மகிந்த, கோத்தாபாய போன்றவர்களைத் தண்டிக்கவில்லை என்றால் தமிழினச் சுத்திகரிப்பு நடைபெறுவதை தடுக்கவே முடியாது

0
574

mahi-crimeஇது சென்ற வருடம் நக்கீரன் இதழில் வெளியாகிய அட்டைப்படம், ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் இந்த அட்டைப் படத்தில் உள்ள தலைப்புச் செய்தி பொருத்தமாகவே உள்ளது. மகிந்த, அவரது துணைவியார், அவரது அமைச்சர்கள் என்று அனைவரும் பல நாடுகளுக்குப் பறந்துகொண்டு இருக்கிறார்கள் ஐநாவில் தங்களுக்கு எதிரான தீர்மானத்தை தோல்வியடையச் செய்வதற்கான ஆதரவினை பெறுவதற்காக.

பீரிஸ் வழமை போன்றே இனப்படுகொலைப் பங்காளிகளான காங்கிரஸின் ஆதரவினை நாடிச் சென்றிருக்கிறார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் சிறீலங்காவிற்குச் சென்று சிங்கள அரசிற்கு எதிராகக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்த பிற்பாடு அவரைத் தணிக்கும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அதனால் தற்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் சிறீலங்காவில் அன்று கூறியதனை அவரது அரசு பின்பற்றுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்தியக் காங்கிரஸ் அரசின் தலையாட்டிப் பொம்மைகளான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களும் சிறீலங்காவினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா என்ற வினாவினை எழுப்பவேண்டியுள்ளது. பல்வேறு சிக்கல்களின் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் இவர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார், அவரின் பயணத்திற்கு எதிராக கூட்டமைப்பில் உள்ள சிலர் கூட்டமைப்பை உடைப்பதற்காக இவர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். ஐரோப்பிய நாடுகளுக்கு திருமதி அனந்தி சசிதரன் பயணம் மேற்கொண்ட போது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அங்குள்ளவர்களைச் சந்தித்து எடுத்துரைத்திருந்தார். இலங்கைக்கு அவர் திரும்பிய பின்னர் இவரின் செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்த கோத்தாபாய ஆனந்தி அவர்களை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப் போவதாக எச்சரிக்கை செய்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு ஆனந்தி அவர்கள் செல்லாமைக்கு கூட்டமைப்பில் உள்ள மும்மூர்த்திகளான சம்பந்தன், விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்றவர்களும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொடூரக் காங்கிரஸ் அரசு கண்டிப்பாகச் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையை நீர்த்துப் போகும் நடவடிக்கையில் இறங்கும். மேலும் சிறீலங்காவிற்கு ஆதரவைத் தேடிக்கொடுக்கும் முயற்சிகளிலும் இந்திய காங்கிரஸ் அரசு தீவிரமாக ஈடுபடும். சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.

தமிழகத் தமிழர்கள் இப்பிரேரணை தொடர்பான தங்களின் முடிவுகளை தற்போது எடுக்க வேண்டும். மேலும் போராட்டங்களில் குதிப்பவர்களுக்குரிய காலமும் தற்போதுவந்துள்ளது. மகிந்த, கோத்தாபாய போன்றவர்களைத் தண்டிக்கவில்லை என்றால் ஈழத்தில் தமிழினச் சுத்திகரிப்பு தொடர்ந்து நடைபெறுவதனையும் தடுக்கவே முடியாது.

லிங்கேஸ்வரன் விஸ்வா அவர்களில் முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு இது.

இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானத்தை கொண்டுவரவுள்ள நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கையில் சிறீலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மீண்டும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற்றால்இ இலங்கை மீதான நிர்ப்பந்தம் அதிகரிக்கும். சர்வதேச விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்படக்கூடும்.இதகிடையே, அமெரிக்கா சென்றுள்ள அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்இ ‘அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்கஇ ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட, தனது பிரதிநிதிகளை வெவ்வேறு நாடுகளுக்கு இலங்கை அரசு அனுப்பி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றால்இ மோதலில் தொடர்புடைய விடுதலைப்புலிகள்இ இந்திய அமைதிப்படையினர், ராணுவத்தினர் என அனைவர்மீதும் விசாரணை நடத்த வேண்டும். இது இந்தியாவுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவைப் பாதிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

அவரின் இந்தக் கூற்றானது இந்தியாவை காரணம் காட்டி மேற்குலகத்தை மிரட்டும் தொனியில் அமைந்துள்ளதாக ஈழம் ஈ நியூஸ் இற்கு கருத்து தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக மக்கள் தமது வலிமையை பயன்படுத்தி சிறீலங்கா மீதான அழுத்தத்தை அதிகரிக்க இது நல்ல சந்தர்ப்பமாகும், இங்கு தான் தமிழக மக்கள் தமது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.