போர் நிறுத்தம் என்ற மேற்குலகத்தின் அணுகுமுறை எவ்வாறு தமிழர் படையை பலவீனப்படுத்தியது என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பத்தியை முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இங்கு மீண்டும் பதிவு செய்கின்றோம்.

 

சிறிலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது பலவழிகளிலும்; விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பலர் அன்று சுட்டிக் காட்டியிருந்தனர்.

 

அவர்களின் கருத்துக்கள் அன்று சர்வதேசம், போர்நிறுத்தம், சமாதானம் என்ற கோசங்களுக்குள் மூழ்கிப்போயிற்று.ஆனால் இன்றைய கள நிலையதார்த்தம் அவர்களின் கருத்துக்களை சரியானதென மெய்பித்து நிற்கிறது.

 

சர்வதேச வலைப்பின்னல், பிளவுபடுத்தல், மாற்றுக் கருததுகள் என்ற மாயை, ஒட்டுப்படைகள், படுகொலைகள் என போர்நிறுத்தமும் “சமாதானமுன்னெடுப்புகளும்” தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க தீவிரமாய் முயன்று கொண்டிருக்க, இதற்கும் அப்பால் புலிகளின் படைத்துறைப்பலத்தை பலவீனப்படுத்துவதற்கான ஒரு நேரடியாக வழியாகவும்; இப் போர்நிறுத்தம் மிக நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 

சமரிடும் இரு தரப்புகளுக்கிடையில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனையும் போது அவற்றின் படைத்துறை வலுநிலை பாதிக்கப்படாவகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு விடையமாகும். எனினும் நடைமுறையில் இச்சமநிலையை மாற்றியமைத்து ஓர் தரப்பை பலவீனமடையச் செய்து தாம் விரும்பிய தீர்வை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஒரு இரண்டாம் தர வேலையையும் சம்மந்தப்பட்ட தரப்புகள் செயற்படுத்தி உள்ளன. செயற்படுத்த முனைகின்றன.

 

இதன் அடிப்படையில் வைத்தே நாம் இங்கு ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தத்தையும் தற்போது நோக்கவேண்டியுள்ளது.

 

இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் விடுதலைப்புலிகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பாரில்; ஒரு தரப்பு என்ற நிலையில் வைத்து நோக்குகின்றது. அத்துடன் படைத்துறை ரீதியிலும் அது ஒரு தரப்பின் ஆயுதப்படையாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

“ The parties have agreed to implement a ceasefire between their armed force…..”

 

ஆயுதப்படைக் கட்டமைப்பொன்று தொடர்ச்சியான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பது படைத்துறை அரிச்சுவடி. சமர்காலத்திலும் சரி, சமாதான காலத்திலும் சரி எந்தவொரு ஆயுதப்படையும தமது படைப் பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பதில் பின்னிப்பதில்லை. அத்துடன்; அது ஒரு தவிர்க்கமுடியாத படைத்துறை நியதியும் கூட.

 

இவ்வகையிலேயே விடுதலைப்புலிகளின் படைத்துறை அமைப்பையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. அவர்களின் படைத்துறை, ஆற்றல்மிக்க பரந்துபட்ட படைப்பிரிவுகளைக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொண்ட தரைப்படை, கடற்படை, வான்படை என்பவற்றை உள்ளடக்கிது. இப் படைபபிரிவுகள்;, பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது இயல்பானது. பயிற்சி நடவடிக்கைகளின் போது உயிருள்ள வெடி பொருட்கள் (டுiஎந யுஅஅரயெவழைn)இமற்றும் உபகரணங்கள் என்பவற்றைப் பாவிப்பதும் படைத்துறையில் ஒரு வேண்டப்பட்ட நடைமுறையாகும்.

 

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு உண்மைச் சமர்க்களத்துக்கு மிகக் கிட்டியதாக, மிகவும் காத்திரமான பயிற்சிகளை வழங்குவது அவர்களின் தனிச்சிறப்பியல்பாகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் பயிற்சிக்கான போர்க்கலப் பாவனையானது கணிசமானதாகவே உள்ளது.

