புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் அம்பாறைத் தமிழர்களின் அபிவிருத்தி மந்தகதியில்!- த.கலையரசன்

0
650

idp-98பல்லாண்டு காலமாக இன்னல்களை அனுபவித்துவரும் தமிழ் இனம் இன்னமும் சொந்த இடங்களில் தங்களது வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட எந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையிலே இன்றும் உள்நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழ்ந்து வருவது மிகவும் மனவேதனை தரும் விடயமாகவே உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

மலர்ந்திருக்கும் இந்த ஆண்டில் எமது தமிழர்களின் எதிர்கால நிலை பற்றி தமது கட்சி ஆதரவாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் இவர் கருத்துக் கூறுகையில்,

மலர்ந்திருக்கும் தைப்பொங்கல் உழவர் திருநாளானது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாழ்வில் நிம்மதியான பெருமூச்சு விடும் ஆண்டாகவும் நிரந்தர அரசியல் சூழலை உருவாக்கக்கூடிய ஆண்டாகவும் அமைய வேண்டும் இதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிலைமையைப் பார்க்கும் போது சிறுபான்மைச் சமூகமான தமிழர்களை கூறுபோட்டு தமிழ்த் தேசியத் தினை அழிப்பதோடு, தமிழ்த் தலைமைகளையும் இல்லாமல் செய்வதற்காக, கடந்த காலங்களில் மாகாணசபைகளில் அரசியல் செய்தவர்களும், தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொண்டு, தமிழர் மகாசங்கத்தில் இருப்பவர்களும் தமிழ்த் தேசியத்தை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

இதனை அண்மைக்காலமாக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக காணமுடிகின்றது. இதில் ஒரு பகுதிதான் த.தே.கூட்டமைப்பினை சிதைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பதோடும், அதன் பின்புலத்தில் நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட தோற்கடிப்பிற்காக எடுக்கப்பட்ட முடிவுகளும்கூட என்றே கூறமுடியும்.

இவ்வாறு தங்களது சுய இலாபத்திற்காக செயற்படுபவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தோடு, இணைந்து செயற்படும்போது தமிழ் மக்களுக்கு செய்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் கூறமுடியும். இதுதான் இவர்களினது அரசியல் நிலைப்பாடு. இவர்கள் இன்று ஏதோ ஒன்றை சாதிக்க முனைபவர்கள் போன்று செயற்படுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

இந்த மாவட்டத்தை பொறுத்த வரையில் இங்குள்ள பெரும்பான்மை சமூகமோ, சிறுபான்மைச் சமூகமோ தமிழ் மக்களை அரவணைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் உள்ளூர் அரசியல் வாதிகள் தொடக்கம் அமைச்சர்கள் வரைக்கும் நல்ல சிந்தனைகளோடு, அபிவிருத்தியினை மேற்கொள்கின்றனரா? என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்.

2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பிற்பாடும், விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடும் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு எந்தவிதமான அபிவிருத்தி வேலைப்பாடுகளும் தமிழர் பிரதேசங்களில் நடந்தேறவில்லை அதற்கு மாறாக தமிழர்களை புறந்தள்ளியதாகவே அனைத்து அபிவிருத்திகளும் அம்பாறை மாவட்டத்திலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

நன்றி: உதயன்