பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணையும் கிரிமியா. சுதந்திர தமிழீழ நாட்டுக்கும் தன்னாட்சி பொருந்திய தமிழ் நாட்டுக்கும் இது வழிகாட்டுமா ?

0
597

crimea-voteஉக்ரைன் நாட்டுடன் இருந்துவந்த கிரிமியா ரஷியாவுடன் சேருவதா அல்லது இன்னும் கூடுதல் தன்னாட்சியுடன் உக்ரைனுடன் தொடர்வதா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை உக்ரைனின் புதிய அரசும், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஏற்கவில்லை. பொதுவாக்கெடுப்பு செல்லாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை ரசியா, தனது மறுப்புரிமை ஓட்டால் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி கிரிமியாவில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பொது வாக்கெடுப்பில் கிரிமியாவில் வாழும் 60 விழுக்காடு ருசிய மொழிப் பேசும் மக்களும் பிற இனத்தவரும் வாக்களித்தனர். வாக்களித்த மக்களில் 95 விழுக்காடு மக்கள் ருசியாவுடன் தாங்கள் இணைய வேண்டும் என வாக்களித்துள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை ரஷ்யா வரவேற்றாலும் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் , ஐ.நாவும் இதை அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா போன்ற வல்லாதிக்க நாடு பொது வாக்கெடுப்பை ஏற்றாலும் , உலக நாடுகள் இதை ஏற்காத காரணத்தால் கிரிமியா நாட்டின் இனச் சிக்கல் முழுவதும் தீரவில்லை என்றே தெரிகிறது .

இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களும் தாங்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டுமா அல்லது தமிழீழ தனி நாடாக உருவாக வேண்டுமா என்ற பொது வாக்கெடுப்பு கோரிக்கையை பல காலமாக வைத்து வருகின்றனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்கனவே தாங்கள் தமிழீழ நாட்டை தான் விரும்புவதாக வாக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். எனினும் ஈழத்தில் உள்ள உள்நாட்டு தமிழர்களிடம் இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை . இதை சாத்தியப்படுத்தும் வலிமை இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கு உண்டு . எனினும் இந்தியா தமிழீழ விடுதலையை ஆதரிக்காத காரணத்தால் பொது வாக்கெடுப்புக்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகிறது இந்திய அரசு . அமெரிக்கா, சீனா, ருசியாவும் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஏற்க இதுவரை மறுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தை போலவே இப்போது தமிழ்நாடும் பல சவால்களை சந்தித்து வருகிறது. தமிழ் நாடும் இந்திய அரசால் பல இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் உண்மையில் தமிழக மக்களிடமும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி மாநில தன்னாட்சியை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் தமிழக மக்கள். தமிழக வாழ்வாதாரம் , மொழி , பண்பாடு என அனைத்தும் இந்திய அரசால் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழக மீனவர்கள் , விவசாயிகள் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ள நிலையில் தமிழகத்திற்கு தன்னாட்சி பொருந்திய மாநில சுயாட்சி தேவைபடுகிறது . ஆகவே ஈழத்திற்கு தனி நாடும், தமிழகத்திற்கு தன்னாட்சி பொருந்திய அரசும் காலத்தின் கட்டாயமாக உள்ளது .

தேசிய இனங்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட இப்படியான பொது வாக்கெடுப்பை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் உள்ளன . உலக நாடுகளில் அடிமை இனமாக சிக்கித் தவிக்கும் பல்வேறு இனங்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தி உரிமைகளை பெற்றுத் தர ஐ.நா அவை முன்வரவேண்டும். இதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் . இந்தியாவும் நீதியின் பக்கம் நின்று தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உதவவேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒற்றை விருப்பமாக உள்ளது.

இராச்குமார் பழனிசாமி.