் செயல்பாடுகள், முடிவுகள், தீர்மானங்கள் அனைத்தையும் வளைத்து நெளிப்பவர்களாக உள்ளன. இத்தகைய ஏமாற்றுதல், நேர்மையற்று இருத்தல் உள்ளிட்ட ஓர் வாழ்க்கைமுறையை நியாயமானது, ‘புத்திசாலித்தனம்’, ‘சாணக்கியத்தனம்’ எனப் பல தளத்தில் பலவேறு வகைகளில் முன்வைக்கின்றனர். ஆகவே அது பொதுபுத்தியில் மேலோங்கியதாக உள்ளது. ‘ஒழுக்கம்’ என்பது ‘பிழைக்கத் தெரியாத’வர்கள் கைகொள்வது என்ற சித்தரிப்பு மேலோங்கியுள்ளது.

மற்றொரு புறத்தில், இத்தகைய சீர்கேடு நிறைந்த சமூக சூழலில் உருவாகக் கூடிய/செயல்படக்கூடிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகளிலும் குறிப்பிட்ட எல்லை வரை இத்தகைய சீர்கேடு சக்திகள் ஊடுருவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இத்தகைய அமைப்புகள் எதுவும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. இந்தச் சமூக சூழலில்தான் உருவாகின. இயக்கங்கள் சமூகத்தில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராக மட்டுமல்ல, தன்னுள் உள்ள சீர்கேடுகளையும் எதிர்த்து போராடித்தான் வளர வேண்டியுள்ளது. இதுதான் சமூக எதார்த்தம்.

ஏனென்றால் ருஷ்யப் புரட்சியைச் சாதித்த போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் புரட்சியைச் சாதித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவையும்கூட இது போன்ற பிரச்சினைகளைக் கடுமையாக எதிர்கொண்டன. பெரும் திருடர்களும், உளவாளிகளும், துரோகிகளும், சீரழிவுச் சக்திகளும், மிகப் பெரிய அளவில் அமைப்பின் பெயரைக் கெடுத்தனர். அவர்களைக் காட்டி ஆளும் வர்க்கங்களும், ஆளும் வர்க்க அறிவாளிகளும், ஊடகங்களும் அன்றைக்கு புரட்சிகர இயக்கங்களை இதைப் போலவே மக்கள் மத்தியில் கேவலமான பிரச்சாரங்களை செய்து, அவ்வியக்கங்கள் பற்றிய அவநம்பிக்கைகளையும், எதிர் மனநிலையையும் மக்கள் மத்தியிலும், அணிகள் மத்தியிலும் ஏற்படுத்தி சிதைக்க முயன்றன.

நாம் எப்படி பார்க்க வேண்டுமானால், இத்தகைய சீர்கேடு சக்திகள் புரட்சிகர ஜனநாயக அமைப்புகளின் கொள்கை திட்டம் ஆகியவற்றையோ, அதன் நிலைப்பாடுகள், தீர்மானங்கள், செயல்பாடுகளையோ தீர்மானிக்கும், திசைதிருப்பும் வகையில் அவ்வியக்கங்களில் ஆதிக்கம் பெற்றுவிட்டனவா என்று நோக்க வேண்டும். அந்த இயக்கம் மக்களின் குரலுக்குச் செவி சாய்க்கவில்லையே என நோக்க வேண்டும். அப்போது அது ஆளும் வட்டார அமைப்புகளைப் போல ஆகிவிட்டன. தம் சொந்த சுயநலன் கருதி மக்கள் நலனைக் கைவிட்டு சீர்கெட்டுப் போய்விட்டால், அந்த இயக்கத்தை ‘அம்பல’ப்படுத்துவது நியாயமானது ஆகும். வெறும் ஊகங்களையும் முன் தீர்மானங்களையும் சொந்த முன்விரோதங்களையும் அற்ப சுயநலக் கணக்குகளையும் மனதில் கொண்டு ‘அம்பல’த்தில் அடவு கட்டுவது, சேற்றை வாரி சந்தனமாகப் பூசிக்கொள்வதற்கு ஒப்பு ஆகும். ஏற்கனவே, இது குற்றம் சாட்டுவோரின் ‘அம்பல’ப்படுத்தல் பதிவுகளின் பின்னூட்டத்தில் நடந்தேறியுள்ளது கவனிக்கத்தக்கது ஆகும்.

உண்மையில் ‘குற்றம்’ சாட்டுவோர், புரட்சிகர மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பவர்கள் என்றால், தாங்கள் பார்த்த பிரச்சினைகளை அவ்வியக்கங்களுக்கு பகிர்ந்து, எச்சரிக்கை செய்து, அவற்றிலிருந்து மீள துணை நிற்கவேண்டும். மாறாக அமைப்புகளிலிருந்த முன்னாள் அல்லது இன்னாள் ஒருசில தனிமனிதர் குற்றச்சாடுகளில் தொடங்கி; அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் தவறான போக்குகளை பொதுமைப்படுத்தி; அவ்வியக்கங்களே இப்படித்தான், சீரழிந்தவை, மோசமானவை என பிரச்சாரம் செய்வது; சந்தேகத்திற்கு இடமில்லாமல், எதிரிகளுக்குச் சேவை செய்யும் வேலைதான். இந்தப் போக்கு குறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here