‘போராடினால் மட்டுமே வாழ்வு’

0
716

ஜெனிவா திருவிழா தமிழர்களுக்கு பல கசப்பான அனுபவங்களை மட்டுமல்ல இனி தமிழர்கள் தோந்தெடுக்க வேண்டிய பாதையையும் கோடுகாட்டியுள்ளது.

2009 இற்கு பிறகு ஒரு சடங்கு போல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த முறைதான் பல அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த செய்திகளை தமிழினத்திற்கு அது தெளிவாக வழங்கியிருக்கிறது.

01. இந்தியா என்றுமே தமிழின விடுதலைக்கு முட்டுக்கட்டைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்திருக்கிறது. இது ஒரு பயங்கரமான செய்தி.

02. தமிழ் நாட்டு மக்களுக்கோ, மாணவர்களுக்கோ, தமிழக அரசுக்கோ அதன் சட்டமன்ற தீர்மானங்களுக்கோ எந்த பெறுமதியையும் வழங்க இந்திய அரசு தயாராக இல்லை என்ற செய்தி அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது.

ltte-figeters
03. தலைவர் பிரபாகரனும் புலிகள் அமைப்பும்தான் தமக்கு பிரச்சினை என்று கூறி வந்த இந்தியா, ‘அப்புறாணி’ சம்பந்தருக்காக கூட இறங்கி வந்து தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு தர தயாரில்லை என்று அடித்து நிருபித்திருக்கிறது.

04. எவ்வளவு இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி வந்து, கிட்டத்தட்ட இந்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி ‘வால்’ பிடித்த போதும் கூட்டமைப்பின் எந்த வேண்டுகோளையும் ஏற்காது சிங்களத்திற்கு சார்பாக இந்தியா இயங்கியதிலிருந்து அடிபணிவு ஒப்படைவு சரணாகதி அரசியல் என்றைக்கும் உதவாது எதிர்ப்பு அரசியலே கை கொடுக்கும் என்ற உண்மை உணர்த்தப்பட்டுள்ளது.

05. தமிழீழ மக்களுக்கு விடிவு தேவையோ இல்லையோ ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு தேவை என்ற உண்மையை இந்திய அரசு உணர்த்தியிருக்கிறது.

06. பிராந்திய வல்லரசான இந்திய அரசை ஏதோ ஒரு விதத்தில் அடிய பணிய வைத்தால்தான் தமிழீழ மக்களுக்கு விடிவு பிறக்கும் என்ற உண்மை மிக ஆழமாகவே உணரப்பட்டுள்ளது.

07. அமெரிக்கா உட்பட மேற்குலத்தை மற்றும் இந்தியாவை தமிழர்கள் தமக்கு சார்பாக திருப்புவது ஒருபக்கம் இருக்கட்டும், அதற்கு முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நாம் திருப்ப வேண்டும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

08. மக்களால் தோந்தெடுக்ப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் புலத்தில் ஆரம்பம் தொட்டே இயங்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் கருத்துக்களையும் தவிர வேறு யாருடைய கருத்துக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்குலகம் கணக்கெடுக்கவில்லை என்ற உண்மையும் உணரப்பட்டுள்ளது.

09. தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க ஒரு தீர்வு ஒன்றை எட்டவுள்ளதாக கூட்டமைப்பு மட்டுமல்ல புலத்தில் இருக்கும் சில அமைப்புக்களும் தாம் அதற்காக லொபி செய்வதாக சொன்னார்கள். இனப்படுகொலையை விடுவோம். ஆனால் ஒரு மனித உரிமை மீறலை விசாரிக்கும் ஐநாவின் பொறிமுறைக்கே ஆதரவளிக்காமல் சிங்களத்தை காப்பாற்ற முற்பட்டு வாக்களிக்காமல் ஒதுங்கிய தென்னாபிரிக்கா அதற்கான தகுதியையும் இழந்து தன்னையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. கூடவே கூட்டமைப்பினதும் புலம் பெயர் அமைப்புக்கள் சிலவற்றினதும் அம்பலம் சந்தி சிரிக்கிறது.

10. நடந்த, நடக்கும் இனஅழிப்பை போர்க்குற்றங்கள் என்று சுருக்கியிருந்த நிலை மாறி அதையும் மனித உரிமை மீறல்களாகச் சுருக்கி ஒரு பெறுமதியற்ற ஒரு பொறிமுறையை உருவாக்கி தமிழின அழிப்பையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் உலகம் குழி தோண்டி புதைத்து விட்டதும் உணரப்பட்டுள்ளது.

11. ஆட்சி மாற்ற கனவோடு காய்நகர்த்தல்களை செய்யும் அமெரிக்காவின் போக்கு தெளிவாகவே உணரப்பட்டுள்ளது.

12. இறுதியாக தமிழர்களை எல்லோரும் நடுத்தெருவில் விடும் நோக்கில் செயற்படுவது ஆழமாகவே உணரப்பட்ட களம் இது.

‘போராடினால் மட்டுமே வாழ்வு’ என்ற தமிழீழதேசியத்தலைவரின் தீர்க்கதரிசனம் மிகுந்த கூற்றை ‘ஜெனிவா’ தமிழர்களுக்கு போதித்திருப்பதே இதன் ஒட்டுமொத்த சாரம் எனலாம்.

ஈழம்ஈநியூஸ்.