பிள்ளையின் அறிக்கை தொடர்பில் அனைத்துலக அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்

0
717

pillaiஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையின் சிறீலங்கா பயணம் மற்றும் அவரின் இறுதியான அறிக்கை தொடர்பில் அனைத்துலக அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.

அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறீலங்கா மக்களின் அச்சத்தை போக்கி அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சிறீலங்கா அரசு முன்வரவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தனது சிறீலங்காவுக்கான பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அனைத்துலக மன்னிப்புச்சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா மிகவும் ஆபத்தான நாடு, அங்கு மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ரஸ்கொட் தெரிவித்துள்ளார்.
பிள்ளையின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபையும், பொதுநலவாய அமைப்பும் கருத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை பிள்ளை சந்தித்தது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம், ஆனால் பிள்ளையை சந்தித்தவர்கள் மீது சிறீலங்கா அரசு பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.

மண்ணெண்ணெயில் விழுந்த சாரைபாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்பட கூடாது
mano-0
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த கருத்துகளை கேட்டு, இலங்கை அரசும், அரசை சுற்றியிருக்கும் பேரினவாத அமைப்புகளும் சந்தோசப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒற்றைக்கண் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

சர்வதேச அங்கீகாரம் இல்லாத ஒரு கெரில்லா இயக்கமான புலிகளை விட, உலக ஏற்புடைய ஐநாவில் உறுப்புரிமை கொண்ட ஒரு நாடான இலங்கையின் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும்போதும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் போதும், மண்ணெண்ணெயில் விழுந்த சாரைபாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஐநா மனித உரிமை ஆணையாளர் இங்கே வந்து புதிய விபரங்களை பெற்றுகொள்ளவில்லை. இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மற்றும் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை கொடுமைகளை அத்தாட்சிபூர்வமாக ஐநா மனித உரிமை ஆணையம் அறியும். ஆணையாளரின் நேரடி விஜயம் என்பது ஐநா சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.

புலிகளை பற்றிய கடும் விமர்சனம் ஏற்கனவே ஐநா செயலாளர் நாயகத்தின் குழு சமர்பித்த அறிக்கையில் விலாவாரியாக இருக்கின்றது. எனவே புலிகள் பற்றிய விமர்சனம் புதிது அல்ல.

இலங்கை அரசாங்கம், தனது சொந்த ஆணைக்குழுவான, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை, குறிப்பாக உரிமை மீறல் விசாரணை மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவை தொடர்பில் என்னத்தான் செய்துள்ளது என்பதை நேரடியாக பார்த்து செல்லவே அவர் இங்கு வந்தார். தவிர, அமைச்சர் மேர்வின் சில்வா என்ற கோமாளியுடன் திருமண பந்தம் பற்றி ஆராய அவர் இங்கு வரவில்லை.

இங்கு வாழும் எங்களுக்கு இலங்கை அரசு நடைமுறை படுத்தியுள்ள தமது சொந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதையும், குறிப்பாக பிரதான விடயங்கள் தொடர்பில் காணக்கிடைக்கவில்லை.

நவநீதன் பிள்ளை தனது ஆய்வில் எதனை கண்டார் என்பது விரைவில் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் நமது மக்களுக்கு உரிமை மீறல்கள் தொடர்பிலும், அரசியல் அதிகார பகிர்வு தொடர்பிலும் உரிய ஏற்பாடுகள் நடைமுறை ஆகும் வரை நாம் எமது அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டங்களை கைவிட முடியாது.

இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை நாடும் எமது உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கைவிட உடன்பட மாட்டோம் என்பதயும் இலங்கை அரசாங்கம் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.

பிரித்தானியாவின் சனல்போர் ஊடகம்

சிறீலங்கா அரசு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தொவித்துள்ளார்.

சிறீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தெரிவித்திருந்தபோதும் பெருமளவான போர்க்குற்றங்கள் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இரணுவம் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் எனவும் பிள்ளை தெரிவித்துள்ளார்.

நவி பிள்ளையின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி – சிறீலங்காவின் முன்னாள் அதிகாரி

ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வாக நவி பிள்ளை வெளிப்படுத்தியக் கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் அவரது இலங்கை விஜயம் சர்வதேச மிகப்பயனுள்ளது என்றும் ஜெனிவாவில் ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியாக பணியாற்றி தயான் ஜயதிலக்க பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

நவி பிள்ளையின் கருத்துக்கள், இலங்கை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள சர்வதேச அமைப்புகளும் அரசுகளும் தமது பார்வையை கூர்மைப்படுத்தவும் நிலைப்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியென்றும் நவி பிள்ளை கொழும்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை தயான் ஜயதிலக்க ஒப்பிட்டுப் பேசினார்.

ஒருவாரகாலம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் நேரடியாக சென்றுபார்த்து நவி பிள்ளை வெளியிட்டக் கருத்துக்களால், இலங்கை சர்வதேசத்தின் உன்னிப்பான கண்காணிப்புக்குள் வந்திருப்பதாகவும் தமிழோசையிடம் தயான் சுட்டிக்காட்டினார்.

ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை, வரும் செப்டெம்பர் மாதத்தில் வாய்மொழி மூல அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என்றும் பின்னர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.

சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கன ஊடக அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையின் கருத்துக்களின் காத்திரத்தை உள்வாங்குவதன் ஊடாக எதிர்வரும் நவம்பர் மாதம் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கான தயாரிப்பு பணிகளை பொதுநலவாய அமைப்பு நிறுத்துமா என்ற கேள்வியை சிறீலங்கா மற்றும் அனைத்துலக மனித உரிமை ஆவர்கள் எழுப்பியுள்ளதாக சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கன அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோர முகத்தை அம்பலமாக்கியுள்ளார் நவி பிள்ளை – ராமதாஸ்
ramadoss-smiling-300
இலங்கையின் கோர முகத்தை அம்பலமாக்கியுள்ளார் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை. இதன் மூலம், நிலைமை நன்றாக உள்ளதாக கூறிய மத்திய வெளியுறவுத்துறையின் பொய்யும் அம்பலமாகியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித் து கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார்.

அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.இலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது; சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்; இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.

மேலும், இலங்கைப் போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டது, ராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.இலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் ராஜபக்சே அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.

எனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும். மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்சே அரசை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெற விருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.