1995ஆம் ஆண்டு, புலிகளின் கையில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தை கைப்பற்றும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக, ராணுவ ஆபரேஷன் ஒன்றுக்கு இலங்கை ராணுவம் திட்டமிட்டது. ‘முன்னோக்கிப் பாய்தல்’ (Operation Leap forward) என அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரத்து வைத்திருந்த இலங்கை ராணுவத்தின் இதயம் போன்ற பகுதி பலாலி விமானப்படைத்தளம். 30 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்த முக்கூட்டுப்படைத்தளம் இது. வடபகுதியின் மிக முதன்மையான கட்டளைத் தலைமையகம் இது.

இங்கிருந்து மேஜர் ஜெனரல் ரோகன் தலுவத்தை தலைமையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படையினரைக் கொண்ட 4 பிரிகேடுகளை இலங்கை அரசு களமிறக்கியது. ஈழப்போர் வரலாற்றில் பிரிகேட் அளவிலான படைகளை இலங்கை ராணுவம் களத்தில் இறக்கி விட்டது அதுவே முதல்முறை.

டாங்குகள், கவச வாகனங்கள், நீண்ட தொலைவு சுடும் ஆர்டிலரி பீரங்கிகளின் உதவியுடன் மும்முனை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது.

முதல்கட்டமாக பலாலியைச் சுற்றியிருந்த புலிகளின் தடுப்பரண்களை தட்டிப்பார்த்து அவற்றின் பலத்தை சோதித்துக் கொண்ட ராணுவத்தினர், அடுத்தகட்டமாக பலாலியில் இருந்து வெளியேறி யாழ். மாவட்டத்தைச் சுற்றிவளைக்கப் புறப்பட்டனர்.

ராணுவத்தில் ஒருபிரிவினர் பலாலியில் இருந்து புறப்பட்டு அச்சுவேலி, சங்கானை, சண்டிலிப்பாய், அளவெட்டி வழியாக வர, மற்றொரு பிரிவு மாதகல்லில் இருந்து புறப்பட்டு அராலி வழியாக வட்டக்கோட்டை, துணாவி வரை வருவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் இரு அணிகளும் இணைந்து, அராலி பகுதியில் இருந்து கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளி வழியாகச் சென்று யாழ் நகரத்தைக் கைப்பற்றுவது எனத் திட்டமிடப்பட்டது. இதுதான், ‘முன்னோக்கிப் பாய்தல்‘ அல்லது ‘முன்னேறிப் பாய்ச்சல்’ நடவடிக்கையின் நோக்கம்.

‘அவசரக் கோலம் அள்ளித்தெளி’ என்பதுபோல, 1995 ஜூலை 9ஆம்தேதி ஞாயிறு அன்று முன்னோக்கிப் பாய்தல் தொடங்கியது. பலாலி முகாமில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் வழியாக ராணுவம் வெளியேறி தாக்குதலைத் தொடங்கியது.

சீறிவரும் ஆர்டிலரி, மார்ட்டர் பீரங்கி குண்டுகளால் சுற்றுப்புறம் எங்கும் கரும்புகை சூழ்ந்து, வானம் இருளத் தொடங்கியது. உருகிக் கரையும் உலோக நெடி, வேதியியல் துர்வாடை காற்றில் கலந்து எங்கும் பரவியது.

ஆரம்பத்தில் ராணுவம் வெற்றிநடை போட்டது. பலாலிக்கு மேற்கே 7 கிலோ மீட்டர் முன்னேறிய ராணுவத்தினர், காரைநகர் கடற்படைத் தளத்தை யாழ் தீபகற்பத்துடன் இணைக்கும் பொன்னாலை தாம்போதியை (தரைப்பாலத்தை) 7 ஆண்டு கால இடைவேளைக்குப் பின் கைப்பற்றினர். பலாலியில் இருந்து தெற்கு நோக்கி படையெடுத்த ராணுவத்தினர் சங்கானை வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னேறினர்.

புலிகள் பதில் தாக்குதல் நடத்தாமல் இல்லை. சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையம், மூளாய் பகுதிகளில் கடும் சண்டை மூண்டது. முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கையின் போது ராணுவம் கண்மூடித்தனமாக ஒரு நிமிடத்துக்கு ஓர் எறிகணை என்ற அடிப்படையில் வீசியது.

முன்னோக்கிப் பாய்தல் ராணுவ நடவடிக்கையின்போதுதான் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த நவாலி புனித இராயப்பர் (பீட்டர், பேதுரு) தேவாலயத்தின் மீது ஜூலை 9ஆம்தேதி மாலை 4.45 மணியளவில், இலங்கை விமானப்படையின் ஆர்ஜென்டினா நாட்டு குண்டுவீச்சு விமானமான புகாரா 6 குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த படுகொலையில் 120 பேர் பலியானார்கள். அவர்களில் 20 பேர் குழந்தைகள். அதிலும் 13 பேர் கைக்குழந்தைகள். அன்னையரின் கைகளில் இருந்தபடி அவை மரித்திருந்தன. 65 குழந்தைகள் உள்பட 470 பேர் ஊனமடைந்தனர்.

ராணுவ நடவடிக்கை தொடங்கிய ஐந்தாவது நாளில், ராணுவம் சுழிபுரம், மாதகல், பண்டத்தரிப்பு, பொன்னாலை, அளவெட்டி, மூளாய், வட்டுக்கோட்டை, சங்கானை, அராலி, துணாவி, சண்டிலிப்பாய் உள்பட 78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஒரே மூச்சில் கைப்பற்றி இருந்தது. அது முழு ஆப்பிள் ஒன்றை ஒரேயடியாக வாயில் போட்டு விழுங்க முயற்சிக்கும் செயல்.

