மகிந்தவுக்கு தேர்தலில் கிடைத்த தோல்வியை விட முதலமைச்சரின் பதவிப்பிரமாணம் பெரும் வெற்றி: எஸ். ஜெயானந்தமூர்த்தி!

0
602

வடமாகாணசபைத் தேர்தலில் மகிந்த அரசுக்குக் கிடைத்த தோல்வியைவிட ஐனாதிபதி முன்னிலையிலான முதலமைச்சரின் சத்தியப்பிரமாணம் மகிந்தவுக்கு உலக அரங்கில் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் குறைவடைந்து இனவழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து ஐனாதிபதி தப்பித்துக்கொள்ள முடியும். இந்த கைங்கரியத்தைக் கூட்டமைப்பு திறம்படச் செய்துள்ளது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாமல் பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது வாக்குப் பலத்தின் மூலம் இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு முகத்தில் ஓங்கியறைந்த வடமாகாண மக்களை கூட்டமைப்பு மடையர்களாக்கி உள்ளதுடன் ஈழத்தமிழர்களது மாத்திரமின்றி ஒட்டு மொத்தமாக உலகத்தமிழினத்தின் சுயகௌரவத்தையும் மகிந்தவின் காலடியில் போட்டு மிதித்துள்ளது கூட்டமைப்பு என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறிலங்கா ஐனாதிபதி மகிந்த இராஐபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது தொடர்பாக ஊடகமொன்று அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவதன் மூலம் நன்மை அடையப்போவது இலங்கை அரசாங்கமும் அதன் ஐனாதிபதி மகிந்தவுமே தவிர நாம் அல்ல என்பதை கிழக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு போட்டியிட முன்வந்தபோதே நான் கூறியிருந்தேன். பின்பு வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் இது தமிழ் மக்களுக்கு ஒரு சாவு மணியாகவே அமையும் என மீண்டும் தெளிவாகக் கூறியிருந்தேன். இருந்தும் வடமாகாணமக்கள் இத்தேர்தலிலோ மாகாணசபையிலோ நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக முள்ளிவாக்காலில் எமது மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த மகிந்த அரசுக்கு தமது எதிர்ப்பை நேரடியாகக் காட்டுவதற்கு முடியாமல் கொதித்துப் போயிருந்தவர்கள் இதை அதற்கான களமாகப் பயன்படுத்தியிருந்தனர்.

அதற்கு கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரமும் மக்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அரசுக்கு எதிராகவும் மகிந்தவுக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு வகையான வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தனர். சர்வதேசம் இத்தேர்தலை அவதானித்துக் கொண்டிருக்கின்றது. எமது ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டும். அதன் மூலமே நம்மை நாம் ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையைப் பெறமுடியும். போர்க் குற்றவாளிக்குப் பின்னால் மக்கள் செல்லக் கூடாது. எமது வெற்றிக்குப் பின்னர் நாம் சர்வதேசத்தின் உதவியுடன் இனப்படுகொலை புரிந்த மகிந்த அரசுக்கு எதிராக சர்வதேச விசாணையைக் கோருவோம் என்றெல்லாம் மக்களுக்கு நம்பிக்கையக் கொடுத்திருந்தனர்.

அது மாத்திரமின்றி எமது தேசியத் தலைவர், தளபதிகள் மற்றும் போராளிகள் அவர்களின் சாதணைகளையும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதலைமைச்சர் வேட்பாளரும் ஏனைய வேட்பாளர்களும் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திக் கொண்டனர். தேர்தல் முடிந்த கையுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதலமைச்சராகத் தெரிவான சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சத்திரன் மற்றும் சிறிதரன், அரியநேத்திரன் ஆகியோரும் முதலமைச்சரோ ஏனைய உறுப்பினர்களோ ஐனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யமாட்டார்கள் என்றனர்.

சுரேஸ் பிறேமச்சந்திரன் மாகாணசபைச் சட்டத்தினை ஆதாரமாகக் காட்டி ஐனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு சமாதான நீதவான் முன்னியில் கூட சத்தியப்பிரமாணம் செய்யமுடியும். எனவே நாம் ஐனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யமாட்டோம் என்றார். அப்படியொரு நிலை வந்தால் நாங்கள் அதை பகிஸ்கரிப்போம் என்றார் சிறிதரன். வாக்காளர்களுக்கு மேடைகளில் அ,ஆ,இ கற்றுக் கொடுத்த அரியநேத்திரனும் ஆன்மீகப்பணி செய்த யோகேஸ்வரனும் மகிந்தவுக்குப் பின்னால் கூட்டமைப்பு கடைசிவரையும் செல்லாது என்றனர். அரசியலில் கத்துக் குட்டிகளான இவர்களுக்கு பாவம் சம்பந்தரின் இராஐதந்திரம் புரியவில்லை.

சம்பந்தர் தான் நினைத்ததைத்தான் செய்பவர். அதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி அவர் சிந்திப்பதில்லை. தானொரு சிறந்த முதிர்ச்சிபெற்ற அரசியல்வாதி, இராஐதந்திரி, ஐனநாயகவாதி எனக் காட்டவே அவர் விருப்புபவர். அது மாத்திரமின்றி மேற்குலகையும் இந்தியாவையும் திருப்திப்படுத்தினால் அவருக்குப் போதும். அவர் முதலமைச்சர் வேட்பாளரையும் தன் விருப்பப்படியே கொண்டுவந்தார். அதற்குப் பின்னால் இந்தியா இருந்தது என்பது வேறுகதை. வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் சம்பந்தர், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகிய முக்கூட்டு அணி மகிந்தவுக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியிருந்தது. நாங்கள் செய்யும் தேர்தல் பரப்புரை பற்றி நீங்கள் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. நாம் வெற்றிபெற்ற பின்னர் உங்களுக்கு ஏற்றவகையில் நாங்கள் நடந்து கொள்வோம். ஏன்பதுதான் அச்செய்தி. அதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது.

முன்பு சம்பந்தரும் சுமந்திரனும் எடுக்கும் முடிவுதான் கூட்டமைப்பின் முடிவாக இருந்தது. தற்போது விக்னேஸ்வரனும் இணைந்துள்ளார். இவர்கள் ஒருபோதும் மகிந்தவை எதிர்த்தோ அல்லது அரசாங்கத்தை எதிர்த்தோ அன்றில் சிங்கள மக்களின் விருப்புக்கு மாறாகவே எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டார்கள். தேர்தல் முடிவடைந்து கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் நான் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தேன். ‘ஐனாதிபதியின் விருப்புடன் வடமாகாணசபை நிருவாகத்தை நடத்தவே விக்னேஸ்வரன் விரும்புவார். ஏனெனில் அவர் சிங்கள அரசையோ, ஐனாதிபதி மகிந்தவையோ அன்றில் சிங்கள மக்களின் விருப்புக்கு எதிராகவோ என்றுமே செயற்படமாட்டார். ஏனெனில் அவருக்கு சிங்கள இனத்துடன் நெருங்கிய பலமான உறவு உண்டு.’ இதுதான் தற்போது நடந்துள்ளது.