 

இவ்வாறு பயிற்சி நடவடிக்கைகளுக்கு செலவாகும் வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்வதில் விடுதலைப்புலிகள் இப்போர் நிறுத்த காலத்தில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அரசதரப்பு கருதுகிறது அத்துடன் வருடக்கணக்கில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்ற சிலவகை வெடிபொருட்கள் காலாவதியாகிப் போகவும் வாய்ப்புண்டு எனவும் நம்புகிறது.

 

இவ்வடிப்படையில் கோட்பாட்டு ரீதியில் நோக்கும்போது விடுதலைப்புலிகளின் வெடிபொருள் மற்றும் உபகரணங்களின் கையிருப்பு வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டுச் செல்கின்ற இவ் யுத்த நிறுத்தத்தின் ஊடாக குறைவடையும் ஒரு நிலை ஏற்படவாய்ப்புண்டு என்பதும் சில படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாகும்.

 

மறுபக்கத்தில் பார்க்கும் போது சிறிலங்கா படைத்துறை சமாதான காலத்தேவைக்கு அப்பாற்பட்ட ரீதியில் ஓரு தீவிர யுத்த காலம் போன்று ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுகிறது.பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருந்கொகையான நவீன ஆயுதக் வாங்கிக் குவிக்கப்படுகின்றன.

 

போர் நடைபெற்ற காலங்களில் சிறிலங்கா படைத்துறையிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றி தமது பலத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வந்தனர்.ஆனால் யுத்த நிறுத்தம் அந்த வழியை முற்றாக அடைத்து விட்டது. அத்துடன் விடுதலைப்புலிகளால்; சமர்க்காலங்களில் தமக்குத் வேண்டிய ஆயுதங்களை வேண்டிய நேரம் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய தமது வலுவாற்றலையும்; பிரயோகிக்க முடிந்தது. ஆனால், யுத்த நிறுத்த ஒப்பபந்தத்தில் இவ்வகை நடைமுறைகளைக் கையாள்வது யுத்த நிறுத்த மீறலாக கருதப்படுகின்றது.

 

மேற்சொன்ன வகையில் நோக்கும்போது இருதரப்பிற்கும் இடையிலான வலுச்சமநிலை பேணல் என்ற விடயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. உண்மையில் அவ்வாறானதொரு சமநிலை பேணப்பட வேண்டுமாயின் விடுதலைப்புலிகள் பயிற்சி நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்ற வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீளளிக்கப்படுவதற்கு ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லது தமது பயிற்சி நடவடிக்கைளளுக்கான போர்க்கலன்களைப் கொள்வனவு செய்துகொள்ள வகை செய்யப்பட்டிருக்கவெண்டும். அத்துடன் சிறிலங்கா படைத்துறையினது ஆயுதக் கொள்வனவுகளை கட்டுப்படுத்துவதற்கான சரத்துக்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.ஆனால் இவ்வாறு எந்தவித ஏற்பாடுகளும் அவ்வொப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

 

இவ்வடிப்படையில் நோக்கும்போது சிறிலங்கா தன் இஷ்டத்துக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்து பலத்தைப் பெருக்கும் அதேவேளை விடுதலைப்புலிகளுக்கு அத்தகைய வாய்ப்பு போர்நிறுத்த உடன்பாட்டின் பெயரால், சமாதானத்தின் பெயரால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது..ஏற்கனவே நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தொடர்ந்தும் சமாதானத்தின் பெயரால் சர்வதேசத்தின் பெயரால் இந்த யுத்த நிறுத்தம் இவ்வாறு நீடித்துச்செல்கின்ற ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

 

இவ்வாறு வருடக் கணக்கில் நீடித்துச் செல்லும் ஒரு அர்த்தமற்ற யுத்தநிறுத்தின் மூலம் புலிகளின் படைத்துறை பலத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போர்நிறுத்தம் ,சமாதான முன்னெடுப்பு என்பனவெல்லாம் வெறும் சுத்துமாத்தே என்பதை கள ஜதார்த்தங்கள் எந்தவித ஜயப்பாடுகளுக்குமிடமின்றி நிருபணம் செயகிறன.எனவே இனியாவது சமாதானக் கனவுகளைக் கலைத்துவிட்டு,நப்பாசைகளை உதறிவிட்டு காலந்தாழ்த்தாது காரியமாற்ற தமிழினம் விரைந்து முன்வரவேண்டும்.

 

“அநீதியான சமாதானத்தைவிட நியாயத்திற்கான போர் நீதியானது”