முழு ஆப்பிளை விழுங்க முயன்றதால் அது தொண்டையில் சிக்கிக் கொண்டது போல போர் தொடங்கிய ஆறாம் நாள், அதாவது 14ஆம்தேதி வெள்ளிக்கிழமை, ராணுவ முன்னேற்றத்தில் சற்று தளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. புலிகள் காத்திருந்தது இதற்காகத்தான்.

ராணுவத்துக்கான உணவு, ஆயுதம், மருந்து வரும் வழிப்பாதைகள் பலாலியில் இருந்து நீண்டு கிடந்த நிலையில், ராணுவத்தினர் சண்டிலிப்பாய், மானிப்பாய் வீதியில் உள்ள கட்டுடை வரை முன்னேறி, சண்டிலிப்பாய், அளவெட்டி பகுதிகளில் தற்காலிக முகாம்களை அமைத்திருந்தனர்.

இந்தநிலையில் ராணுவத்துக்கு எதிராக ‘புலிப்பாய்ச்சல்’ என்ற அதிரடி நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர்.

1993 ஆம் ஆண்டு நடந்த ‘யாழ் தேவி’ சண்டையில் காயமடைந்திருந்த புலிகளின் முதன்மை தளபதிகளில் ஒருவரான பால்ராஜ், உடல்நலம் தேறி இந்த சண்டையில் கலந்து கொண்டார். அவருடன் தளபதிகள் சொர்ணம், பானு, கடாஃபி போன்றவர்களும் புலிப்பாய்ச்சலில் பங்கேற்றனர்.

சண்டிலிப்பாய், அளவெட்டியில் இருந்த தற்காலிக ராணுவ முகாம்கள் புலிகள் வசமாயின. அங்கிருந்த ஆயுத தளவாடங்கள் அனைத்தையும் புலிகள் வாரினர். பால்ராஜ் தலைமையிலான புலிகளின் படையணியினர் சண்டிலிப்பாயில் இருந்து மூளாய் வரை முன்னேறிச் சென்றனர். மற்றொரு பக்கமாக சொர்ணம், பானு போன்றவர்களின் படையணிகள் முன்னேறின.

இந்த அதிரடி புலிப்பாய்ச்சலில் 4 அலுவலர்கள் உள்பட 70 முதல் நூறு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மிக நெருக்கமாக, குறுகிய கைக்கெட்டும் தொலைவில் நடந்த இந்த சண்டையில், 17 கனரக கவச வாகனங்களை புலிகள் கைப்பற்றினர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இந்த புலிப்பாய்ச்சல் நடைபெற்றது.

ஊர்காவற்துறையில் இருந்து அராலி வழியாக உள்நுழைந்த இராணுவத்தினர் மீதும் புலிப்பாய்ச்சல் நடத்தப்பட்டது.

முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கையில், சிங்கள ராணுவ இயந்திரம் அதன் ஆகக்கூடிய தொலைவை அடைந்து, எரிபொருள் தீர்ந்து நிலைகுலைந்து நின்ற நேரம், மிகத் திட்டமிட்டு குறித்த நாளில், குறித்த இடத்தில் ராணுவத்தின் மீது புலிப்பாய்ச்சல் நடத்தப்பட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் ராணுவ மேதமை இதில் வெளிப்பட்டது. வெளிச்சம் மிகுந்த முழுநிலா காலத்தில் புலிப்பாய்ச்சல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான கடாஃபி எனப்படும் ஆதவன் விமான எதிர்ப்பு அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். அதேநாளில், சுன்னாகத்தில் இருந்து பறந்த வந்த புலிகளின் ஏவுகணை ஒன்று, சிங்கள விமானப்படையின் புகாரா குண்டுவீச்சு விமானத்தை தகர்த்து எறிந்தது.

புகாரா விமானத்தில் இருந்த விமானியின் பெயர் பிளைட் லெப்டினன்ட் தில்சன் பெரேரா. 200 கிலோ குண்டுகளை ஏந்திச் செல்லக்கூடிய அந்த ஆர்ஜென்டினா நாட்டுத் தயாரிப்பு இரு இருக்கை டர்போ புரோப் விமானம், சண்டிலிப்பாய்க்கு வடமேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் போய் தரையில் மோதி விழுந்தது. விமானப்படையின் புகாரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கைக்கு முற்றாக முடிவுரை எழுதியது.

அதன்பின் வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் எவையும் வலிகாமம் பகுதியில் பறக்கத் துணியவில்லை.

இதற்கிடையே 500 பேர் கொண்ட இரு குழுக்களாக புலிகள் நடத்திய புலிப்பாய்ச்சல் பதிலடியில் ராணுவம் நிலைகுலைந்து வேகவேகமாக பின்வாங்கத் தொடங்கியது. அராலி, வட்டுக்கோட்டை, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி உள்பட பல்வேறு பகுதிகளை புலிகள் வேகவேகமாக மீட்டனர்.

ராணுவம் கைப்பற்றிய 78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வெறும் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மட்டும் பலாலி அருகே தன் வசம் வைத்துக் கொண்டு 15ஆம்தேதி ராணுவம் அதன் நிலைக்குத் திரும்பியது. முகாமுக்குள் முடங்கியது.

புலிப்பாய்ச்சலின் இறுதிநிகழ்ச்சியாக, காங்கேசன்துறை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய கடற்புலிகள், ராடார் பொருந்திய எடிதாரா என்ற இலங்கைக் கடற்படையின் கட்டளைக் கப்பலை மூழ்கடித்து புலிப்பாய்ச்சலை நிறைவு செய்தனர்.

மோகனரூபன்.

பட உதவி : தினத்தந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here